சமஷ்டியை அடிப்படையாக கொண்டு நாட்டை துண்டாட இடமளிக்க முடியாது | தினகரன் வாரமஞ்சரி

சமஷ்டியை அடிப்படையாக கொண்டு நாட்டை துண்டாட இடமளிக்க முடியாது

புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒற்றையாட்சியாக இருக்கும் இலங்கையை சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டு துண்டாடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகளை புலம்பெயர்ந்து வாழ்கின்ற சிங்கள சமூகமும் தடுத்து நிறுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர் சிங்கள சமூகத்தினரின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் செயலமர்வு நடைபெற்றது.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற சிங்கள சமூகத்தினரின் ஏற்பாட்டில் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் சிறந்த எதிர்காலத்திற்கான நிபுணத்தவர்கள் என்ற தலைப்பில் இந்த செயலமர்வு நடத்தப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்த செயலமர்வுகள் நடத்தப்படுவதோடு, புதிய அரசியலமைப்பு, சமஷ்டித் தீர்வு ஆகியவற்றுக்கு எதிரான விளக்கங்கள் இதனூடாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, “ஒற்றையாட்சியில் சமஷ்டித் தீர்வை வழங்கினால் என்ன என்று சிலர் கூறலாம். மாறாக ஏன் அதனை வழங்காமல் இருக்கவேண்டும் என்றே நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டை ஒற்றையாட்சியாகவே வைத்துக் கொள்வதற்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இன்றுவரை இலட்சக்கணக்கான எமது முன்னோடிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். எமது முன்னோர்கள் இவ்வளவு அர்ப்பணிப்புக்களை செய்து இந்த நாட்டை ஒற்றையாட்சியாக நிரந்தரமாக வைத்துக் கொள்வதற்கு செயற்பட்டிருக்கின்ற தருணத்தில் அதனை அரசியலமைப்பின் ஊடாக சமஷ்டியாக மாற்றி தட்டு ஒன்றில் வைத்து வழங்குவதற்கு முயற்சி செய்துவரும் நிலையில் நாங்கள் மௌனமாக இருந்தால் அது எமது முன்னோர்களுக்கு நாம் இழைக்கும் துரோகமாகிவிடும்” என்றார். 

Comments