அடுத்தடுத்து பதவி விலகும் பிரிட்டன் பிரதமர்கள் | தினகரன் வாரமஞ்சரி

அடுத்தடுத்து பதவி விலகும் பிரிட்டன் பிரதமர்கள்

பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா!

உலகத்திற்கு பாராளுமன்ற ஆட்சியின் மாதிரிகளை அறிமுகப்படுத்தியதுடன் அதன் கூறுகளின் சிறப்பினை நடைமுறைப்படுத்திய நாடான பிரித்தானியாவின் ஆட்சித்துறை எதிர் கொண்டுள்ள நெருக்கடிகள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் 45 நாள் ஆட்சியிலிருந்த பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

சமகால பிரித்தானியாவின் அரசியலில் டேவிட் கமரோனில் ஆரம்பித்து லிஸ் ட்ரஸ் வரையும் இராஜினாமா அரசியல் நிகழ்ந்துள்ளது. பதவியிலிரு க்கும் ஆட்சியாளர்கள் இராஜினாமா செய்வதென்பது சிறந்த அரசியல் நாகரிமாகவே கருதப்படுகிறது. வளர்ந்த நாடுகளின் அரசியல் காலாசாரத்திலுள்ள பிரதான அம்சமும் அதுவாகவே கருதப்படுகிறது. அதனை அதிகம் கடைப்பிடிக்கும் பிரித்தானியாவின் அரசியல் தலைவர்கள் உலகத்திற்கு முன்னுதாரணமாக காணப்படுகின்றனர்.

ஆனால் இத்தகைய இராஜினாமா நாட்டினது உறுதிப்பாட்டினை சீர்குலைப்பதாக அமைய வாய்ப்புள்ளது. ஆட்சியின் உறுதிப்பாடே அந்த நாட்டின் அரசியல், பொருளாதார, இராணுவ, சமூக மட்டத்திலான செழிப்புக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாகும். ஏன் பிரித்தானியாவின் ஆட்சித்துறைக்குள் இத்தகைய நெருக்கடி நீடித்து வருகிறது என்பதை தேடுவதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.

முதலாவது, பிரித்தானியாவின் அரசியல் வரலாறு முழுவதும் இருகட்சிப் பாரம்பரியம் காணப்பட்டாலும் கன்சவேட்டிவ் கட்சியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. கன்சவேட்டிவின் மேலாதிக்க மனோநிலை அரசியல் தலைமைத்துவத்திற்கான வாய்ப்புக்களை கன்சவேட்டிவ் சமூகத் (வர்க்க) தளத்திற்கு அப்பால் தேட தயாரில்லாத தன்மையை ஏற்படுத்தியது. தற்போது கூட நான்கு பிரதமர்கள் இடைநடுவில் விலகிய போதும் ஒரே கட்சிக்குள் பிரதமர்களை தொடர்ச்சியாக தேடுவதுடன் மீளவும் தேர்தலுக்குப் போவதை கைவிட்டுவிட்டு கன்சவேட்டிவ் மீண்டும் பிரதர் ஒருவரை தேடுவதற்கான போட்டியில் இறங்கியுள்ளது.

இந்தப் போக்கினைப் பார்த்தால் வாரத்திற்கு ஒரு பிரதமர் ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. உலகத்திற்கு ஜனநாயகத்தையும் ஆட்சியின் உறுதிப்பாட்டையும், பொறுப்புக் கூறலையும், சொல்லிக் கொடுத்த சமூகமென இனங்காட்டும் பிரித்தானிய சமூகம், அதிக முரண்பாட்டை கொண்டுள்ளதாக உலகத்திற்கு காட்டுகிறது. இது பிரித்தானியாவின் மேலாதிக்க மனோநிலையால் ஏற்பட்டதென்பதை நிராகரித்துவிட முடியாது.

அத்தகைய மேலாதிக்க மனோநிலை முழு உலகத்திற்குள்ளும் பிரித்தானியா எடுத்தது போல் மேற்கு ஐரோப்பாவுக்குள்ளும் அத்தகைய போக்கு அதிகம் நிலவியது.இதுவே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தது. வேறு பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்தினாலும் அடிப்படையில் மேலாதிக்க மனோநிலையே அத்தகைய முடிவுக்கு வித்திட்டது. பிரித்தானியாவின் பொருளாதார நெருக்கடிக்கு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனின் வெளியேற்றமும் ஒரு காரணமாகும். பொருளாதாரக் கூட்டு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, என உலக நாடுகள் ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் போது பிரிட்டன், பிரிவினையை ஊக்குவித்ததுடன், ஐரோப்பிய யூனியனிலிருந்து தனிமைப்படும் செயல்பாட்டை எடுத்தது. அதன் விளைவாகவே பொருளாதார நெருக்கடிகளும், அதற்கு முகங்கொடுக்க முடியாது பிரதமர்களது இராஜினாமாக்களும் அமைகின்றன.

