இதழியல் வாழ்நாள் சாதனையாளர் மல்லிகை ஜீவா | தினகரன் வாரமஞ்சரி

இதழியல் வாழ்நாள் சாதனையாளர் மல்லிகை ஜீவா

ஈழத்து இலக்கிய வரலாற்றில் அதிகூடிய காலம் வெளிவந்த சிற்றிதழ் என்ற பெருமை மல்லிகைக்குரியது. டொமினிக் ஜீவா, 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி மல்லிகையை வெளியிடத் தொடங்கினார். ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் மல்லிகை ஏறத்தாழ 48 வருடங்கள் இலக்கிய உலகில் பவனிவந்து சாதனை படைத்தது. முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை, முப்பது ஆண்டுகளின் பின்னர் கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கியது. யாழ்ப்பாணத்துப் போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்த டொமினிக் ஜீவா, 05-02-1997 அன்று மல்லிகைக் காரியாலத்தை கொழும்பில் புதிதாக ஆரம்பித்தார். அதன்பின்னர் மீண்டும் மல்லிகை வெளிவரத்தொடங்கி டிசம்பர் 2012வரை வெளிவந்தது. கொழும்பில் மல்லிகைப் பந்தல் என்ற பதிப்பகத்தினூடாகப் பல தரமான நூல்களை வெளிக் கொணர்ந்தார் ஜீவா.

மல்லிகை வெளியானதும் அந்த இதழ்களைச் சுமந்து சென்று நேரடியாக வாசகர்களிடம் கொடுத்து அடுத்த இதழ் வெளியிடுவதற்கான பணத்தைச் சேகரித்து விடுவார் ஜீவா. 'பிரதிகளைத் தோளில் சுமந்து வீதி வீதியாக விற்கத் தொடங்கினேன் என்பதைவிட திணிக்கத் தொடங்கினேன் என்பதே சரியாகும்' எனக் குறிப்பிடும் ஜீவா, ஒரு முழுநேர இலக்கிய உழைப்பாளியாக இருந்து மல்லிகையை வெளியிட்டார்.

ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கிய சர்ச்சைகள் பலவற்றுக்கு களம் வழங்கியது மல்லிகை. பல பிரதேசச் சிறப்பு மலர்களை வெளியிட்டதன்மூலம் பல புதிய எழுத்தாளர்கள் இனங்காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார்கள். முஸ்லிம் பிரதேச எழுத்தாளர்கள், மலையக எழுத்தாளர்கள் எனப் பலர் வெளிச்சத்துக்கு வந்தார்கள். மல்லிகை பல இலக்கிய கர்த்தாக்களின் படங்களை அட்டையில் பொறித்து அவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட்டு அவர்களைக் கௌரவித்தது. சிங்கள எழுத்தாளர் சிலரையும் அட்டையில் பொறித்துக் கௌரவித்தார் ஜீவா. சிங்கள இலக்கிய வட்டாரத்தில் அதிகம் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாதான்.

மல்லிகையில் வெளிவந்த தூண்டில் என்ற கேள்வி - பதில் பகுதி ஜீவாவின் அபிப்பிராயங்கள், சிந்தனைகள், அனுபவக்குறிப்புகளை ஒளிவு மறைவின்றி வெளியிடுகின்ற அரங்கமாக விளங்கியது.

மல்லிகை இதழ் மார்க்சியக் கோட்பாட்டை ஈழத்து நவீன இலக்கியத்தில் அறிமுகப்படுத்தி கருத்தியல் ரீதியல் கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது. மல்லிகையின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய காரணம் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குரலாக அது ஒலித்ததுதான் எனக்குறிப்பிட்டுள்ளார் சிறுசஞ்சிகைகளின் செவிலித்தாய் என்று போற்றப்பட்ட வல்லிக்கண்ணன்.

