கொரோனாவிலிருந்து எமது நாடு தப்பிப் பிழைத்துள்ளது | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவிலிருந்து எமது நாடு தப்பிப் பிழைத்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எமது நாடு தப்பிப் பிழைத்தமை ஊரடங்குச் சட்டத்தினால் ஈட்டப்பட்ட வெற்றி என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹண.

எமக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், “கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்பான சேவையை வழங்கியுள்ளனர். அதனாலேயே எமது நாடு ஆபத்தில் இருந்து தப்பிக் கொண்டது” என்றும் குறிப்பிட்டார்.

கேள்வி:  கொவிட்  19 சவாலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை  எவ்வாறு மேற்கொண்டீர்கள்?

பதில்:  முதன் முதலாக சீனாவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே  நோயாளிகள்  கண்டிபிடிக்கப்பட்டார்கள்.  சீனாவில் கொவிட் 19 நோயாளார்கள் அடையாளம் காணப்பட்டபோது நாம் அது குறித்து அவதானத்துடன் இருந்தோம்.  ஒவ்வொரு  திங்கட்கிழமையும் பொலிஸ் தலைமையகத்தில்  புலனாய்வுக் குழுவின் கூட்டமொன்று நடைபெறும். அக்கூட்டத்தில்  இது குறித்து நாம் அடிக்கடி உரையாடினோம். அக்கூட்டத்தில்  இந்நோய்  எமது நாட்டில் பரவினால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டுமென பொலிஸ் மாஅதிபர் எமக்கு ஆலோசனைகள் வழங்கியிருந்தார். அக்கூட்டத்தில்  ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏழு அதிகாரிகள் அடங்கிய  குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.  அதுதான்  முதல் நடவடிக்கை. அதன் பின்னர்  பொலிஸ் நிலையத்துக்குள்ளும் எவ்வாறு நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவது எனக் கலந்துரையாடினோம். பொலிஸ் நிலையத்திலுள்ள  ஒரு புத்தகத்தை குறைந்தது தமது பணிகளுக்காக 50 பேராவது தொடுவார்கள். அதனைக் குறைக்க நடவடிக்கை எடுத்தோம்.

பொலிஸாரின் சேவையை பெற்றுக் கொள்ள நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள்  வருகை தருகின்றார்கள். நாம் அவர்களை ஒன்றாக உள்ளே அனுமதிக்காமல் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கூடாரமொன்று அமைத்து சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி பொலிஸ் நிலையத்திற்குள் அனுமதித்தோம். அடுத்தாக பொது இடங்களில் சேவையாற்றும் அதிகாரிகள் குறித்து கவனம் செலுத்தினோம். அவர்கள் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசீலனை செய்யும் போது பின்பற்ற  வேண்டிய முறைகளைத் தயாரித்தோம். அவ்வாறு பொதுமக்களுடன் தொடர்ந்து பணியாற்றும் அவர்களின்  பாதுகாப்புக்கு முதலிடம்  வழங்கினோம்.  கொவிட் 19 மிக மோசமாகப் பரவினால் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் நடவடிக்கை பாதிப்படையலாம். நாம் அது பற்றியும் சிந்தித்தோம்.

கேள்வி: தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொலிஸார் எவ்வாறு நேரடியாக கலந்து கொண்டார்கள்?

பதில்:  பொலிஸார் மேற்கொண்ட பிரதான நடவடிக்கை சுயதனிமைப்படுத்தல் செயல்பாடாகும்.  அதற்காக பொலிஸார் நேரடியாக தொடர்புபட்டார்கள். தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு சிலரைக் கொண்டு சென்றாலும் அதைத் தவிர ஒரு  இலட்சத்து 25,000 இற்கு அதிகமானோரை சுகாதாரப் பிரிவினருடன்  இணைந்து  சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினோம். 

கேள்வி:  நீங்கள் குறிப்பிடும் விதத்தில் கொவிட் 19 தொற்று இலங்கைக்கு வருவதற்கு முன்னரே ஆயத்தங்களைச் செய்திருந்தீர்களா?

பதில்: ஆம்,  நாம் முன் ஆயத்தங்களைச் செய்திருந்தோம்.

நாம் கொவிட் 19 நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்ட பின்னர் அந்த நோயாளி சென்ற  இடம், அவர் பழகிய நபர்கள் எனத் தேடி வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டோம்.  இவ்வளவு விரைவில் செயற்பட்டதனாலேயே கொரோனா பரவும் அபாயத்திலிருந்து  மீண்டுள்ளோம்.

