காலத்தின் கோலம் | தினகரன் வாரமஞ்சரி

காலத்தின் கோலம்

கோடுகள் எல்லாம்
ஓவியங்களாவதில்லை
புள்ளிகள் எல்லாம்
கோலங்களாவதுமில்லை
வெள்ளைத் தாளில்
பல கோடுகள்
கோடுகள் போட்டவன்
அமைதியாய் போட்டானா
ஆலங்கோலமாக்கி விட்டானா
ஏனோ இடையில்
ஓய்ந்தது பேனை
பேனையின் வேகமோ
வெற்றுத்தாளின்
வேதனையோ
நிறைவு காணா
கோடுகள்
மற்றவற்றைப் போல்
ஓவியங்கள்
தனக்கில்லையென
ஏங்கிடவே
பச்சை குத்தினேன்
பல வர்ணங்கள்
சேர்த்தேன்
எச்சமிடாத பல
பறவைகள் வரைந்தேன்
வண்டு மொய்க்காத
காகிதப் பூவையும்
பழங்களையும் வரைந்து
அழகுக்கு அழகு சேர்க்க
அருவியையும் வரைந்து
கரும்புள்ளி வைத்து
திருஷ்டியும் கழித்தேன்
கற்றவையெல்லாம்
கலையாமல் வரைந்ததால்
வெற்றுத்தாள் முற்றுப் பெற்றது
முற்றுப் பெறாத
மனம் மட்டும்....
 
கம்பளையூர் மஞ்சுளா கிருஷ்ணசாமி
 

Comments