சம்பளச் சபையை மீண்டும் ஏற்படுத்துவது இலகுவானதல்ல | தினகரன் வாரமஞ்சரி

சம்பளச் சபையை மீண்டும் ஏற்படுத்துவது இலகுவானதல்ல

- ஏற்படுத்தினாலும் அது கம்பனிகளுக்கு சாதகமாக அமையும்
- தொழிற்சங்கப் பிரமுகரும் ட்ரஸ்டின் முன்னாள்  தலைவருமான வி.புத்திரசிகாமணி பேசுகிறார்

'இலங்கையில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக கடந்த 1889 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 'இந்திய தோட்ட தொழிலாளர் கட்டளை சட்டம்' பற்றி தெரியாதவர்களே இன்று மலையக தொழிற்சங்கத் தலைவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது தொழிலாளர்களின் கட்டளை சட்டத்தை தெரியாதவர்கள்  கூட்டு ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல தீர்வு பெற்றுக்கொடுக்க முடியவில்லை'

கேள்வி:- சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. இவ்வளவு காலம் இது எவ்வாறு கையாளப்பட்டது என்பது பற்றி உங்களுக்கு தெரியும். கடந்த 20 ஆண்டுகளில் 400 ரூபாதான் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? 

பதில்:- 1889ம் ஆண்டில் இருந்து  இந்திய தோட்டத் தொழிலாளர் கட்டளை சட்டம்  என்ற ஒரு சட்டம் அமுலில் உள்ளது.  அந்த சட்டத்தின்  பிரகாரமே சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 1927 ஆம் ஆண்டு இந்திய தொழிலாளரின் கட்டளைச் சட்டத்தின்படியே வேதனம் வழங்கப்பட்டது. கடந்த 1941 ஆம் ஆண்டு சம்பள நிர்ணைய சபையின் துணை சட்டமான 1950 ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி மற்றும் தேயிலை வளர்ப்பிற்கான (Tea Growing And Manufacturing Trade) சட்டத்தின்படியும்  சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. 
இறுதியாக 1992 ஆம் ஆண்டு மேற்படி சம்பளம் நிர்ணயம் சபை கூடிய பொழுது வாழ்க்கை செலவு புள்ளிக்கேற்ப 4 இல் இருந்து 6ஆக உயர்த்துவதற்கு நான் செயல்பட்டேன். அன்று சம்பள நிர்ணைய சபை உறுப்பினர்களான மறைந்த தலைவர் ஏ. அஸிஸ், எஸ். நடேசன், எம். சுப்பையா உட்பட பலரும் என்னைப் பாராட்டினார்கள். இதற்கு அரசாங்க உறுப்பினரான மறைந்த பேராசிரியர் ரட்ணகார   உறுதுணையாக இருந்தார். 

எனினும் இதை அன்று நிறைவேற்றுவதற்கு பதிலாக கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பளம் பெறுவது எமக்கு நன்மை பயக்குமென மறைந்த தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் கருதியதால்  சம்பள நிர்ணய சபை முடிவை உறைய வைத்து (Freeze) கூட்டு ஒப்பந்தத்திற்கு சென்றுவிட்டார்கள்.    இப்பொழுது சம்பள நிர்ணய சபையை  மீண்டும் கூட்டுவது என்பது மிக சுலபமான காரியமல்ல.  இதற்கென தொழிற்சங்க பிரதிநிதிகளையும் முதலாளிமார் சங்க பிரதிநிதிகளையும்    அரசாங்க பிரதிநிதிகளையும் நியமிக்க வேண்டும். அதற்கென கால எல்லையை நிர்ணயிக்க வேண்டும். 

சம்பள நிர்ணய சபை கட்டளைச் சட்டத்தின்படி தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இரண்டு வாக்குகளும் முதலாளிமார் சங்க பிரதிநிதிகளுக்கு இரண்டு   வாக்குகளும் அரசாங்க பிரதிநிதிக்கு ஒரு வாக்கும் கிடைக்கப்பெறும். இதில் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் முதலாளிமார் சங்க பிரதிநிதிகளும் சரிசமமாக இவ்விரண்டு வாக்குகளையும் பிரயோகிப்பார்கள். இரு தரப்பினரும் ஒத்துப்போகாவிட்டால் அரசாங்க பிரதிநிதியின் ஒரு வாக்கு பயன்படுத்தப்பட்டு இரு தரப்பினரதும் வெற்றி தோல்வி  தீர்மானிக்கப்படும். 
எனவே இப்பிரச்சினை  கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்படுமானால்   அதுவே சிறந்த வழியாக நான் கருதுகின்றேன். எனினும் அரசாங்க தரப்பு தொழிலாளர்கள் பக்கம் ஆதரவாக இருப்பதால் இதில் தொழிற்சங்க பிரதிநிதிகள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கின்றது.  

