நிதி மூலதனத்தின் செல்லப்பிள்ளை சுனக் பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்துவாரா...? | தினகரன் வாரமஞ்சரி

நிதி மூலதனத்தின் செல்லப்பிள்ளை சுனக் பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்துவாரா...?

இங்கிலாந்து அரசியலில் அண்மைய பல மாதங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சுற்றிச் சுழன்று வந்த பிரதமர் பதவி தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வசமாகி உள்ளது.

இதற்கு முன்னர் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் 44 நாட்களிலேயே அவரது சொந்த கட்சியினரால் துரத்தப்பட்டு இவர் அரியணை ஏற்றப்பட்டுள்ளார். ‘டிரஸ் பதவி இழப்பு ஒரு துளி கண்ணீருக்கு கூட தகுதியற்றது’ என வர்ணிக்கப்படும் அளவுக்கு அவரின் 44நாட்கள் ஆட்சி அமைந்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் வாய்ப்பை பெற்ற ரிஷி சுனக்கின் ஆட்சி எப்படி அமையப்போகிறது? வீழ்ச்சி அடைந்து கொண்டுபோகும் சூரியன் உதிக்காத தேசம் எனப்பட்ட இங்கிலாந்தின் பொருளாதாரம் மீண்டும் மேன்மை பெறுமா? இதுவே இன்றைய இங்கிலாந்து மக்களின் ஒற்றைக் கேள்வியாக உள்ளது. இந்தியர்கள் பலராலும் குறிப்பாக இந்துத்துவ ஆதரவாளர்களால் பெருமைக்குரிய நிகழ்வாக கருதப்படும் ரிஷி சுனக்கின் பிரதமர் நியமனம் தொடர்பில் உலகளாவிய ரீதியில் மாறுபட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

உலகின் பல தேசங்கள் தமது ‘மண்ணின் மைந்தர்களுக்கு’ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இந்த சூழலில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்டு, 1960களில் பிரித்தானியா வந்து குடியேறிய குடும்பம் ஒன்றை சேர்ந்த ரிஷி சுனக் நாட்டின் உச்சபட்ச பதவியான பிரதமர் நாற்காலியில் உட்கார்வது பிரிட்டனின் பன்முகத்தன்மையை காட்டுகிறது என பலர் கூறுகின்றனர்.

ஆனால் பூர்வீகம் மட்டுமல்ல இந்திய கலாசாரத்தின் ஆணிவேரான மதமும் பிரித்தானியர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்தியே வைத்திருக்கிறது எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தன்னை ஒரு பெருமைமிக்க இந்து என்று பலமுறை பகிரங்கமாகவே குறிப்பிட்ட ரிஷி, இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் 2014ம் ஆண்டு தெரிவானதும் பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்திருந்தார். தனது இந்து அடையாளத்தை பெருமையாக முன்நிறுத்துபவர் என ரிஷி சுனக்கை பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்தியா, இலங்கை உட்பட பல ஆசிய ஆபிரிக்க தேசங்களை காலனிகளாக்கி அவற்றின் மீது ஆளுமை செலுத்தி அந்த நாடுகளின் வளங்களை தம்வசமாக்கிய நாடு பிரிட்டன், அவர்களது காலனித்துவ ஆட்சியின் பல கொடுமைகளை அனுபவித்த நாடு இந்தியா. இப்பொழுது ஒரு இந்தியர் அந்த நாட்டின் பிரதமராக வந்து விட்டது ‘இந்தியாவின் பெருமிதம்’ என்று புளகாங்கிதம் கொள்கிறார்கள். இந்துத்துவவாதிகள் ஆனால் அதே காவிக் கும்பல்தான் இந்திய குடிமகனை மணந்து இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியை ‘இத்தாலியர்’ என இகழ்ந்தும் அவர் இந்தியாவின் பிரதமராவதா என கேள்வி எழுப்பி அதனை வைத்து அரசியல் செய்தும் வருகிறது.

பெரும் பணக்காரரான ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு 800 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் என்கிறது கணக்கீடு. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிக சொத்து உடையவர் ரிஷி சுனக்தான் என்பது மட்டுமல்ல, பிரிட்டன் அரச குடும்ப சொத்தைவிட இரு மடங்கு சொத்து இவருக்கு உண்டு எனவும் சிலர் கூறுகின்றனர். இந்திய கார்ப்பரேட்டுகளில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள்தான் ரிஷி சுனக்கின் மனைவி.