கேள்வி: அதனை உங்கள் புலனாய்வுக் குழு ஆரம்பத்திலேயே திட்டமிட்டிருந்ததா?

பதில்: இலங்கையில் முதலாவதாக கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட சுற்றுலா  வழிகாட்டி மார்ச் 11ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே அந்நடவடிக்கையை நாம் ஆரம்பித்தோம். அவருடன் தொடர்புடையவர்கள் 64 பேர் கண்டறியப்பட்டார்கள். அவர்களை தனிமைப்படுத்தினோம். அந்நடவடிக்கைகளில் அரச  புனலாய்வு சேவையினரும் பொலிஸ் விசேட செயலணியினருமே அதிகமான பங்களிப்பை வழங்கினார். அதற்கு  ஏனைய முப்படைகளின்  புலனாய்வுப் பிரிவும் பங்களிப்பை வழங்கியது.

கேள்வி:  கொவிட் 19 கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில்  சாதாரண நாட்களில் நடைபெறும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதா?

பதில்: பொலிஸாரின் வழமையான பணிகள்  மேற்கொள்ளப்பட்டன. வழமை போல் மக்கள்  முறைப்பாடுகளை செய்யவும், ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளவும் பொலிஸ் நிலையம்  வந்தார்கள்.  ஏனைய நாட்களை விட பொலிஸார் அதிகமாக மக்களுடன்  பழக நேரிட்டது.  அதே போல் இந்த நேரத்தில் வாகன விபத்துகள், குற்றச் செயல்கள் என்பன குறைந்திருந்தன. ஆனால் சட்டவிரோத மதுபான உற்பத்தி சுற்றிவளைப்பு  அதிகமாக மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத மதுபானம்  காய்ச்சுபவர்கள் சுற்றிவளைத்து  கைது செய்யப்பட்டார்கள்.

கேள்வி:  இவ் வேளையில் பொலிஸார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளிலும் பங்களிப்பு வழங்கினார்கள் அல்லவா?

பதில்: மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தினார்கள். சில பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உலர் உணவுப் பொருட்களை மட்டுமல்ல சமைத்த உணவுகளையும் விநியோகித்தார்கள். அதைத் தவிர ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகளில் சிரேஷ்ட குடிமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மருந்து வகைகளை வாங்க உதவினார்கள். மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளிலேயே அதிகமாக ஈடுபட்டார்கள்.

கேள்வி:  இவ்வளவு பாரிய பணிகளை மேற்கொள்ளும் போது அதற்கான திட்டங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன?

பதில்: இரண்டு விடயங்கள் இங்கு நடந்தன. ஒன்று பொலிஸ் தலைமையகம் மேற்கொண்ட நடவடிக்கைகள். அங்கு விசேடமாக பொலிஸ் மா அதிபர்   என்னைப் போன்றவர்களை ஊடகப் பேச்சாளராக்கி மக்களை அறிவுறுத்தச் செய்தார்.  அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை கொவிட் 19  தொடர்பாக பொலிஸ்  தலைமையகம் மூலம் பொலிஸ் அதிகாரிகளுக்கு தேவையான வசதிகளை வழங்க, நியமித்தார். அது மாத்திரமல்ல எல்லா நடவடிக்கைகளுக்கும் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு மாகாணங்களுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளைகளில் கைத்தொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொடுத்தார்.

கேள்வி:  இச்சந்தர்ப்பத்தில் நீங்கள் நாட்டில் பிரபலமான பாத்திரமாக மாறியிருந்தீர்கள். ஆனால் திடீரென சில நாட்கள்  காணாமல் போய் விட்டீர்கள். நீங்கள்  தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளீர்கள் என கூறினார்கள். அது உண்மையா?

பதில்:  தனிமைப்படுத்தலுக்கு உட்பட எதுவும் நடக்கவில்லை. அந்த சில நாட்கள் பொலிஸ் தலைமையகத்தில்   வழமையான நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருந்தேன்.  ஐந்து, ஆறு நாட்களே இருந்தேன்.  மீண்டும் எனது வழமையான பணியில் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி: அத்துடன் உங்கள் புதல்வியை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டொன்றும் சுமத்தப்பட்டதல்லவா?