கேள்வி:- துரைமார் சங்க தலைவர் பாத்தியா புளுமுல்ல சமர்ப்பித்திருக்கும் தீர்வு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் சங்கங்கள் அங்கீகரிக்காவிட்டால் அது கூட்டு ஒப்பந்தத்தின் முறிவுக்கு வழிவகுக்கலாம் என்றும் கூறியுள்ளதோடு சம்பள நிர்ணைய சபைக்குதான் செல்ல வேண்டியிருக்கும் என்று ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். அதற்கு உங்களது கருத்து என்ன? 

பதில்:- முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் பாத்தியா புளுமுல்ல சம்பள நிர்ணய சபைக்கு செல்வது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதைத்தான்  சுட்டிக்காட்டுகின்றார். ஏனெனில் சம்பள நிர்ணய சபையில் அவர்கள் சம்பள உயர்வுக்கு எதிராக வாக்களித்துவிட்டு தங்களது நியாயத்தை பின்னர் மேல் நீதி மன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ சென்று வழக்காட முயற்சிக்கலாம். இந்த வழக்கு எவ்வளவு காலம் செல்லும் என்று கூறமுடியாது. எனவே விஷயத்தை இழுத்தடிக்க முடியும்.

அதேவேளை சம்பள நிர்ணய சபை கட்டளைச் சட்டம் இவ்வாறான நிலையில் எவ்வாறு செயல்படும் என்பதை  விரிவாகக் கூறவில்லை. அதனால் உயர்  நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வழங்க வேண்டும். அந்த தீர்ப்பு எமக்கு எதிராக இருந்தால் அதன் விளைவு மிகவும் பாரதூரமாக இருக்கும்.  தொழிலாளர்களை பாதிக்கும். 

கேள்வி:- மலையக அரசியல் சிதறிப்போய்விடக் கூடும் என்றும்   தலைமை தாங்க  தலைவர் இல்லாத ஒரு சூழல் எதிர்காலத்தில் மலையக அரசியல் வீரியத்தை மழுங்கடிக்கும் என்றும் ஒரு அபிப்பிராயம் உள்ளது. அதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?  

பதில்:- மலையக அரசியல்வாதிகள் மத்தியில் கிஞ்சித்தேனும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவதற்கான வாய்ப்பு இன்றைய தலைவர்கள் மத்தியில் இல்லை.   அத்தோடு மலையகத்தின் நீண்டகால திட்டங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் புரிந்து கொள்வதற்கோ அதை அடைவதற்கான  பாதை குறித்து  சிந்திக்கவும் அதற்கான   முன் ஏற்பாடுகளை   செய்வதற்கும்  நம்மிடம் தலைவர்கள்  இல்லை. 

இவற்றை நிவர்த்தி செய்வதென்றால் மலையக புத்திஜீவிகளிடமும் அனுபவசாலிகளிடமும் இளைஞர் சமூதாயத்திடமும் மலையக அரசியல்வாதிகள் கருத்துக்களை கேட்டறிந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏதோ புனைவுகளின் மூலம் கிடைக்கின்ற வாக்கு வங்கிகளை வைத்துக்கொண்டு தமக்குதான் எல்லாமே தெரியும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும்வரை மலையகத்தில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பில்லை. உண்மையான தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்ய வாய்ப்பில்லை. கோடிகோடியாக பணம் கொட்டி வாக்கு வேட்டையாடுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. பொருத்திருப்போம். காலம் பதில் சொல்லும். 

கேள்வி:- கம்பனிகள் ஒருவகையான வெளிவாரி முறைமையை (Out Growers model அல்லது Block system) முன்வைக்கின்றனர். சங்கங்கள் இந்த முறைமையை பரிசீலீத்து திருத்தங்களுடன் அரச ஆதரவோடு ஏற்கலாம் அல்லவா! 

பதில்:- Out Growers Model அல்லது Block system முறைமை ஏற்கனவே நடமுறையில் இருக்கின்றது.

