யாழ். பல்கலை கிளிநொச்சி வளாக பாலியல் துன்புறுத்தல் | தினகரன் வாரமஞ்சரி

யாழ். பல்கலை கிளிநொச்சி வளாக பாலியல் துன்புறுத்தல்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் முதலாம் வகுப்பு பெண் மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பணிப்புரை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்றை அமைத்துள்ளார். இக்குழுவானது இன்றும் நாளையும் பல்கலைக்கழகத்துக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்னர் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை கொழும்பிலிருந்து செல்லும் உயர் கல்வி அமைச்சின் உயர்மட்ட குழுவுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பெண் பிள்ளைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றதாகவும் அதனால் பெண் பிள்ளையொருவர் தற்கொலைக்கு முயன்றதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதிக்கும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்தே ஜனாதிபதி இச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு பணிப்புரை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்ததாவது,

ஜனாதிபதியின் அவசர அழைப்பின் பெயரில் அவரை சந்தித்தேன். இதன்போது பல்கலைகழக விவகாரத்தை நேரடியாக கையாளுமாறு எனக்கு அறிவுறுத்தினார். இதனடிப்படையில் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் கிளிநொச்சி வளாகத்திற்கும் சென்று நிலைமைகளை ஆராயவுள்ளேன்.

இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்படும். அதன் அறிக்கை செவ்வாய்க்கிழமைக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு பணிப்புரை பிறப்பித்துள்ளேன். செவ்வாயன்று கொழும்பிலிருந்து வருகை தரும் உயர் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடுவோம்.

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மட்டுமே ஆளுநர் என்ற வகையில் என்னால் மேற்கொள்ள முடியும். சட்ட ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழக சமூகத்தையும் பொலிஸாரையுமே சார்ந்துள்ளது.

எவ்வாறெனினும் இது பாரதூரமான விடயமாக இருப்பதால் நாங்கள் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுத்து தீர்வுகாணும் முயற்சிகளை விரைவுபடுத்துவோம் என்றார்.

Comments