பதில்: அது பொய்யான  குற்றச்சாட்டாகும். பொலிஸ் மா அதிபரினால் எனக்களிக்கப்பட்ட உத்தரவின்படியே பணியாற்ற முயற்சி செய்கிறேன். பொதுமக்கள் இந்த நோயிலிருந்து தப்ப வேண்டுமானால் இடைவெளியைப் பேணுங்கள், கூட்டம் கூடாதீர்கள், விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளாதீர்கள் போன்றனவே எங்கள் ஆலோசனைகளாகும். எனக்கு  எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டிற்குச் சென்றிருந்த எனது மகளை  இங்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவில்லை எனக் கூறியிருந்தார்கள். எனது மகள் இலங்கைக்கு வரவே இல்லை. மக்களுக்குச் சொல்வதை   நான் கடைப்பிடிப்பதில்லை என சமூகத்துக்குக் காட்டவே அவ்வாறான போலிப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார்கள்.

கேள்வி: நீங்கள் அவர்களுக்கு கூறிய விடயங்களை மக்கள் செவிமடுத்தார்கள் என நம்புகின்றீர்களா?

பதில்: நிச்சயமாக, நூற்றூக்கு நூறு வீதம் நம்புகிறேன். இந்நாட்டில் 99 சதவீதமானோர்  அவற்றைப்  பின்பற்றினார்கள். அவர்கள்  நான் கூறியவாறு செயல்பட்டார்கள்.  வாகனமொன்றை ஒதுக்கும் போது கூட அஜித் ரோஹண இவ்வாறு கூறினார் எனக் கூறினார்கள். அதேபோல் பொலிஸ் அதிகாரிகளும் அவற்றை ஏற்றுக் கொண்டார்கள்.  இணையத்தளங்களில் பல வகையான நிர்மாணங்கள்  காணப்பட்டன.  அவற்றைப் பார்க்கும்போது மக்கள்     மனதில் நான் கூறியது தெளிவாக பதிந்துள்ளது எனத் தெரிகின்றது.

கேள்வி: இராணுவ மற்றும் விமானப்படை, கடற்படையினருக்கும் கொவிட் 19 வைரஸ்  தொற்று ஏற்பட்டிருந்தாலும் பொலிஸார் வைரஸிலிருந்து  தப்பியுள்ளனர்.  ஆனால் பொதுமக்களுடன் அதிகமாக பணிகளில் ஈடுபட்டது பொலிஸார்தான். அதற்குக் காரணம் என்ன?

பதில்: ஆரம்பத்திலிருந்தே நாம் திட்டமிட்டே செயல்பட்டோம். அதற்கு ஏற்றவாறு பொலிஸ் நிலையங்களில் செயல்பட்டோம். அதற்கு பொலிஸ்  நிலையங்கள் தோறும் உருவாக்கப்பட்ட அணியினரே காரணமாகும். அவர்களுக்குத்  தனியான பாதுகாப்பு உடைகள் மற்றும் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. 

பொலிஸ் அதிகாரிகளுக்கும் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. மக்களுக்கு தாங்கள் விரும்பியவாறு பொலிஸ் நிலையத்தினுள் செல்ல  அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கேள்வி:  ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டீர்கள் அல்லவா?

பதில்: தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மக்களின் பாதுகாப்புக்காகவே போடப்பட்டது. பொலிஸார்  இதுவரை 64,000 க்கும்  அதிகமானோரை     கைது செய்துள்ளார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம்  நாம்  மக்கள் மீதுள்ள கோபத்தால் செய்யவில்லை.  தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இவ்வாறு வெற்றியடைந்ததால்தான் எமது நாடு இன்று இவ்வாறு தப்பியுள்ளது.

ஏனைய நாடுகளில் 100 பேருக்கு தொற்று ஏற்பட்டால் அதில் 14 தொடக்கம் 15 பேர் மரணமடைந்துள்ளார்கள். எமது நாட்டில் மரணவீதம் மிகவும்   குறைவாகும். 

எமது நாட்டின் இந்நிலைமைக்கு  சுகாதாரப் பிரிவு, பொலிஸார், முப்படைகள் என அனைவரினதும் அர்ப்பணிப்பும் பங்களிப்புமே காரணமாகும்.

கயான்குமார வீரசிங்க

(தமிழில்: வீ. ஆர். வயலட்)

Comments