இரண்டாவது, பிரிட்டன் இரண்டாம் உலக போருக்கு முன்பிருந்தே அமெரிக்க நலன்களுக்கு இசைவாகச் செயல்படும் போக்கினை கொண்டிருந்தது. ஐரோப்பாவுக்குள் அமெரிக்காவின் சிறந்த எடுபிடியாகச் செயல்படும் போக்கினை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் ேபாருக்குப் பின்பான பிரித்தானியத் தலைமைகள் முழுமையாக அமெரிக்காவின் கொள்கைகளை பின்பற்றுவதை முதன்மைப்படுத்தி வந்தன. பிரித்தானியாவுக்காகவும் ஐரோப்பாவுக்காகவும் உழைத்த தலைவர்களில் மாக்ரட் தட்சர் முக்கியமானவராக விளங்கினார். அவர் அமெரிக்காவை கையாண்டு கொண்டு, பிரிட்டனினதும் ஐரோப்பாவினதும் நலனில் அக்கறை செலுத்தினார். அத்தகைய தலைமைகள் அதற்கு பின்னர் பிரித்தானியாவுக்குள் எழுச்சி பெறவில்லை. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனை வெளியே கொண்டுவருவதில் அமெரிக்காவுக்கு அதிக பங்கிருந்தது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிக கவனமுடையவராக காட்டிக் கொண்டார். காரணம் ஐரோப்பாவின் ஆதரவு இல்லாவிட்டால் அமெரிக்கா, உலகத்தை ஆதிக்கம் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவாகக் கொண்டுள்ளது. அதனால் ஐரோப்பாவுக்குள் எந்த அரசும் எழுச்சியடைந்துவிடக் கூடாது என்பதிலும் அமெரிக்கா ஒத்துழைப்புக்கு எதிரான சக்திகள் வலுவடைந்துவிடக் கூடாது என்பதிலும் அமெரிக்கா தெளிவாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்காவே ஐரோப்பாவை தனது ஆதிக்கத்திற்குள் வைத்துள்ளது. இதற்கு உதவுவதையே பிரிட்டன் அரசியல் தலைமைகள் தங்களது பிரதான அரசியல் தலைமைத்துவமாகக் கருதுகின்றன.

மூன்றாவது, உக்ரைன்- ரஷ்ய போர் அமெரிக்காவுக்கானதே. அமெரிக்க நலன்களுடன் முட்டிமோதும் நாடாக ரஷ்யாவும் அதன் தற்போதைய தலைமையும் காணப்படுவதனால் எதிர்கால உலக ஆதிக்கத்தை ரஷ்யாவின் நகர்வுகளால் அமெரிக்கா இழந்துவிடுமா என்ற குழப்பம், அமெரிக்க ஆட்சி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ரஷ்யாவுக்கு எதிரான போரை ஊக்குவிக்கவும் நேட்டோ வழியாக போரை உத்தரவாதப் படுத்தவும் அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இத்தகைய போர் ஐரோப்பாவை முழுமையாக நிலைகுலையச் செய்து வருகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் அரசியல் குழப்பங்கள் நாடுகளுக்குள் ஏற்படுவதுடன் மீளவும் உலக போர்பற்றிய உரையாடல்களும் தீவிர போக்குடைய சக்திகளது எழுச்சிகளும் இலகுவாக மேலெழத் தொடங்கியுள்ளன. இதுவே முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு வித்திட்ட காரணிகள். அது போன்ற ஒரு யுகத்தை மீளவும் உக்ரைன்- ரஷ்யப் போர் ஐரோப்பாவுக்குள் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ரஷ்ய, -ஐரோப்பிய மோதலுக்கு பின்னால் இருப்பது அமெரிக்க நலன்களே அன்றி ஐரோப்பாவின் நலன்களல்ல. ரஷ்யா ஒரு யூரோஆசியக் கண்டத்து நாடாக இருந்தாலும், அதிகம் ஐரோப்பிய மாதிரிக்குள்ளேயே மகாபீட்டர் காலத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரம் ஐரோப்பிய நாடுகளது பொருளாதாரத்திலும் ரஷ்யாவுக்கு அதிக பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. இன்றைய ஐரோப்பிய பொருளாதாரம் ஊடாக எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு மூலாதாரமான காரணம் ஐரோப்பாவுக்கான எரிவாயு மற்றும் பெற்றோலியத்தின் ஏற்றுமதியை ரஷ்யா தடை செய்தமையே.

நான்காவது, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடையை மேற்கொள்வதில் பிரிட்டன்- அமெரிக்க கூட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளை கடந்து செயல்பட்டிருந்தது. அதன் முழுமையான விளைவுகளே பிரிட்டனது ஆட்சியாளர்களது இராஜினாமா படலத்திற்கான அடிப்படையாகும். பிரிட்டன் இரு வரலாற்று தவறுகளை இழைத்துள்ளது எனலாம். ஒன்று, ஐரோப்பிய யூனியலிருந்து வெளியேறியமை. அதற்கான காரணமாக ஈரோ நாணயத்தைக் காட்டிலும் ஸ்ரேலிங் பவுண்ட் வலிமையை பாதுகாக்க பிரிட்டன் முனைந்ததாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது இரு நாணயங்களையும் வலிமையற்றதாக்கியதுடன் ஸ்ரேலிங் பவுணுக்கு எதிரான டொலரின் பெறுமானம் உயர்வாகவே உள்ளது. ஐரோப்பிய மோதலை அமெரிக்கா ஏற்படுத்திவிட்டு தனது நாணயத்தின் பெறுமானத்தை பாதுகாத்துள்ளது. இரண்டாவது, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை ஊக்குவித்தமையாகும். ரஷ்ய,-ஐரோப்பிய பொருளாதார உறவை புரிந்துகொள்ளத் தவறிய பிரிட்டன் அதனை ஊக்குவித்ததுடன், அமெரிக்க விருப்புக்கு தலையசைக்கும் தவறை இழைத்துள்ளது. அதில் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பங்கு முதன்மையானது. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதார தடையை விரும்பாத போதும், பிரிட்டன் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு நேட்டோ, ஐரோப்பிய யூனியன், ஜி-7 என்ற வரிசையில் காணப்பட்ட ஐரோப்பிய ஒத்துழைப்பு நாடுகளை பயன்படுத்திக் கொண்டு அந்த நாடுகளை கட்டுப்படுத்தி ரஷ்யாவுக்கு எதிரான பொருளதாதாரத் தடையை சாத்தியப்படுத்தியுள்ளது.

கலாநிதி
கே.ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments