மே தினம்: நாடெங்கும் நாளை 20 கூட்டங்கள், ஊர்வலங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மே தினம்: நாடெங்கும் நாளை 20 கூட்டங்கள், ஊர்வலங்கள்

* ஐ.தே.க. - கொழும்பில், n சு.க. - கண்டியில்

*ஜே.வி.பி. - கொழும்பு, யாழ்ப்பாணம்

*ஒன்றிணைந்த எதிரணி - கொழும்பு

* இ.தொ.கா. - கினிகத்ஹேன

* த.மு.முன்னணி - தலவாக்கலை

* த.தே.கூட்டமைப்பு - கிளிநொச்சி, அம்பாறை

 

கே. அசோக்குமார், செல்வநாயகம் ரவிசாந்த், சுமித்தி தங்கராசா

 

ர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் நாளை ஆகும். இதனையொட்டி வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இம்முறை கொழும்பிலேயே அதிகளவு மேதின ஊர்வலங்கள் நடத்தப்படவுள்ளன.

நாளை நடைபெறும் மேதினத்தை முன்னிட்டு கண்டியிலும் கொழும்பிலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு முறைகளுக்கென சுமார் 8265 பொலிஸார்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, தலவாக்கலை, கினிகத்ஹேன மற்றும் கிழக்கு மாகாணத்தையும் சேர்த்து நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும்போக்குவரத்து கடமையில் சுமார் 10,000 பொலிஸார் வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்கூட்டம் “எக்க மிட்டட்ட ஹரி அத்தட்ட’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கண்டி கண்னொருவயிலிருந்தும் கண்டி உயர் மகளிர் கல்லூரி அருகிலிருந்தும் இரண்டு ஊர்வலங்களாக புறப்பட்டு கெட்டம்பே மைதானத்தை ஊர்வலம் வந்தடையும்.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக அவர்களது உரிமையை பாதுகாக்கும் நோக்குடன் விசேட திட்டமொன்றும் ஜனாதிபதினால் நாளைய தினம் முன்வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி

‘மக்களின் வெற்றிக்கான மேதினம்’

என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மேதின கூட்டமும் ஊர்வலமும் கொழும்பில் நடைபெறவுள்ளன.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பொரல்லை, கெம்பல் மைதானத்தில் மேதின கூட்டம் நடைபெறவுள்ளது. மாளிகாவத்தை பகுதியிலிருந்து பிற்பகல் 2.00 மணிக்கு ஊர்வலம் புறப்படுவதுடன் 3.00 மணிக்கு கெம்பல் மைதானத்தில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தொழிலாளர் உரிமை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மிக விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் போன்ற விடயங்களை வலியுறுத்தி நாளைய மே தினக் கூட்டம் நடைபெறும்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

தமிழ் முற்போக்கு முன்னணி

அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்கு முன்னணியின் மேதின ஊர்வலம் தலாவாக்கலையில் நடைபெறுகிறது.

கட்சியின் உபதலைவர் பி. திகாம்பரம், உபதலைவர் இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் நடைபெறுகிறது.

தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்துக்கருகிலிருந்து மேதின ஊர்வலம் ஆரம்பமாகிறது. அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக்கூட்டம் கினிகத்தேன பஸ் நிலையம் அருகே நடைபெறவுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், முத்து சிவலிங்கம் தலைமையில் மேதின ஊர்வலம் கினிகத்ஹேன பிள்ளையார் கோவிலடியிருந்து காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

யாழ்.பல்கலைக்கழகத்தில்...

இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரங்கச் செயற்பாட்டுக் குழு, தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், சமூக விஞ்ஞான ஆய்வு மன்றம் ஆகிய ஆறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் மேதின நிகழ்வு நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை முற்பகல்- 09.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் மேதினப் பேரணி ஆரம்பமாகி கந்தர்மடம் ஆத்தி சூடி வீதி, பலாலி வீதியூடாகப் பல்கலைக்கழக முன்றலைப் பேரணி சென்றடையும். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக முன்றலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.தங்கராஜா தலைமையில் மேதினக் கூட்டம் இடம்பெறும்.

இதன் போது தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் தலைவர்களின் உரைகள் நடைபெறும்.

தேசம், இறைமை, சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வை முன்வை!, வட-கிழக்குத் தமிழ்மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்பதை அங்கீகரி, அரசியல் கைதிகளை விடுதலை செய்!, காணாமல் போனோருக்கு நீதி வழங்கு, மக்களிடம் பறித்த அனைத்து நிலங்களையும் உடனடியாகக் கையளி உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாபெரும் மேதின நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில்....

யாழ்ப்பாணத்தில் புதிய - ஜனநாயக மாச்சிச- லெனினிசக் கட்சியின் புரட்சிகர மே தினப் பொதுக்கூட்டம் நாளை திங்கட்கிழமை பி.ப. 5 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கட்சியின் வடபிரதேச செயலாளர் தோழர் கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள இப் பொதுக்கூட்டத்தில் விசேட உரையினைப் பு.ஜ.மா.லெ. கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல்,சிறப்புரைகளை அரசியல் குழு உறுப்பினர்கள் தோழர் க.