ஒருதடவை ரிஷி சுனக்கின் மனைவி பிரிட்டனில் வரி ஏய்ப்பு செய்தமை அம்பலமான பொழுது ரிஷி சுனக்கின் அரசியல் வாழ்வே பெரிய கேள்விக்குள்ளாக்கப் பட்டது. அப்போது அவர்கள் இருவரும் பகிரங்கமாகவே வருத்தம் தெரிவித்தனர். அப்போது பிரிட்டனின் நிதி அமைச்சராக இருந்தவரின் மனைவி வரி கட்டாமல் இருந்தது தற்செயலானது என்பது நம்பக் கூடியதா...? என்கிற கேள்வியும் எழுப்பபட்டது.

தொழிலாளி வர்க்க வட்டத்தில் ஒருவர் கூட தனக்கு நண்பர் கிடையாது என்பதை ‘பெருமையுடன்’ குறிப்பிடும் ரிஷி சுனக் சமீபத்தில் தனது வீட்டில் கட்டிய ஒரு நீச்சல் குளத்திற்கு செய்த செலவு 15,00,000 ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் என செய்திகள் வெளியாகி இருந்தன.

இத்தகைய பின்னணி கொண்ட, பிரிட்டன் நிதி மூலதனத்தின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படும் ஒருவர் பிரிட்டன் உழைப்பாளி மக்களின் பிரச்சினைகளை உணர்வாரா? அவர்கள் பக்கம் இவர் பார்வை செல்லுமா? எனும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

அதேபோல பகிரங்கமாக தனது இந்து அடையாளத்தை வெளிப்படுத்தும் அவர் பிரிட்டனின் பன்முகத்தன்மையை வலுப்படுத்து வாரா? எனும் கேள்வியும் உள்ளது. பிரிட்ட னுக்கு வரும் அகதிகளை ருவாண்டா தேசத்துக்கு நாடு கடத்தும் ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரித்த ரிஷி சுனக், உலகெங்கும் இருந்து குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் இருந்து பாதிப்புக்களுடன் வரும் அகதிகளுக்கு ஆதரவாக இருப்பாரா? என்பதும் கேள்விக் குறியே.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகளை அப்படியே பின்பற்றும் ரிஷி சுனக். பிரிட்டனின் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என சீனாவை சாடி இருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது எனும் Braxit கருத்தை வலுவாக ஆதரித்தவர் ரிஷி சுனக். இன்று இந்த முடிவு பாரிய பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரிட்டன் மக்கள் பெரும்பாலானோர் இதனை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் பிரதமராகி இருக்கும் ரிஷி சுனக்கின் நிலைப்பாடு என்ன என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தால் தாங்கள் பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவோம் என வட அயர்லாந்து எச்சரிக்க இதற்கு நேர்மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரா விட்டால் நாங்கள் தனி நாடாக போய்விடுவோம் என ஸ்கொட்லாந்து எச்சரிக்கின்றது. ஒன்றுபட்ட பிரிட்டனின் எதிர்காலத்தை எப்படி ரிஷி சுனக் பாதுகாக்கப் போகிறார் என்பதும் அவருக்கு பெரிய சவால். பிரிட்டன் அரசின் இலவச மருத்துவ வசதிகளை தனியார் மயமாக்க வேண்டும் என கூறுபவர். பெரும் பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகளை ஆதரிப்பவர். தொழிற்சங்கங்களின் போராட்ட உரிமைகளை சிதைக்க வேண்டும் என்கிற சிந்தனை கொண்டவர். பிரிட்டன் எங்கும் ரயிலவே/ தபால்/ ஆசிரியர்கள் போராட்டங்கள் தீவிரமாகிவரும் நிலையில் இதனை எப்படி கையாளப் போகிறார் என்பதும் மக்களின் சந்தேகமே.

உலகின் உற்பத்தி மையமாக இருந்த பிரிட்டன் இன்று பெரும்பாலும் நிதி மூலதன சந்தையாக மாறிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. ரஷ்ய, -உக்ரைன் போர் பல பாதக பிரச்சினைகளை பிரிட்டனின் வாசற்படியில் கொண்டு வந்து சேர்த்து நெருக்கடிகளை அதிகரிக்க வைத்துள்ளது.

இப்படியான இக்கட்டான நிலையில் இன்று நாடு தேர்தல் ஒன்றை சந்திக்குமானால் ரிஷி சுனக் அங்கம் வகிக்கும் கொன்செர்வேற்றிவ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

ரிஷி சுனக் மூலம் நிலைமை மாறும் என பலரும் குறிப்பாக அவரது கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். இந்த ஆசை நிறைவேறுமா? வரும் நாட்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

கோவை. நந்தன்

Comments