பிரச்சினைகள் தெருக்களில் அல்ல பாராளுமன்றிலேயே தீர்க்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பிரச்சினைகள் தெருக்களில் அல்ல பாராளுமன்றிலேயே தீர்க்க வேண்டும்

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போல நாடு வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியிருக்கும்போது பாதுகாப்பு பிரச்சினையையும் உருவாக்கக் கூடிய வகையில் ஒரு வேண்டாத சம்பவம் மிரிஹானையில் நடந்தேறியிருக்கிறது.  

இச் சம்பவத்துடன் இன்று 'மக்கள் பேரணி' ஒன்றுக்கு அழைப்பு விடப்பட்டிருப்பதும் நிலைமைகளை மோசமாக்கவும், இன்றைய நெருக்கடி நிலையை வேறு திசைகளில் உக்கிரமாகப் பணயிக்கவுமே உதவும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

மக்களின் அடிப்படைத் தேவைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் அந்நிய செலாவணி கையிருப்பில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதும் மக்கள் அறியாததல்ல. நாடுகள் இத்தகைய கடுமையான சூழல்களுக்கு உட்பட்டிருந்ததை வரலாறு சொல்லும்.  

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பல நாடுகள் பேரழிவுகளை சந்தித்திருந்தன. பொருளாதார மீட்சிக்கான சகல தளங்களையும் அவை இழந்திருந்தன. எனினும் விடாமுயற்சி, திட்டமிடல், வெளிநாட்டு உதவிகளுடன் அவை எதிர்பார்க்கப்பட்ட காலத்திலும் பார்க்க விரைவிலேயே எழுந்து நின்றன. நீடித்து நிற்கவும் முடிந்தது.  

எனவே இலங்கையாலும், சகல வளங்களும் இருப்பதால், விரைவிலேயே மீண்டெழ முடியும். இதற்கு முன்னரும் இந்நாடு வீழ்ச்சிகளை சந்தித்துள்ளது. ஆனால் மீண்டுவர முடிந்துள்ளது. இன்றைய சூழல் அவற்றைவிட மோசம் என்பது உண்மையானாலும் மக்களும் அரசியல்வாதிகளும் தமது வரலாற்றுத் தவறுகளைத் திருத்திக் கொண்டு இலங்கையை மீண்டும் வளமுள்ள நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்வதே இன்று நாம் செய்ய வேண்டிய காரியமே தவிர இருப்பதை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதல்ல. 

இவ்வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் ஆலோசனைகள் வரவேற்கத்தக்கவை. அவர் பிரச்சினைகளை தெருவுக்குக் கொண்டுவராமல் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்பதை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருகிறார். ரணில் விக்கிரமசிங்க கடந்த பொதுத் தேர்தலில் மக்களால் ஓரங்கட்டப்பட்டது உண்மையானாலும் சிறந்த ஜனநாயகவாதி மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் விசாலித்த அறிவு கொண்டவரென்ற வகையிலும் அவரது இக்கூற்றுறை நாம் கட்சி அரசியலுக்கு அப்பால் பார்க்க வேண்டியது அவசியம்.  

இன்றைய காலக்கட்டத்தில் இலங்கையர் உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்பட்டால் மாத்திரமே மக்கள் பொருளாதார மீட்சி அடைவதற்கான வழிவகைகளை கைகொள்ளக் கூடியதாக இருக்கும். 

மிரிஹானை சம்பவத்தை எடுத்துக் கொண்டால் ஒரு தரப்பினர் கூறுவதைப் போல அங்கே கூடியவர்கள் சாதாரண மக்களாக இருக்கலாம். ஆனால் ஒரு பெருங்கூட்டம் கூடும் போது நாசகார சக்திகளும் அங்கே ஊடுருவுவதற்கான வாய்ப்புகளுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. அவற்றின் நோக்கங்கள் நாட்டையும் அரசையும் குழப்பியடித்து பிரச்சினைகளை பூதாகரமாக்குவதே தவிர வேறு எதுவுமல்ல. மிரிஹானையில் - அழிவு சக்தி எங்கிருந்து வந்திருந்தாலும் - அது ஏற்படுத்திய விளைவுகளைப் பார்த்தோம். இத்தகைய சம்பவங்கள் ஆங்காங்கே நடக்குமானால், அவை சட்ட ஒழுங்கை பாதிக்கும், நிலைமைகளை சீரழிக்கும் என்பதும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆசிய நாடுகளில் மக்களை அரசியல் ரீதியாக உணர்ச்சிவசப்படுத்தி பலன்களை வன்முறைகள் மூலம் அறுவடை செய்தலென்பது பிரபலமான ஒரு உத்தி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதியாக அமைந்த ஒரு அரசை, ஒரு இக்கட்டான சூழலில், அந்த அரசுக்கு ஒத்தாசை வழங்காமல் அதற்கு மேலும் நெருக்கடிகளைத் தந்து ஆட்சி மாற்றமொன்றை நோக்கி நகர்த்துவது எவ்வகையிலும் இத்தருணத்தில் அனுமதிக்கப்படலாகாது.  

பிரச்சினைகளை பாராளுமன்த்தில் விவாதித்து மக்கள் பிரதிநிதிகளின் சம்மதத்தோடு எவ்வாறான மாற்று நடவடிக்கைகளை எடுக்கலாமென்ற தீர்மானத்தை பாராளுமன்றமே எடுக்க வேண்டுமே தவிர தெருக்களில் வன்முறைகளில் ஈடுபடுவோரல்ல. 

பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். வன்முறை ஆயுதம் முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட வேண்டுமென்பதோடு நம் ஜனநாயக முறைமைகள் காப்பாற்றப்பட வேண்டுமென்பதும் மிக முக்கியம்.

Comments