சதிகளையும் தடைகளையும் தாண்டி சாதிக்க முடியும் என்பதை பொதுத் தேர்தல் நிரூபித்துள்ளது | தினகரன் வாரமஞ்சரி

சதிகளையும் தடைகளையும் தாண்டி சாதிக்க முடியும் என்பதை பொதுத் தேர்தல் நிரூபித்துள்ளது

சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனுடன் ஒரு மனந்திறந்த உரையாடல்

மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பதவிநிலைகளிலிருந்தும் நீங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபையில் முடிவு மேற்கொள்ளபட்டுள்ளதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது இது தொடர்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

நானும் தேசிய சபையில் இருக்கின்றேன். அதில் நானும் ஒரு உறுப்பினர். எனக்கு தேசிய சபை கூடுவது தொடர்பாக எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. என்னுடைய ஆதரவாளர்களும் எத்தனையோ பேர் தேசிய சபையில் இருக்கின்றனர். அவர்களுக்கும் எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. தேசிய சபை கூட்டப்படபோகின்ற விஷயம் எங்களில் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு சார்பானவர்களையும் அவர்களுக்கு தேவையானவர்களையும் வைத்து தேசிய சபை கூட்டப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண ஒரு குழுவினால் என்னை மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீக்கிவிட முடியாது. மலையக மக்கள் முன்னணயின் உறுப்பினர்கள் என்னுடன் இல்லை என்றால் இந்த 17107பேர் யார்? சந்தா பணம் எங்கே செல்கின்றது. நிதி அறிக்கை எங்கே? உறுப்புரிமையை பழி வாங்கும் நோக்கத்தோடு நீக்குவது ஒரு கேவலமான விடயம். அதுதான் இப்போது நடந்தேறியிருக்கின்றது.

இது தொடர்பாக எனக்கு அறிவிக்கும்போது அதற்கான நடவடிக்கையை எடுப்பேன். தனியொருவரை இவர்கள் நீக்கவில்லை. மலையக மக்கள் முன்னணியின் 17107பேரை நீக்கியிருக்கின்றார்கள். மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்திற்கு எதிராக எனது போராட்டம் அமையாது நான் எந்தவிதத்திலும் கட்சியின் யாப்பை மீறவில்லை. நான் கட்சிக்கு எதிராக செயற்படவுமில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் உங்களுக்குக் கிடைத்த ஆதரவு பற்றிய உங்கள் கணிப்பீடு எவ்வாறு உள்ளது? அரசியலில் தொடர்வதற்கான சக்தியை அளித்திருக்கிறதா?

நிச்சயமாக, இளைய சமூகத்தவர்களும், குறிப்பாக பெண்களும், மலையக மக்கள் முன்னணியையும் என் தந்தையின் அரசியலை உண்மையாக நேசித்தவர்களும் மலையக அரசியலில் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதனை எனக்கு வாக்களித்ததன் மூலம் நிரூபித்துள்ளார்கள். தனிநபராக பல்வேறு சதிகளையும் தடைகளையும் தாண்டி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது தந்துள்ளது.

இத்தேர்தலில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

இந்த தேர்தலில் நான் முழுக்க முழுக்க என் தந்தை வழியில் மக்கள் சக்தியை நம்பியே களமிறங்கினேன். எந்த இடத்திலுமே எனக்கு எதிர்ப்புகள் இருக்கவில்லை. ஆனால் எனக்கு ஆதரவளித்த பலர் ஏதாவது வேறு ஸ்தாபனங்களுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகினார்கள். மக்கள் மத்தியில் செல்வதற்கு ஸ்தாபன அமைப்பு முறை அவசியமென்பதனை உணர்கிறேன்.

வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் இறங்கும் உத்தேசம் உண்டா? மண்வெட்டிச் சின்னத்தில் தானா?

மாகாண சபைத் தேர்தலில் நிச்சயமாக களமிறங்குவேன். கள நிலைமைக்கேற்ப நல்ல முடிவுகளை எடுப்பேன்.