அவற்றை தொழிற்சங்கவாதிகள் நன்றாக பரிசீலித்து அம்முறைமையை தொழிலாளர்களுக்கு சாதகமான முறையில் எவ்வாறு செயல்படுத்துவது என அறிந்து செயல்படுத்துவது சிறப்பாக இருக்கும்.   எதையும் புரிந்துகொள்ளாமல் நிராகரிப்பது பெருந்தோட்டத்துறைக்கு நல்லதல்ல. 

இதேவேளை தோட்டக் கம்பனிகள் இதை அவர்களுடைய மொழியில்  இலாப பங்கீடு  (Profit sharing) என்றே அழைக்கின்றனர். 

கேள்வி:- பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியம் எவ்வாறு இயங்குகின்றது? 

பதில்:- பெருந்தோட்டத் துறையை அரசாங்கம் பொறுப்பேற்று பின்னர் அதை தனியார் மயப்படுத்திய பொழுது தொழிலாளர்களுடைய சேம நலன்களை கவனிப்பதற்காக ஒரு செயல்முறை அவசியமாக இருந்தது.   முதலில் பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் நலன்புரி அமைப்பு ( PHWST) என்ற ஒரு அமைப்பு இருந்தது. பின்னர் டிரஸ்ட் (PHDT) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் நிர்வாக செலவுகளை கம்னிகள் வழங்கும் நிதி (LEBY) மூலமாகவே மேற்கொள்ள வேண்டும். 

இந்த நலன்புரி சேவைக்காக ஆரம்பத்தில் நோர்வே மற்றும் டச்சு அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட்டது. அதன் மூலமே அதிகமான வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. பின்னர் அபிவிருத்தி நலன்புரிவேலைகளுக்காக  தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் பெருந்தோட்ட புதிய கிராமங்கள் அமைச்சின் மூலம் நிதி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 

தோட்ட கம்பனிகள் நிர்வாக செலவை பொறுப்பேற்றதன் காரணமாக  ட்ரஸ்டின்  பிராந்திய இயக்குநர்களாகவும் தலைமை இயக்குநர்களாகவும் தோட்ட முகாமையாளர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்கள்  நியமிக்கப்படுகின்றார்கள்.  அதன் தலைவராக  ஒரு தொழிற்சங்க அனுபவமிக்க ஒருவரை நியமித்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற  முன்வர வேண்டும். 

ஆனால் புதிய அமைச்சர், அந்த தலைவர் பதவிக்கு ஒரு முன்னாள் தோட்ட முகாமையாளரை நியமித்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இதனை   நான் முன்னாள் ட்ரஸ்ட் தலைவர் என்ற முறையில் கூறுகின்றேன். அங்கு  தோட்ட முகாமையாளராக இருந்த ஒருவரை ஏதோ எமது மக்களுக்கு அவர்கள் பாவப்பட்டு சேவை செய்வதாக நடந்துகொள்வது மாதிரித்தான்  எனக்குத் தெரிகிறது.  இதுகுறித்து நான் பலமுறை அவர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றேன்.    அதன் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு நான் முயற்சி செய்தபோதிலும் அது கைகூடவில்லை. ஆனாலும் இந்த நிறுவனத்தின் மூலம் எமது மக்களுக்கு அதிக சேவையாற்ற முடியும். 

கேள்வி:- இந்த பேச்சுவார்த்தை முறிவடைந்தால் அரசாங்கம் இந்த கம்பனிகளை பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதன் சாதக பாதக தன்மையை கூறுவீர்களா? 

பதில்:- தோட்டக் கம்பனிகளை அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்கக்கூடிய எந்த வாய்ப்பும் இல்லை. அரசாங்கம் ஏற்கனவே தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறித்தான் தோட்டங்களை தனியார் மயப்படுத்தியது. அதேவேளை தற்பொழுது அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB)   அரச பெருந்தோட்ட யாக்கம் (SPC) எல்கடுவ பிளான்டேஷன் ஆகிய நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பது மட்டுமின்றி ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்வற்றை கூட செலுத்தாமல் இருக்கின்றன. 

அதேவேளை இந்த தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்குமானால் கம்பனிகளுக்கு பெரிய நட்டஈடு வழங்க வேண்டியிருக்கும். எனவே அரசாங்கம் இந்த தோட்டங்களை மீண்டும் பொறுப்பேற்கும் என்பதில் நடைமுறை சாத்தியம் கிடையாது.

உரையாடியவர்:
நூரளை சுப்பிரமணியம் 

Comments