காணி அபகரிப்பை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்! | தினகரன் வாரமஞ்சரி

காணி அபகரிப்பை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

தமிழ் மக்களின்  பிரச்சினைகளை  கவனத்திலெடுக்காமல் கடந்த காலங்களில் ஒளிந்து ஓடியவர்கள்தான் தன் மீது  குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகச் சொல்கிறார் பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  சதாசிவம் வியாழேந்திரன். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் அவ்வாறானவர்களால் மக்களுக்கு அபிவிருத்தியையோ, அரசியல் தீர்வையோ பெற்றுக் கொடுக்க முடியாது  என்கிறார் அவர். அவரது செவ்வியின் முழு விபரம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய காணி அபகரிப்பு இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது?

மட்டக்களப்பு மாவட்டத்தின் எறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதவனை, மைலத்தமடு ஆகிய பிரதேசங்களில் சிலர் அத்துமீறி காணி அபகரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது புதிதான விடயமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெறுகின்ற ஒரு விடயம்தான் இது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை எடுக்கவேண்டியிருக்கிறது மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் யாராவது, அத்துமீறி வருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதவிடயம். இவ்வாறு யாரும் காணி அபகரிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இவ்வாறு கடந்த காலத்தில் காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றபோது அவை தடுத்து நிறுத்தப்பட்டன. அதுபோல் இதனையும் தடுத்து நிறுத்துவதற்காக நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்புத் தொடர்பில், நானும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்  குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனும், அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கலந்துரையாடியுள்ளோம். மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துடன் நான் நேரடியாக பேசினேன், அவ்விடத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் அவரை தொலைபேசியில் பேசவைத்து விடயத்தை விளக்கினோம். உரிய இடத்தை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர். இது  குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளோம்.  அத்துமீறி காணி அபகரிப்பு செய்பவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். இது தொடர்பில்  மக்களுக்குப் பிரச்சினைகள் வருகின்றபோது நாம் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம்.

அத்துமீறிய குடியேற்றத்தால் தமிழ் மக்களின் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்களே?

மைலத்தமடு, மாதவனை ஆகிய பிரதேசங்கள் எமது கால்நடைப் பண்ணையாளர்களால்  மேச்சல்தரைகளாக காலா காலமாக பயன்படுத்தப்பட்டு வருபவை. காணி அபகரிப்புக்களில் ஈடுபடுபவர்கள்  அங்குள்ள பண்ணையாளர்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, கால்நடைகளைச் சுடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. இது குறித்து நாம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றோம்

2015 ஆம் ஆண்டு முதல் நான் அரசியலில் இருக்கின்றேன். அப்போதிருந்து மக்களுக்குப் பிரச்சினைகள் வரும்போதெல்லாம் களத்தில் நின்று போராடியிருக்கின்றோம். அப்போது வாளாவிருந்தவர்கள் தான்  தற்போது எங்கள் மீது சில விசமத்தனமான , விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. தங்களுடைய வங்குரோத்து அரசியலை நடாத்துகின்றவர்கள்தான் இவ்வாறு செயற்படுகின்றார்கள்.

கடந்த நல்லாட்சியில் இடம்பெற்ற கம்பரெலியத் திட்டத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தற்போது நாங்கள் ஆளும் கட்சியில் இருக்கின்றோம் எமது நோக்கம் அரசாங்கத்தை உரியமுறையில் அணுகி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே. கடந்த காலத்தில் கம்பரெலிய யுத்தம் ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் போன்றவர்கள் செய்தார்கள் அந்த யுத்தத்தைச் செய்தும் மக்கள் அவரை நிராகரித்துள்ளார்கள். மற்றவர்களின் சட்டியில் என்ன வேகுது என்று பார்க்காமல், தனது சட்டியில் என்ன கருகுகிறது என்றுதான் அவர் பார்க்க வேண்டும்.  என்று பாருங்கள், அவ்வாறு செய்தால் மக்கள் அவரை எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்வர்கள். 

நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றோம்  மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டுதான் வருகின்றோம். இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

காணிப்பிரச்சினை தொடர்பில் நீக்கள் குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றார்களே?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரே குடும்பமாக இருந்தபோதும்கூட இந்த காணிப்பிரச்சினை இருக்கத்தானே செய்தது. அப்போதே இந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கலாம். அப்போது அவர்கள் எங்கிருந்தார்கள். அப்போது அவர்கள் கோமாநிலையிலா அல்லது செவ்வாய் கிரகத்திலா இருந்தார்கள். வெறுமனே வாயை மூடிக் கொண்டு இருந்துவிட்டு தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எங்கள்மீது விசமத்தனமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்கள். எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

20 வது திருத்தச் சட்டம் தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

மத்திய வங்கிக் கொள்ளை தொடர்பில்  நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் குரல் கொடுத்து வந்தவன் நான். இந்நிலையில் அரசியலமைப்பின் 18ஆவது  சீர்த்திருத்தத்தில் உள்ள விடயங்கள் 20 திருத்தத்திலும்  உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அதிலும் சில மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றது. 

அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பதால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராமுகமாக இருப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றார்களே?

கடந்த காலங்களில் தமிழ் மக்களின்  பிரச்சினை களை  கவனத்திலெடுக்காமல் ஒளிந்து கொண்டிருந்தவர்கள்தான் என்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். அவ்வாறானவர்களால் மக்களுக்கு அபிவிருத்தியையோ, அரசியல் தீர்வையோ பெற்றுக் கொடுக்க முடியாது. அவர்கள்தான் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாத்தவர்கள். நாங்கள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அதற்குரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம். இது தெரியாதவர்கள்தான் நான் ஒன்றும் செய்யவில்லை என்கிறார்கள்.

நீங்கள் முன்னர் வகித்த தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில்சார் இராஜாங்க அமைச்சு மாற்றப்பட்டு தற்போது புதிய இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதே இது தொடர்பில் மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

நான் மாத்திரமல்ல என்னோடு சேர்ந்த 5 இராஜாங்க அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய இராஜாங்க அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இது தெளிவாக  வர்த்தமானியில்  பிரசுரிக்கப்பட்டுள்ளது. தபால் சேவைகள் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சை நான் மிகவும் சிறப்பாக முன்னெடுத்திருந்தேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றம் சென்றவன் நான்.  அதற்கு ஏற்றாற்போல்  அமைச்சு  கிராமிய மட்டங்களில் வேலை செய்யக்கூடிய பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறுபயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது  இதனை விளங்கிக் கொள்ளாத சிலர்தான் நான் அமைச்சை மாற்றிக் கொண்டது தொடர்பில் விமர்சிக்கின்றார்கள்.

உங்களது அமைச்சின் மூலம் கிழக்கு மகாணத்தில் வறுமையைக் குறைக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு துறைசார்ந்தும் நாங்கள் வேலை செய்யவேண்டியுள்ளது. விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி, சிறுகைத்தொழில் உள்ளிட்ட ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்களையயும் இணைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு துறைசார்ந்த திட்டங்களை வரையவுள்ளோம். பின்னர் இவ்வாறான திட்டங்களை பிரதமர், ஜனாதிபதி, ஆகியோருக்குச் சமர்ப்பித்து, அவர்களிடமிருந்து நிதி யைப்  பெற்று மக்களுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். தற்போது அதற்குரிய திட்டமிடல்களை நாங்கள் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் நன்மை கருதி ஒருமித்து செயற்படுவதற்கு அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அழைப்பு விடுத்திருந்தது அவ்வாறெனில் உங்களது நிலைப்பாடு என்னவாக அமையும்?

நல்லதொரு கேள்வி, ஒவ்வொருவருக்கும், கட்சி, கொள்கை, கோட்பாடு இருக்கும், ஆனால். மாவட்ட மக்களின் நன்மை கருதி அனைவரும் ஒருமித்து வேலை செய்வதற்கு  முன்வந்தால் அதனை முதலாவதாக வரவேற்பவன் நான்தான் அதற்கு பூரண ஆதரவை வழங்குவேன். இந்த இடத்தில் நானும் அன்பான அழைப்பை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கின்றேன், மாவட்ட மக்களின் நன்மை கருத்தி மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு  ஒன்றாக செயற்பட  அழைப்பு விடுக்கின்றேன.  அதனைவிடுத்து எதிர்  கருத்துக்கள் தெவிவிப்பது ஆரோக்கியமானதல்ல.

தமிழர் ஒருவருக்கு ஊடகத்துறை சார்ந்த அமைச்சு கிடைத்திருந்ததையிட்டு ஊடகவியலாளர்கள் பெருமிதம் கொண்டிருந்தார்கள், தற்போது ஏற்றிருக்கும் அமைச்சுடன் ஏன் ஊடகத்துறையையும் பெற்றிருக்கலாம் அல்லவா?

ஒரு அமைச்சைப் பொறுப்பேற்று நடாத்துவது என்பது சாதாரண விடயமல்ல.  தற்போதைய எனது அமைச்சும் ஏற்கனவே இருந்த தாபால் திணைக்களத்தின் கட்டடத்தில்தான் அமைந்துள்ளது. ஊடகவியாலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் நான்கறிவேன். ஊடகத்துறை சார்ந்த  அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல என்னிடம் கூறியிருக்கின்றார். இந்த அமைச்சிலிருந்தாலும் ஊடகத்துறைசார்ந்து அனைத்து செயற்பாடுகளையும் நான் முன்னெடுப்பேன்.

சஜித் பிரேமதாஸவினால் கொண்டுவரப்பட்ட பெரும்பாலான  வீட்டுத்திட்டங்கள் கட்டி முடிக்கப்படாமலேயே  உள்ளதே?

வெவ்வேறு இடங்களிலிருந்து மக்களைக் கொணர்ந்து ஒரு இடத்தில் வீடுகளை அரை குறையாக கட்டிக் கொடுத்துள்ளனர் இதனால் பல சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக  அரச உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்களுக்கு அவரவர் காணிகளிலேயேதான் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.

ஆனால் சஜித் பிரேமதாஸ  கொண்டு வந்த வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளும் 250000 ரூபாவுக்கு மேல் பணம் செலவு செய்ததுதான் கட்டியுள்ளார்கள். அதுவும் முற்றாக பூரணப்படுத்தப்படவில்லை.

இன்னும் அரைகுறையாகவே உள்ளது. அதனையும் எமது அரசாங்கம்தான் பொறுப்போற்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை வந்துள்ளது.  எதிர்வரும் காலத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தற்போது எமது அரசாங்கம் வீடற்றோருக்கு அவரவர் காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுத்து வருகின்றது.

வ. சக்திவேல்

Comments