நீங்கள் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்ட மாட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இத்தேர்தலைப் பயன்படுத்தி மண்வெட்டியினதும் தலைவர் சந்திசேகரனினதும் செல்வாக்கு இத்தனை வருடங்களின் பின்னர் எவ்வாறு இருக்கிறது என்பதை நாடிபிடித்துப் பார்க்கவே போட்டியிட்டீர்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான். இந்த பரீட்சார்த்த முயற்சி வெற்றியளித்துள்ளதா என்பதே கேள்வி

வெற்றி தோல்வியென்பது மக்களின் வரவேற்பை பொறுத்தது. எனது தந்தையினது நினைவுகளும் கொள்கைகளும் மக்கள் மத்தியில் இன்றும் நிலைத்து வாழ்வதனை அறிந்து கொண்டேன். அவரது உணர்வுபூர்வமான அரசியல் இன்று மட்டுமல்ல; என்றும் மக்கள் மனதில் வாழும் என்பதில் சந்தேகமே இல்லை. என் தந்தையின் வீரமிக்க அரசியலில் பங்கெடுத்து இன்று ஓய்வு பெற்றவர்களின் பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் எனக்கு முழுமையாக ஆதரவளித்து செயற்பட்டமை எனது தந்தையின் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். அதே போன்று இன்றைய இளைஞா்களும் எனது அரசியலையும் மாற்றத்தையும் விரும்பியதும் எனது வெற்றியாகும்.

இன்றைய பாராளுமன்றத்தில் பல்வகையான கருத்துகளையும் சித்தாந்தங்களையும் கொண்டவர்கள் உள்ளார்கள். இப்பாராளுமன்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பாராளுமன்றத்தில் எல்லா வகையான கருத்துக்களையும் பிரதிபலிக்கும் பல கட்சி சார்ந்தவர்கள் இருக்கலாம். ஆனால் நாம் என்ன சொல்கிறோம் எமது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதில்தான் எமது அடையாளம் பதியப்படும். மலையக சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காகவும் முழு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்காவும் என் தந்தை தனிநபராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய போதும் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தடம் மாறவில்லை. ஒரு களத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதுதான் எமது வலிமை.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அறுவரும் இ.தொ.கா.வில் இருவருமாக எட்டு மலையகப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ளனர். இவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக, பிரச்சினைகளாக நீங்கள் எவற்றை எல்லாம் பட்டியலிடுவீர்கள்?

எத்தனை பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என்பது எமது எண்ணிக்கையாக இருக்கலாம். இவர்களின் செயற்பாடு எமது சமூக உரிமைகளை எவ்வாறு வெற்றிகொள்ளப் போகிறது என்பதில்தான் இதன் உண்மையான அர்த்தம் அடங்கியுள்ளது. ஐந்து வருடகாலத்தை வெறுமனே கழிப்பதிலும், அரச நிதி ஒதுக்கீட்டில் ஒரு சில அபிவிருத்தி வேலைகளை செய்வதும், எனது சமூக உயர்வுக்கு பயனற்ற விடயங்களை பேசுவதிலும் காலத்தை கழிக்காமல் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பல தசாப்தங்கள் பின்னடைந்த நிலையில் காணப்படும் எம் மக்களுக்கு கெளரவமான சமூக அந்தஸ்துக்காக இவர்கள் செயற்பட வேண்டும்.

மறைந்த ஆறுமுகன் தொண்டமான் பற்றிய உங்கள் அனுபவங்கள் பற்றி?

எனது தந்தையுடன் புரிந்துணர்வுடனான உறவினை கொண்டிருந்தார். இ.தொ.கா என்ற மிகப்பெரும் ஸ்தாபனத்தை உயிரோட்டமாக வைத்திருந்த ஆளுமைமிக்கவர். கட்சி ரீதியிலான இடைவெளி இருந்த போதும் கூட சமூகம் என்ற அடிப்படையில் என் தந்தையும் அவரும் பயனுள்ள விடயங்களை உண்மையாகவே ஆராய்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டமை இருவரிடமுமே இருந்த உயரிய குணமாகும்.

ஜீவன் தொண்டமான் - உங்கள் அளவீடுகள் எவ்வாறு உள்ளன?

பேசுவதை குறைத்து செயலில் காட்டுவேன் என்று அவரே அடிக்கடி கூறுகின்றார். இ.தொ.கா என்ற ஸ்தாபனத்தின் செயலாளராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தாலும் கூட இவரது செயற்பாடுகள் முழு மலையகம் சார்ந்ததாக அமையும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஆயிரம் ரூபா தின வேதனம் கிடைக்குமா? அடிபட்டுப் போய்விடுமா?

இது கம்பனிகளும்,கூட்டு ஒப்பந்த கட்சிகளும் மற்றும் அரசாங்கமும் ஒன்றுகூடி முடிவெடுக்கப்பட வேண்டிய விடயம். ஆயிரம் ரூபாய் என்ற அடையாளத்துக்குள் அடக்கப்படாமல் தொழிலாளர்களின் வாழ்க்கை செலவுக்கேற்ற கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதுவே எனது நிலைபாடு.

இந்தத் தோட்டத் தொழிலுக்கு அப்பால் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்றால் அதுபற்றிய உங்கள் பார்வையை பகிர்ந்து கொள்வீர்களா?

இப்போதும் எமது இளைஞர் யுவதிகள் தோட்டத் தொழிலைக் கைவிட்டு விட்டு இடம்பெயர்ந்து செல்வதை காண்கிறோம்.பெருந்தோட்டத்துறையில் காணப்படும் நெருக்கடிகள் குறைபாடுகள் நேர்மையாக இனம் காணப்பட்டு தொழிலாளர்கள் நம்பிக்கை பெறும் வகையில் மாற்றப்படாவிட்டால் எம்மவர்கள் வேறு தொழில் நாட்டம் கொள்வதை தவிர்க்க முடியாது.

மிளகு, கிராம்பு, கருவா போன்ற உப உணவு உற்பத்திகளை தரம் சார்ந்த பொருட்களாக உயர்த்த வேண்டும் என அரசு நினைக்கிறது. இது ஒரு வாய்ப்பு. காணி உரிமையற்ற தொழிலாளர்கள் இதை எப்படி பயன்படுத்தி முன்னேறலாம் எனக் கருதுகிறீர்கள்?

எம் மக்களை காணி உரிமையுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் எனது தந்தை 7பேர்ச்சஸ் காணியுடன் வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காணி உரிமையற்ற நிலையில் எமது மக்களின் எல்லா தொழிலும் கூலித் தொழிலாகவே அமையும். உற்பத்திசெய்யப்படும் பயிர்கள் எவ்வளவு இலாபம் தருகின்றன என்பதைப் போன்றே அதனை உற்பத்தி செய்பவர்களின் நலன்களும் கவனிக்கப்பட வேண்டும். அல்லது கோப்பி தேயிலை பயிர்ச்செய்கை போலவே இதுவும் அமைந்து விடும். மண் உரிமையே எம் மக்களின் சொத்துரிமையுமாகும்.

இப்பாராளுமன்றத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இல்லை. அதை ஒரு வெற்றிடமாகப் பார்க்கி்றீர்களா? மாகாண சபைக்கு அவர் சுயேட்சையாகவாவது போட்டியிடலாம் எனக் கருதுகிறீர்களா? அவரைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

அவர் பாராளுமன்ற தேர்தலுக்கு நியமிக்கப்படாமை மற்றும் தேசியபட்டியல் கிடைக்காமை பற்றி பல்வேறு கருத்துக்களை அவரும் அவர் சார்ந்த ஸ்தாபனமும் பதிவிட்டுள்ளன.

மாகாண சபையில் போட்டியிடுவது பற்றிய அவரது நிலைபாடு இதுவரை தெரியவில்லை. தனது செயற்பாடு எப்படி அமைய வேண்டும் என்பதனை அவர் தீர்மானிப்பார் என எண்ணுகிறேன்.

மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உங்களுடைய கருத்து எவ்வாறானது?

யாராயிருந்தாலும் மாநாட்டின் மூலம் தான் கட்சியின் உயரிய பதவிகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது யாப்பின் அடிப்படையாகும். செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம், பொருளாளர் என மூன்று முக்கிய பதவிகளும் ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கட்சியில் உறுப்பினர்கள் இல்லாமல் வீழ்ச்சி கண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கட்சியின் நிர்வாகம் இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது ஆச்சரியத்தை தரவில்லை என்றாலும் மிக வேதனையை தருகின்றது.

மலையக மக்கள் முன்னணியின் அங்கத்தவர்களிடம் அறவிடப்படும் சந்தா பணத்தை நிறுத்த போவதாக கூறியிருந்தீர்களே இது தொடர்பாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எமது தோட்டத் தொழிலாளர்கள் வெயிலிலும் கடும் குளிரிலும் மழை காலங்களிலும் உழைக்கிறார்கள். அவ்வாறு உழைத்து தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கும் பணமே சந்தா. அவ்வாறான பணத்தை கொள்ளை அடிப்பதும், மக்களுக்கான சேவைகளை செய்யாமல் சாட்டுகள் சொல்வதும், காரியாலங்கள் வேலை நாட்களில் கூட இயங்காமல் மூடிக் கிடப்பதும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் செய்யும் ஒப்பந்த மீறலாகும். ஆகவே தொழிலாளர்கள் என் தந்தைக்காக தொழிற்சங்க உறுப்பினர்களாக இருப்போர் இனியும் ஏமாற்ற பட கூடாது என நினைக்கிறேன் அதனால்தான் இந்தத் தீர்மானம்.

உரையாடியவர்கள்
தலவாக்கலை
பி. கேதீஸ்

Comments