முதுமை காரணமாக ஜீவாவால் மக்களிடம் சென்று அடுத்துவரும் மல்லிகைக்கான பொருள் தேட்டத்தைப் பெறமுடியாத நிலையில் மல்லிகை நின்று போனது.

வெள்ளை வேட்டி, வெள்ளை நஷனல் உடையுடன் காணப்படும் ஜீவா, அதே உடையுடன் இந்தியப் பயணங்கள், சோவியத் யூனியன், ஐரோப்பிய நாடுகள் எனப் பல நாடுகளுக்கும் சென்று வந்ததோடு தனது பயண அனுபவங்களையும் மல்லிகையில் பதிவு செய்துள்ளார்.

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் சுயசரிதை நூல். இதன் இரண்டாவது பாகம் அச்சுத் தாளின் ஊடாக ஓர் அனுபவப் பயணம் என்பதாகும். டொமினிக் ஜீவாவின் சுயசரிதை நூல் UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் 27-06-1927இல் பிறந்தவர் டொமினிக் ஜீவா. இவர் ஐந்தாம் வகுப்புவரை யாழ். சென்ற் மேரிஸ் பாடசாலையில் படித்தவர். ஆரம்ப காலத்தில் பொதுவுடமைச் சித்தாந்த நூல்களை வாசிப்பதற்கு ஜீவாவுக்கு உதவியவர் புத்தகசாலை அதிபர் ஆர்.ஆர். பூபாலசிங்கம். பொன். கந்தையா, கார்த்திகேசன், லிங்கன் ஆகியோரின் வழிகாட்டலில் ஜீவா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டார்.

இருபது வயதில் ஜீவா எழுதிய முதற்கதை எழுத்தாளன்| சுதந்திரனில் பிரசுரமாகியது. 1948இல் தமிழகத்திலிருந்து இலங்கை வந்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட தோழர் ப. ஜீவானந்தத்தை சந்திக்கும் வாய்ப்பு டொமினிக் ஜீவாவுக்கு ஏற்பட்டது. அச்சந்திப்பு ஜீவாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மார்க்சியக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஜீவாவின் எழுத்துப்பணி பரிணமிக்க வழிகாட்டியவர் ப. ஜீவானந்தம். அவர்மீது கொண்ட பக்தியினால், டொமினிக் என்ற தனது பெயருடன் ஜீவா என்ற பெயரையும் இணைத்துக்கொண்டு டொமினிக்ஜீவா என எழுத்துலகில் இயங்கத் தொடங்கினார்.

தமிழக சரஸ்வதி இதழ் ஜீவாவின் நிழற்படத்தை 1958இல் அட்டையில் பதித்துப் பெருமைப்படுத்தியது. 1968 ஜூலையில் வெளிவந்த தாமரை சிறுகதைச் சிறப்புமலர் ஜீவாவின் உருவத்தை அட்டையில் தாங்கி வெளிவந்து ஈழத்து எழுத்தாளர்களுக்குக் கௌரவத்தை ஏற்படுத்தியது.

இலங்கையில் 1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து சமூக பொருளாதார நிலைகளால் இலங்கைத் தமிழரிடையே தேசிய உணர்ச்சி பிறந்தது. அதன்விளைவாக வர்க்க உணர்வுகள் தீவிரமடைந்தன. தேசிய விழிப்பும் வர்க்கப் போராட்டங்களும் மக்களிடையே பெரியதொரு சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இலக்கியத்திலும் பிரதிபலித்தது.

1957இல் இலங்கையில் தேசிய சாஹித்திய மண்டலம் உருவாக்கப்பட்டது. இக்காலகட்டத்திலேதான் டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் என்ற முதலாவது சிறுகதைத் தொகுதியை சரஸ்வதி ஆசிரியர் வெளியிட்டார்.

