பா.ஜ.கவினால் பந்தாடப்படும் | தினகரன் வாரமஞ்சரி

பா.ஜ.கவினால் பந்தாடப்படும்

பாரதீய ஜனதா கட்சியின் பொற்காலம் என நரேந்திர மோடியின் இந்த ஆட்சியைக் குறிப்பிடலாம். அவர் மீது அகில இந்திய அளவில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற போதிலும் ‘இந்தி பெல்ட்’ என அழைக்கப்படும் பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, உட்பட இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க செல்வாக்கு செலுத்தி வருகிறது. இங்கெல்லாம் பா.ஜ.க வறுமையை ஒழித்து வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கியதால் இந்த செல்வாக்கு ஏற்படவில்லை. சாதாரண மக்களின் உணர்வுகளைக் கிளறிவிடக்கூடிய இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாடு, அகண்ட இந்து இந்தியா, இராமர் கோவில், இந்து தேசிய வாதம் போன்ற வறட்டு வாதங்களே இம் மக்களை பா.ஜ.க மீது திருப்பியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

இத்தகைய வறட்டு வாதங்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் சர்வரோக நிவாரணியாக அரசியல் தலைவர்களால் அவ்வப்போது பிரயோகிக்கப்பட்டு சாதகமான பலன்களும் அறுவடை செய்யப்படுகிறது. சிம்பாப்வேயின் சுதந்திரத்துக்கு முன்னரான பெயர் ரொடீஷியா. சுதந்திரம் கிடைத்ததும் தனக்கு எதிரியாக இருக்கக்கூடிய விடுதலைப் போராளியை தேர்தலில் தோற்கடித்துவிட்டு பதவிக்கு வந்தவர்தான் முகாபே.

 கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிம்பாப்வேயின் அசைக்க முடியாத தலைவராக ரொபர்ட் முகாபே நீடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து அவரால் தேர்தல்களில் வெற்றி பெற முடிகிறது. சிம்பாவேயின் சிறுபான்மையினமான வெள்ளையருக்கு எதிரான இவரது போக்கே கறுப்பர்களின் ஆதரவை அவருக்கு பெற்றுத் தருகிறது என்பதும் அவர் அரசின் இமாலய ஊழல்களும், குறிப்பாகச் சொன்னால் படிப்பறிவு இல்லாத பாமர மக்களின் ஆதரவுமே அவர் ஆட்சியில் நீடிப்பதற்கு உதவுகிறது. இதுதான் முகாபே மந்திரம்!

தமிழகத்தில் அரசாண்டு வந்த காங்கிரஸ் கட்சி என்றும் மோசமான ஆட்சியைத் தரவில்லை. இராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகிய காங்கிரஸ் முதல்வர்கள் ஊழலற்ற நேர்மையான ஆட்சியைத் தந்தனர். ஆனால் 1967 பொதுத் தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்தது. இதற்காக அது எடுத்துக் கொண்ட ஆயுதம் தமிழ் தேசிய வாதம்.

புதுடில்லியில் இருந்து இயக்கப்படும் தேசிய கட்சிகளின் மாநிலக் கமிட்டிகள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையே, இந்தி பேசும் தேசிய தலைவர்கள் தமிழக அரசியலின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ளாமல் பேசி விடுவதும், திட்டங்களை அறிவிப்பதும் அதை ஜீரணிக்க முடியாமல் மாநிலத் தலைவர்கள் தவிப்பதும் தான்.

அக் காலத்தில் மத்திய காங்கிரஸ் அரசு இந்தித் திணிப்பை மேற்கொண்டது. தி.மு.க அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் உணர்வைத் தூண்டி விடவே, அது நாடெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டமாகக் கிளர்ந்தெழுந்தது. துப்பாக்கிச் சூட்டுக்கு பல தமிழ் இளைஞர்கள் பலியாகினர். அதுவரை காங்கிரஸ் தந்த நேர்மையான ஆட்சி, வளர்ச்சித் திட்டங்கள் என்பனவற்றையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் மறந்த தமிழர்கள், தமிழுணர்வால் உந்தப்பட்டு தி.மு.கவை அரியணை ஏற்றினர். இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் தலைதூக்க முடியவில்லை. இந்திரா காந்தி, எம்.ஜி. - ஆர் கருணாநிதி மோதலை ஊதிவிட்டு தி.மு.கவை பிளந்து இதற்கு பலி தீர்த்துக் கொண்டாலும் காங்கிரசை தமிழகத்தில் அவரால் வளர்க்க, முடியாமற் போனது.

