அரச அலுவலகங்களுக்கான ஜனாதிபதியின் விஜயம் எவரையும் பயமுறுத்துவதற்கல்ல | தினகரன் வாரமஞ்சரி

அரச அலுவலகங்களுக்கான ஜனாதிபதியின் விஜயம் எவரையும் பயமுறுத்துவதற்கல்ல

மக்களுக்கு அரச அலுவலகங்கள் எவ்வாறு  சேவை செய்கின்றன? மக்கள் எதிர்நோக்கும்  சிரமங்களை எவ்வாறு சீர்செய்யலாம் எனபதை அறியவே  ஜனாதிபதி அரச அலுவலகங்களுக்கு விஜயம் செய்கின்றார். மாறாக எவரையும் பயமுறுத்த அல்லவென்கிறார்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார ஒருங்கிணைப்பாளர் சிவஸ்ரீ ராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா  அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்........

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அனுராதபுர புனித நகரில் உத்தியோகபூர்வ பதவியேற்பு விழாவின்போது சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைந்திருக்கின்றது என்று தெரிவித்திருந்தார். அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ யதார்த்தவாதி. அவர் எல்லோரினதும் ஆதரவைக் கோரியிருந்தார். தமிழ் மக்களின் வாக்குகள் குறைவடைந்தது பற்றி கூறியிருந்தார். இது அவரது ஆதங்கம். உரிமையுடன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர்களின் ஆதரவு குறைவாகவே கிடைத்தது. ஆனாலும் வாக்களித்தவர்கள், வாக்கு அளிக்காதவர்கள் என்று யாரையும் வேற்றுமைப்படுத்தப்போவதில்லை. அனைவரையும் இலங்கையராக பார்ப்பேன். அவர்களிடம் வேற்றுமை பாராட்டாது உரியவற்றை செய்வது ஜனாதிபதியாகிய தனது கடமை என்று அவர் கூறினார். இந்த எண்ணப்பாடு அவரை சிறந்த பௌத்த தர்மவான் என்பதை காட்டுகிறது. இத்தகைய உயர்பண்புடையவர் ஜனாதிபதியாகக் கிடைத்தமை இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த பெரும்பாக்கியமாகும்.

ஜனாதிபதி என்ற வகையில் பெருமை பாராது அரச அலுவலகங்கள்கள், வியாபாரத் தலங்கள் எனச் சென்று முன்னுதாரணமாக இருக்கிறாரே?

ஆம். மக்களுக்கு எவ்வாறு அரச அலுவலகங்கள் உதவுகின்றன? மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை எவ்வாறு சீர்செய்யலாம்? அதற்கான உடனடித் தீர்வு, வரிக் குறைப்பு போன்றவை மக்களை பயனடையச் செய்துள்ளன. அரிசி விலை, அரசு நிர்ணயித்த விலைகளை வியாபாரிகள் உரியவாறு அமுல்படுத்துகின்றனரா என்பதை அறியவே ஜனாதிபதியின் இவ்வாறான விஜயம் அமைகிறது. இது பயமுறுத்தல் அல்ல. அதிகாரிகளுக்கான அறிவுறுத்தலே மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கமைய ஜனாதிபதியின் உயர் நடவடிக்கையாக இது நோக்கப்படுகின்றது.

நீங்கள் புத்தசாசன, கலாசார மற்றும் மதவிவகார அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகாரத்துக்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருந்த பொழுது சுமார் ஐந்து வருடங்களாக இந்துமத விவகார இணைப்பாளராக சேவையாற்றியவன். இப்பொழுது பிரதமராக வந்ததும் மீண்டும் பொறுப்புளள பதவியினை தந்திருக்கின்றார். இது அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையும் விசுவாசமும் ஆகும். அத்துடன் சிறந்த பௌத்த தர்மத்தை கடைபிடிக்கும் உயர் பண்புகொண்ட அவர், ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களையும் நியமனம் செய்துள்ளார். சகல மதங்களையும் சமநோக்கோடு பார்க்கும் அவரது சிறந்த எண்ணம் பக்திமிக்க உள்ளத்தினையும் உயர்வுகளையும் காட்டுகின்றது.

நீங்கள் வியத்கம (அறிஞர்களின் வழியில்) நிகழ்வுகளில் கலந்துகொண்டதை பற்றி அறிந்திருக்கின்றோம். இதுபற்றித் தெரிவிக்க முடியுமா?

வியத்கம உண்மையில் வியப்படைய செய்யும் நிகழ்வுதான். இது இப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவில் உருவானது. புத்திஜீவிகளின் பங்களிப்பு நிறையவே உண்டு. உயர் கல்விக்காக வெளிநாடுகளில் கற்கும் மாணவர்கள் அளப்பரிய செலவுகளை செய்து கற்கின்றார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். இலங்கையில் சர்வதேச தரத்திலான பல்கலைக்கழக கல்வி முறைகளை ஏற்படுத்தல். வெளிநாட்டு மாணவர்களை இலங்கையில் உள்ளீர்க்க வேண்டும். இதுவும் இலங்கையின் பொருளாதாரத்தை வளர்க்கும். மேலும் நவீன முறைகளைப் பயன்படுத்தி விவசாயத் துறையினை மேம்படுத்தல், இலங்கையில் அதிக மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கு ஏற்ற கற்கை பீடங்களை உருவாக்கி மாணவர்களை மேம்படுத்தல். தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், என்பன இதில் அடங்கும்.

நீங்கள் முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் என்றவகையில் அவருடன் இருந்து கற்றது என்ன?

சிறந்த பௌத்த தர்ம கொள்கையினை கடைப்பிடிப்பவர் அவர். அதேவேளை ஏனைய மதங்களையும் மதிக்கும் உயர்குணம்கொண்டவர். அண்மையில் இந்தியா சென்றபொழுதும் கூட காசி விஸ்வநாதரையும், திருப்பதி ஏழுமலையானையும் தரிசனம் செய்து வந்தவர். மத நெறிகள் மூலம் மக்களிடையே சிறந்த பண்புகளை வளர்க்கலாம் என்ற உறுதியான மனப்பாங்கே நான் அவரிடம் இந்து மத குரு என்ற ரீதியில் கண்ட அதிசயிக்கத்தக்க குணாம்சம் மற்றும் உறுதியான தலைமைத்துவ செயற்பாடுகள் எதிர்க்கட்சி தலைவராக இருந்து இப்பொழுது பிரதமராக இருக்கிறார். இதில் அவரது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினை நான் அறியக்கூடியதாக இருந்தது.

நீங்கள் இந்துமத குரு என்ற வகையில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லனவாக இருக்க இறைவனை பிரார்த்திப்போம். புதிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை வையுங்கள். இனி அமையப் போகும் அரசில் பார்வையாளராக இல்லாமல் பங்காளரகளாக இருந்து உறுதியான அரசை அமைத்து அபிவிருத்தியினை மேம்படுத்தி, இலங்கையராக வாழ்ந்து நாமும் நல்வாழ்வு பெற்று நாடும் நலமாக இருக்க அரசுக்கு பக்கபலமாக இருப்போம் என மன உறுதிகொள்வோமாக.

Comments