தணிகாசலம் மற்றும் தோழர் சோ. தேவராஜா ஆகியோரும், வன்னி மாவட்டங்களின் செயலாளர் தோழர் என். பிரதீபன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியின் பிரதிநிதி தோழர் த. ஸ்ரீபிரகாஸ் அவர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தோழர் இ. தவராஜா மற்றும் தோழர் கா. பஞ்சலிங்கம் ஆகியோரும் விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதி தோழர் பொ.

முருகேசு அவர்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயலாளர் தோழர் ச. தனுஜனும் ஆற்றவுள்ளனர்.

மே தினப் பேரணி பி.ப. 3 மணிக்கு கே.கே.எஸ். வீதி,கொக்குவில் சந்தியிலிருந்து ஆரம்பமாகிறது

ஒக்டோபர் சோசலிசப் புரட்சியின் பாதையில் அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க அணிதிரள்வோம் என்ற கோசத்தை முன்னிலைப்படுத்தி உழைக்கும் மக்களே! ஒடுக்கப்படும் தேசிய இனங்களே! இளைஞர்களே! மாணவர்களே! ஒன்றுசேருங்கள்! என்ற கோரிக்கையை முன்வைத்து இம் மே தினப் பேரணியும் பொதுக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.

காலிமுகத்திடலில் மஹிந்த ராஜபக்ஷ

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பு காலி முகத்திடலில் தனது மேதின கூட்டத்தை நாளை நடத்துகிறது.

கொழும்பு கொம்பனித்தெரு சந்தியிலிருந்து பிற்பகல் 2.00 மணிக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின ஊர்வலம் ஆரம்பமாகிறது. மாலை 3.00 மணிக்கு காலிமுகத்திடலில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

ஜே.வி.பி

‘பொருளாதார அபிவிருத்திக்கான மக்கள் சக்தியும், சமூக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பும்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக்கூட்டம் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு டி.ஆர்.சி மைதானத்தில் நடைபெறும்.

தெஹிவளை எஸ். த.எஸ் ஜயசிங்க மைதானத்திலிருந்து பகல் 12.00 மணிக்கு ஊர்வலம் ஆரம்பமாகிறது. மாலை 4.00 மணிக்கு ஜே.வி.பியின் மேதின கூட்டம் நடைபெறும்.

யாழ். நகரிலும்ஜே.வி.பி

அத்துடன் யாழ். நகரிலும் ஜே.வி.பியினர் மே தினக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். யாழ்.ராசாவின் தோட்டச் சந்தியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு முற்​ற வெளியை வந்தடையும்.

ஜாதிக்க ஹெல உறுமய

ஜாதிக்க ஹெல உறுமய கட்சி முதல் தடவையாக மேதின கூட்டத்தை நடத்தவுள்ளது. கட்சியின் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்கரனவக்க தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் சுமார் 1500 கூலித் தொழிலாளர்க்கு (நாட்டாமி) ஆயுட்காப்புறுதிகளும் வழங்கப்படவுள்ளன.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மேதினக் கூட்டம் விகாரமஹாதேவி திறந்த வெளி அரங்கில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பொரளை ஆயுர்வேத சந்தியிலிருந்து ஊர்வலம் பகல் ஒரு மணிக்கு புறப்படும்.

கொழும்பில் விசேட போக்குவர்த்து ஏற்பாடு

மே தின ஊர்வலங்கள், கூட்டங்களை முன்னிட்டு கொழும்பு,கண்டி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, கினிகத்ஹேன, தலவாக்கலை, பிரதேசங்களில் விஷேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகளை பொலிஸார் ஏற்பாடுசெய்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்​கிழமை இரவு முதல் இப்போக்குவரத்து விதிமுறை அமுலாகும் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பில் சுமார் 17 மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறுவதன் காரணமாக பயணிகள் பஸ் போக்குவரத்து பாதைகளிலும் மாற்று வழிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இத்தினத்தில் 138, 154, 176 மற்றும் 103 இலக்க பஸ்களுக்கு இவ்வாறு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து கண்டி செல்லும் வாகனங்கள் மற்றும் கண்டியிலிருந்து கொழும்பு வரும் வாகனங்கள் பொலிஸாரின் அறிவித்தல்படி மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கண்டி வீதியினூடாக கொழும்பிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் பண்டாரநாயக்க சுற்றுவட்டம், இங்குருகடே சந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்க சுற்றுவட்டம், ஆமர் வீதி சந்தியினூடாக சென்றல் வீதி வழியே புறக்கோட்டைக்கு பயணிக்க முடியும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்று 30ஆம் திகதி இரவு வேளையில் கொழும்பு நகரின் பல பிரதேசங்களில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை, பேஸ்லைன் வீதி, சரணங்கர வீதி மற்றும் கொம்பனிவீதி ஆகிய பிரதேசங்களின் சில வீதிகள் மூடப்படும் அதேவேளை மேலும் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Comments