 இறுதியில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க முதுகிலோ அல்லது தி.மு.க முதுகிலோ மட்டுமே காங்கிரஸால் சவாரி செய்து அக்கட்சிகள் அளிக்கும் ஆசனங்களில் போட்டியிட்டு சில உறுப்பினர்களை தமிழக சட்டமன்றத்துக்கு காங்கிரஸால் அனுப்ப முடிந்ததே தவிர, காங்கிரசை வளர்ப்பது சாத்தியமாகவில்லை. ஏனெனில் தமிழையும் தமிழர்களையும் பாதுகாக்கக் கூடிய கட்சிகளாக தமிழர்கள் கழகங்களையே நம்புகின்றனர். இந்தி பேசும் தலைவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது.

இந்த பின்னணியில்தான் தற்போது தமிழகத்தில் காலூன்றும் பா.ஜ.கவின் முயற்சிகள் சூடு பிடித்திருக்கிறன. காங்கிரஸ் ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட கட்சி. காமராஜர் நல்லாட்சி தந்திருக்கிறார். ஆனாலும் கூட காங்கிரஸினால் தமிழகத்தில் சொந்தக் காலில் நிற்க முடியவில்லை. பா.ஜ.கவின் நிலையோ மிக மோசமானது. தமிழகத்தில் பா.ஜ.க.வினால் காலூன்றவே முடியவில்லை. தேர்தல்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் ஒட்டு மொத்தமாக கட்டுப் பணம் இழக்கும் நிலையே தொடர்ந்தாலும் 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் சில சட்டசபை ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும் எனவும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் முடிந்தால் ஆட்சியைக் கைப்பற்றுவது அல்லது பிரதான எதிர்க்கட்சியாக வருவது என்ற இலக்கை வைத்தும் பா.ஜ.க வின் டில்லித் தலைவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். 2029 இல் தமிழகத்தில் ஆட்சியை கட்டாயம் பிடிப்போம் என்பது பா.ஜ.கவின் இலக்கு.

தமிழகம் பகுத்தறிவு வாதத்தின் விளைநிலமாக இருந்திருக்கிறது. பக்தி கலாசாரம் என்றைக்கும் போல இன்றும் தமிழகத்தில் செழிப்பாக இருந்தாலும் வேறெந்த மாநிலத்தையும் விட பகுத்தறிவு சிந்தனை புதிய தலைமுறையினரிடம் இன்றைக்கும் விரவிக் காணப்படுகிறது. பகுத்தறிவு என்பது தமிழுணர்வுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. திராவிட கழகம், தி.மு.க ஆகிய அமைப்புகளுக்கு அப்பால் பல தமிழ் அமைப்புகள் கட்சி ரீதியாகவும், அரசியல் சாரா ரீதியாகவும் இயங்கி வருகின்றன. இத் தடைகளை எல்லாம் தாண்டி பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றுவது மிகச் சிரமமான காரியமே தவிர ஒரேயடியாக சாத்தியமற்றது என்று சொல்லிவிட முடியாது. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்று பா.ஜ.க நம்புகிறது. தமிழகமெங்கும் பாரத தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், இந்தியர்களுக்கு இயல்பாகவே இருக்கக்கூடிய பாகிஸ்தான் மீதான வெறுப்புணர்வை இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி விடுதல் (இந்திக்கு எதிராக தமிழுணர்வை திருப்பியதைப் போல), இதன் ஊடாக இந்துத்துவ கருத்துகளைப் பரப்புதல், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் போன்ற முறைகேடுகளுக்கு காரணமான கழக ஆட்சிகளுக்கு பதிலாக நேர்மையான, தூய, தேசியம் சார்ந்த அரசை தம்மால் மட்டுமே தர முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் கட்டி எழுப்புதல் போன்ற பல திட்டங்களை பா.ஜ.க வைத்துள்ளது.

காங்கிரசுக்கு இயல்பான ஒரு தொடர்பு தி.மு.கவுடன் உண்டு. காங்கிரஸும் தி.மு.கவும் மோதிக் கொள்வதில்லை. ஊடிக்கொள்வது மட்டுமே. மதச் சார்பற்ற கட்சிகள் என்று அவை தம்மை அழைத்துக் கொள்கின்றன. தி.மு.க. ஒரே ஒரு தடவை மட்டுமே பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது. அது ஒரு தவறான அணுகுமுறை என்பதைப் பின்னர் அறிந்தும் கொண்டது. பா.ஜ.க.வுடனான ஒரு கூட்டு, தி.மு.க.வுக்கு கொள்கை ரீதியான நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் என அது கருதுகிறது. எனவே தமிழகத்தில் தி.மு.க – பா.ஜ.க கூட்டணி இரண்டு கட்சிகளுக்குமே நன்மையாக முடியாது. பா.ஜ.க தனது திட்டங்களை படிப்படியாக அரங்கேற்ற வேண்டுமானால் அதற்கு ஒரு பலமான தமிழகக் ‘கழக’ கட்சியின் தயவு தேவை. ஜெயலலிதா இருந்த வரை அதற்கு அவர் இடமளிக்கவில்லை.

