எதிர்ப்பது மட்டுந்தான் எதிரணியின் பொறுப்பா? | தினகரன் வாரமஞ்சரி

எதிர்ப்பது மட்டுந்தான் எதிரணியின் பொறுப்பா?

நாட்டின் நலன் கருதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டிய தலையாய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு. எதிர்க்கட்சி எனும்போது ஒரு கட்சியை மாத்திரமன்றிப் பாராளுமன்றத்தில் எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் குறிக்கும். அந்த அனைத்துக் கட்சிகளின் சார்பில்தான் எதிர்க்கட்சித் தலைவர் செயற்படுவார்; செயற்பட வேண்டும்.  

அரசாங்கத்தின் பணிகளை வலுவாக்குவதற்கும் நேர்வழியில் முன்னகர்த்துவதற்கும் எதிரணியின் காத்திரமான விமர்சனங்கள் மிக மிக இன்றியமையாதவை. அதற்கு எதிரணி வலுவானதாக இருக்க வேண்டும். எதிரணி பலவீனமாக இருப்பின், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் பங்களிப்பு செய்வதற்கு இயலாத நிலையே ஏற்படும். 

இன்றைய எதிர்க்கட்சியின் நிலவரம் மேற்குறிப்பிட்ட விடயத்திற்குச் சான்று பகர்வதாகவே இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்குத் தற்போதிருக்கும் முக்கிய பணியானது, பாராளுமன்றத்தில் ஓர் எதிர்க்கட்சி இருக்கின்றது என்பதை அடிக்கடி உறுதிசெய்துகொள்ள வேண்டிய பொறுப்பாக இருக்கும். அவர்கள் அதனைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் என்னதான் எதிர்ப்புகளை வெளியிட்டாலும், கருப்பு பட்டிகளை அணிந்தாலும், வெளிநடப்பு செய்தாலும் பாராளுமன்றத்தின் தற்போதைய நிலவரத்தின்படி எதிர்க்கட்சியினரால் எதுவுமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. இந்த நிலையில்தான் இருபதாவது திருத்தத்தைச் செய்ய விடமாட்டோம், அதைச் செய்ய விடோம், இதைச் செய்ய விடோம் என்று எதிரணியில் ஒவ்வொருவரும் சூளுரைத்துக்ெகாண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வது முற்றிலும் பொய்யானதென்று அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும். இருந்தும் மக்களைக் கவர்வதற்காகத் தாங்கள் ஏதோ மிகுந்த பலத்துடன் இருப்பதைப்போன்று பாராளுமன்றத்தில் பாசாங்கு செய்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

உண்மையில், எதிர்க்கட்சி என்றால், அரசாங்கத்தின் எல்லா செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டுக்ெகாண்டிருப்பது மட்டுந்தானா? என்ற கேள்வி நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. பாடசாலை பெற்றார் ஆசிரிய சங்கக் கூட்டத்தில் எப்போது பார்த்தாலும் ஆசிரியர்களைக் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். கணக்கு வழக்குகளைக் கேட்பதற்கு மற்றொரு கூட்டம் இருக்கும். இப்படி பாராளுமன்றத்தில் காலத்துக்குக் காலம் எதிர்க்கட்சியாகவே இருக்கும் சில கட்சி உறுப்பினர்களும் அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்குச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையெதையெல்லாமோ பேசிக்ெகாண்டிருக்கிறார்கள்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் மக்களுக்கு ஆற்றக்கூடிய விடயங்கள் ஆயிரம் உண்டு. வெறுமனே தமக்கு வழங்கப்படும் நேரத்திற்கு எதையாவது உளறிக்கொட்டும் நிலையைத்தான் இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. இடம் பொருள் ஏவல் அறிந்து தெரிந்து உரையாற்றாமல், விதண்டாவாதங்களை முன்வைத்து வீண் பிரச்சினைகளையும் உருவாக்கிக்ெகாள்கிறார்கள். அண்மைக் காலமாகப் பாராளுமன்றத்தில் இந்த நிலையைக் கூடுதலாகக் காண முடிகிறது. தாம் உதிர்க்கும் சொற்கள் மற்றவரைப் பாதிக்குமா, நாம் சொல்வதில் நியாயம் இருக்கிறதா, அப்படியே நியாயம் இருந்தாலும் சூழ்நிலையுடன் பொருந்திப் போகுமா, இந்தக் கருத்தால் மக்களுக்கு ஏதாவது நன்மை பயக்குமா? என்பதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காமல், சிலர் மேலெழுந்தவாரியாகப் பயனற்ற கதைகளைப் பேசுகிறார்கள்.

எதிர்க்கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவர்கள் குறித்த ஒரு விடயத்திற்காகத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்குத் தங்களின் தரப்பு விமர்சனங்களை முன்வைக்கலாம். அதற்காக, மக்களுக்கும் எதிராக செயற்பட வேண்டும் என்றில்லையே! எதிர்க்கட்சியின் பணியாக, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் அதேநேரம், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தலாமே!

உதாரணமாக, வருடக் கணக்காக இழுபறிப்பட்டுக்ெகாண்டிருக்கும் ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்டி, வாய்மூல விடைக்கான கேள்வியைத் தொடுக்கலாம். அல்லது தனி நபர் பிரேரணையொன்றைக் கொண்டு வரலாம். அப்படியே கொண்டு வந்தாலும், அதனைத் தங்களின் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக்ெகாள்ளும் சூழலையே தற்போது காணக்கூடியதாகவிருக்கிறது. பாராளுமன்றத்திற்குப் புதிதாக சென்றிருக்கும் உறுப்பினர்களைத் தற்போதைக்குக் குறை கூற முடியாது. நீண்டகாலம் பாராளுமன்றத்தில் அங்கத்தவராக இருப்பவர்கள், மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கேள்வி எழுப்பிய சந்தர்ப்பங்கள் மிக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத்திடம் கணக்கு கேட்கவும் விளக்கம் கேட்கவும் தங்களின் நேரத்தைச் செலவழிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அந்த நேரத்தைக் காத்திரமாகப் பயன்படுத்திக்ெகாண்ட சந்தர்ப்பங்கள் குறைவு. அதிலும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரிது என்றுதான் குறிப்பிட வேண்டும். தமிழ் உறுப்பினர்களைப் பொறுத்தவரை அரைத்த மாவையே அரைத்துக்ெகாண்டிருக்கிறார்கள் என்ற ஒரு பொதுவான குற்றச்சாட்டு எப்போதும் உண்டு.

ஆகவே, இந்தக் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கும் விதத்தில், இனிவரும் காலங்களிலாவது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குப் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்படும் நேரத்தை மக்களுக்காகப் பயன்படுத்திக்ெகாள்ள முயற்சிக்க வேண்டும்; முயற்சிப்பார்களா?

Comments