1960இல் இச்சிறுகதைத் தொகுதி அவ்வாண்டின் சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. அதுவே இலங்கையில் முதன்முதலில் நவீன புனைகதை இலக்கியத்திற்கான சாஹித்திய விருதுபெற்ற நூலாகும். பரிசு பெற்றுவந்த ஜீவாவை, யாழ். புகையிரத நிலையத்தில் 13-10-1961 அன்று மலர்மாலை அணிந்து வரவேற்றார் யாழ்நகரசபை முதல்வர் ரி. எஸ். துரைராசா .

டொமினிக் ஜீவா பெற்ற இந்தப்பரிசு ஈழத்து மரபுவழி இலக்கியகர்த்தாக்களை சீற்றம் கொள்ள வைத்தது. பண்டித வர்க்கத்தினர் ஒன்றுசேர்ந்து பேராசிரியர் ஆ.சதாசிவம் தலைமையில் மரபுப்போராட்ட அணியொன்றை உருவாக்கினர். 'சிறுகதையும் வசன கவிதையும் இலக்கியமாகா. இன்றைய சிறுகதைப்படைப்பில் இழிசினர் வழக்கு அதிகரித்துவிட்டது. பேச்சுத் தமிழுக்கு இடமளிக்கும் பொதுவுடமைவாதிகள் தமிழைக் கொலை செய்கிறார்கள்' என மரபுவாதிகள் வாதிட்டனர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் மிக உச்சமான தர்க்கமாக இந்த மரபுப் போராட்டம் அமைந்தது. இந்தத் தர்க்கம் டொமினிக் ஜீவாவின் நூலுக்குப் பரிசு கிடைத்ததன் பின்னணியில் எழுந்தது. யாழ்ப்பாணத்தில் 1963இல் நடந்த சாஹித்திய விழாவில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முட்டை எறிந்து கூட்டத்தைக் குழப்பிய நிகழ்வுடன் இந்தப் போராட்டம் முடிவுற்றது.

இத்தகையதொரு பின்புலம், டொமினிக் ஜீவாவுக்குக் கிடைத்த சாஹித்திய விருது, மக்களை இலகுவில் சென்றடையும் நவீன உரைநடைப் புனைவு இலக்கியத்தை ஆக்க இலக்கியமாக ஈழத்தில் அங்கீகரிக்க வைத்தது.

'தண்ணீரும் கண்ணீரும்' சிறுகதைத் தொகுதியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எம்.ஏ. பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டது. ருஷ்ய, செக்கோசிலவக்கிய, ஆங்கில, சிங்கள மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் சுயசரிதை நூல். இதன் இரண்டாவது பாகம் அச்சுத் தாளின் ஊடாக ஓர் அனுபவப் பயணம் என்பதாகும். டொமினிக் ஜீவாவின் சுயசரிதை நூல் UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

டொமினிக் ஜீவாவின் நூல்களாக தண்ணீரும் கண்ணீரும் (1960), பாதுகை (1962), சாலையின் திருப்பம் (1967), வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள், அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைநகரில் முப்பது நாட்கள் ஆகியவை வெளிவந்துள்ளன.

இலக்கியப் பணிக்காக டொமினிக் ஜீவா பல பரிசில்களைப் பெற்றுள்ளார். யாழ்.பல்கலைக்கழகம் டொமினிக் ஜீவாவுக்கு எம்.லிட். என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவிக்க முன்வந்தது. அந்தப் பட்டம் கல்வித்தகைமைசார் பட்டம் என்பதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜீவா மறுத்துவிட்டார்.

2005ஆம் ஆண்டில் பிரதமரால் வழங்கப்படும் தேசநேத்துரு (தேசத்தின் கண்) என்ற விருது டொமினிக் ஜீவாவுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில அரச சாஹித்தியரத்னா உயர்விருதும் வழங்கப்பட்டது. கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது 2013இல் வழங்கப்பட்டது.

ஈழத்து இதழியல் வரலாற்றில் சாதனை படைத்த முன்னோடி டொமினிக் ஜீவா 28-.01-.2021அன்று அமரரானார்.

Comments