பா.ஜ.கவை எதிர்ப்பதற்கான தைரியமும் அதற்கான மக்கள் அதிகாரமும் அவரிடம் இருந்தது. அவரது திடீர் மறைவும் கட்சியில் அடுத்தடுத்து நிகழ்ந்தவையும் பா.ஜ.கவுக்கு தான் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு வந்திருப்பதை உணர்த்தியது. டெல்லி தலைமை விழித்துக் கொண்டது.

அ.தி.மு.கவின் சசிகலா அணி – பன்னீர் அணி இரண்டையுமே இன்று இயக்குவது டெல்லியில் இருந்து பா.ஜ.கவே என்பது தமிழகத்தில் பரவலாகப் பேசப்படும் சேதி. சசிகலா அணியினர் இதை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். சசிகலா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தினகரன் மீதான விசாரணைக்கு டெல்லியே காரணம் என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். சசிகலா அணியையும் எடப்பாடியின் அரசாங்கத்தையும் மக்கள் முன்னிலையில் நாறடிக்க வேண்டும் என்பதை திட்டமிட்ட ரீதியாக மத்திய அரசு செய்து வருகிறது என்பது தமிழகத்தில் நிலவும் பரவலான யூகம்.

சசிகலா அணி மீது பா.ஜ.கவுக்கு என்ன விரோதம்?

நேரடியாகப் பார்த்தால் எந்த விரோதமும் இல்லை, ஏனெனில் அரசியலில் அன்பு, பாசம், நட்பு, விரோதம் எல்லாம் கிடையாது. இருப்பது ஒன்றே. அதுதான் சந்தர்ப்பம், பா.ஜா.காவுக்கு சுயமாக செயற்பட்டு தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. அதற்கு தமிழகத்தில் அரசியல் செய்ய ஒரு கழகத்தின் துணை தேவை. அது தி.மு.க இல்லை என்றாகிவிட்ட பிறகு பன்னீர் அணியே சவாரிக்கான சரியான வாகனம் எனப்பட்டது பா.ஜ.க.வுக்கு. ஏனெனில் சசிகலா ஒரு தண்டனைக் குற்றவாளி.

ஜெயலலிதாவைப் பிடித்த தொண்டர்களுக்கு சசிகலாவைப் பிடிக்கவில்லை.

அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவையும் தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை. அம்மா கைகாட்டிய ஓ. பன்னீர் செல்வத்தைத்தான் நேர்மையானவர், அம்மா வழி (?) செல்லக்கூடியவர், அம்மா ஆட்சியைத் தரக் கூடியவர் என நம்புகின்றனர். இரண்டு அணிகளையும் சாதாரண பொதுமக்கள் பார்வையில் எடுத்துக் கொண்டால், மக்கள் பார்வையில் தேறுவது பன்னீர் அணியே!

இனி ஓடுகின்ற குதிரை மீதுதானே பணம் கட்ட முடியும்? பா.ஜ.கவுக்கு பன்னீர் அணி பிடித்துப் போனதற்கு இதுவே காரணம். ஜல்லிக்கட்டு விவகாரம் படுவிரைவாக பா.ஜ.கவினால் முடித்துத் தரப்பட்டதற்கும் 40 தினங்களுக்குமேலாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டத்தை மோடி கண்டு கொள்ளாது விட்டதற்கும் என்ன காரணம் என்பது வாசகர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஷாலோ, ஸ்டாலினோ மோடிக்கு விரும்பத்தக்கவர் அல்ல. இப் போராட்டத்துடன் பன்னீர் சம்பந்தப்பட்டிருந்தால் விவசாயிகளை நரேந்திரமோடி நேரில் சென்று சந்தித்திருப்பார்!

எனினும் முழுக்க முழுக்க பன்னீரின் பக்கமே பா.ஜ.க நிற்கும் என்றும் முடிவு கட்டிவிட முடியாது. பா.ஜ.கவின் சொற்படி நடக்கும்வரைதான் பன்னீருக்கு பஞ்சணையும் புஷ்பங்களும், மீறினால் பன்னீர் வீட்டிலும் ரெய்டுகள் நடக்கும், பழைய வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்படும் என்பதை பன்னீர் அறிவார். சமீபத்தில் டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கே பா.ஜ.க தலைவர்களுடன் பேசிவிட்டுத் திரும்பிய பின்னர் சில மாற்றங்களைக் காண முடிகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் எடப்பாடி காணப்படுவதோடு, இரு அணிகளும் இணைவது தொடர்பான பழைய ஆர்வம் எடப்பாடி அணியில் காணப்படவும் இல்லை.

மத்திய அரசு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பன்னீர் அணி தனக்கு எதிரான போக்கைக் கடைபிடிக்குமானால் எடப்பாடிக்கு ஆதரவு வழங்குவோம் என்ற செய்தி இதன் மூலம் பன்னீர் செல்வத்துக்குத் தரப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும்.

இது இப்படி இருக்க, கிடுக்குப் பிடிக்குள் சிக்கியிருக்கிறார் டி.டி.வி. தினகரன், சசிகலாவுக்கு ஒரு நல்ல ‘இமேஜ்’ தமிழகத்தில் இல்லை என்றாலும் தினகரன் விவகாரம் சசிகலா குடும்பத்தின் கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் முற்றாகச் சிதைத்துப்போட்டியிருக்கிறது.

 அருள் சத்தியநாதன்

ஆனால் சசிகலா அணியினர் வேறு வழியின்றி எமது இதய தெய்வம் சின்னம்மாவே என்றும் துணைப் பொதுச் செயலாளர் ‘தியாகி’ தினகரனே என்றும் கூறிவருகின்றனர். ஏனெனில், இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பன்னீர் செல்வம் விதித்த முக்கியமான நிபந்தனை, அ.தி.மு.கவில் இருந்து சசிகலா குடும்பம் முற்றாக விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அதற்கு முதலில் உடன்பட்டிருந்த எடப்பாடி கோஷ்டி, தற்போது தொனியை மாற்றிக் கொண்டிருக்கிறது. சின்னம்மா மீண்டும் இதயத் தெய்வமாகி இருக்கிறார்! எனவே இன்றைய சூழலில் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு சாத்தியமே கிடையாது!

ஏனெனில் இரு அணிகளும் அடுத்தத் தேர்தல்வரை இணைவதை பா.ஜ.கவினர் விரும்பவில்லை. பன்னீர் அணி அல்லது எடப்பாடி அணியை அதுவரை தன் கட்டை விரலின் கீழ் வைத்திருக்கவே மோடி விரும்புகிறார். எந்த அணிக்கு மக்கள் ஆதரவு இருக்குமோ அந்த அணியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்துக் கொள்ளும், சுருக்கமாகச் சொன்னால் பா.ஜ.கவின் பணயக் கைதிகளாக இரு அணிகளும் இருக்கின்றன. என்பதே உண்மை!

தமிழக அரசு கலைக்கப்படுவதற்கு சாத்தியம் இருக்கிறதா?

முன்னர் இருந்தது. இப்போது பா.ஜ.காவின் பிடி இறுகியிருப்பதால் ஆட்சிக் கலைப்பு சாத்தியம் இல்லை. தேர்தலை நடத்தினால் எதிர்க்கட்சியான தி.மு.க 200 ஆசனங்களை வென்று தமிழகத்தில் பா.ஜ.க விரோத ஆட்சியை அமைத்து மம்தா பெனர்ஜியுடனும் கூட்டு சேர்ந்து விடலாம் என பா.ஜ.க அஞ்சுகிறது. அடுத்த நான்கு ஆண்டு காலத்துக்குள் இரண்டு அ.தி.மு.க அணிகளையும் பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க.வின் தோற்றத்தை நல்லபடியாக அபிவிருத்தி செய்து, மக்கள் கவனத்தை தன் பக்கம் ‘செய்து முடிக்கும், தமிழ் உணர்வு கொண்ட’ கட்சியாக ஈர்க்கும் வேலைகளை செய்ய வேண்டியிருப்பதால் தேர்தல் சாத்தியமில்லை.

பாரதீய ஜனதாகட்சி, சசி- தினகரன் மீது ஒரு விதமாகவும் பன்னீர் எடப்பாடி மீது இன்னொரு விதமாகவும் நடந்து கொள்வது ஏன்?

சசிகலா நீண்டகாலமாக ஜெயலலிதாவுடன் நெருங்கிப்பழகியவர். உள் விஷயங்களை அறிந்தவர். மிகப் பெரும் கோடீஸ்வரி. டெல்லி உயர் அரச அதிகாரிகளையும் அசைத்துப் பார்க்கக்கூடியவர். அவர் தமிழக முதல்வராக வந்தால் தாம் நினைத்த மாதிரி சசிகலாவை ஆட்டிப்படைக்க முடியாது போகலாம்.

ஜெயலலிதாவுக்கு இருக்கக் கூடிய மக்கள் செல்வாக்கை அவர் எடுத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதால் அவரைத் தமிழக அரசியலில் வளர விடுவது தமக்கு சாதகமானதாக இருக்காது என பா.ஜ.க தலைமை கருதியிருக்கலாம். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவியேற்றதுமே முதல்வராகவும் வருவதற்கு முயற்சி செய்தபோது தீர்ப்பு வெளிவந்து அவர் ஜெயிலுக்குச் சென்றது பா.ஜா.கவுக்கு வேலையை சுலபமாக்கியது. ஆனால் அக்காள் மகன் தினகரன் கட்சியை பொறுப்பேற்றதை பா.ஜ.க விருப்பவில்லை.

ஆர்.கே.நகரில் அவரே போட்டியிட முன்வந்ததை டெல்லி ரசிக்கவில்லை.

தினகரனுக்கோ பழகிப்போன சசிகலா பாணி அரசியலை மாற்றிக்கொள்ளத் தெரியவில்லை. லஞ்சம், அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் என்பனவே வெற்றியின் திறவுகோல் என்பதே ஜெயலலிதா அருளிச் சென்றிருக்கும் பொன் வாசகங்கள், தொப்பியை தலையில் அணிந்த டி.டி.வி. தினகரன் வாக்காளர்களுக்கு குல்லா போட முனைந்ததன் எதிரொலியாகவே அவர் சார்ந்த அணியின் மீதும் இறுதியில் அவர் மீதும் சட்டம் பாய்ந்தது.

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட விவகாரத்தில் டெல்லி பொலிஸார் சுகேஷ் என்ற ஹவாலா தரகரைக் கைது செய்ததுமே தினகரன் மீது நடவடிக்கை பாயும் என்பது புரிந்து போயிற்று. நேற்றும் தினகரனை டெல்லி பொலிஸார் சென்னையில் விசாரித்து வந்தனர்.

அவர் இப்போது வெளியே வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில் இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடுத்தடுத்து பலர் கைதாகி வருகின்றனர். சென்னையில் இருந்து பத்துகோடி ரூபா கொச்சினுக்கும் அதன் பின்னர் வட இந்திய நகரொன்றுக்கும் கொண்டு செல்லப்பட்டு டெல்லியை அடைந்ததாகவும் அதில் ஒரு கோடி 30 லட்சம் ரூபாவே சுகேஷிடமிருந்து பிடிபட்டதாகவும் விவரங்கள் கசிந்துள்ளன. இப் பணம் பயணித்த பாதையை ‘ஹவாலா ரூட்’ என்கிறார்கள். மேலும், கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டேன் என்று கூறிய நரேந்திரமோடியின் முகத்தில், இவ்வளவு பெரிய தொகை கறுப்புப் பணமாக, புதிய நோட்டுகளாகப் பிடிபட்டிருப்பது, கரியையே பூசியிருக்கிறது.

ஹவாலா என்பது மிக இரகசியமாக நடத்தப்படும் கறுப்புப் பண நடமாட்டத்துக்கான இந்திப் பெயர். பத்துகோடி ரூபா பயணத்துக்கு பொறுப்பானவர் என்ற சந்தேகத்தின் பேரில் நரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனன் விசாரிக்கப்படுகிறார். சட்டத்தரணி கோமிநாத், மோகன், தாய்லாந்தில் இருந்த இந்தியா திரும்பிய ஒரு ஹவாலா தரகர் எனப்பலர் கைதாகியுள்ளனர். இவ் வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகக் கருத முடியாது. தோண்டத் தோண்ட பல இரகசியங்கள் வெளியாகி வருவதாகவே டெல்லி புலனாய்வு பொலிஸார் கூறியுள்ளனர். எனவே தினகரன் இப்போது வெளிவருவதற்கான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை.

எனினும் இவ்வழக்கு அரசியலாகப் பார்க்கப்பட்டு அரசியல் இலாபங்களை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் அப்படியேதான் உள்ளன.

கருணாநிதி அரசின் ஊழலை விசாரிக்க சர்க்காரியா கமிஷனை நியமித்தார் இந்திரா காந்தி. கலைஞரை குற்றவாளியாகக் கண்டது கமிஷன். எனினும் அவர் மீது இந்திரா நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்து வந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வுடன் இணைந்து போட்டியிட்டது காங்கிரஸ்! இதுதான் அரசியல்!

Comments