இஸ்ரேல்−இந்திய | தினகரன் வாரமஞ்சரி

இஸ்ரேல்−இந்திய

இந்தியாவின் அரசியல் சித்தாந்தத்தை வகுப்பதில் 1950 களில் காந்தியும் நேருவும் பெரும் பங்காற்றினார்கள். அவர்களது சிந்தனையை ஊன்றிக் கொண்ட இந்தியா அகிம்சை, சுதேசியம் என்ற வரைபுக்குள்ளால் உலக சமாதானத்தையும் சுதேச பொருளாதாரத்தையும் ஆசியாவில் மட்டுமல்ல உலகத்திற்கே போதித்தது. அணிசேராமை என்ற கருத்தியலினூடாக உலக வரைபடத்தில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கான அணியொன்றை தோற்றுவித்தது, இத்தகைய கொள்கைகளை காலம் காலமாக கடைப்பிடித்தது. ஆனால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரச முறைப் பயணமாக மூன்று நாள் சென்றுள்ளார். இக்கட்டுரை இஸ்ரேல் - இந்தியா தந்திரோபாய உறவு பற்றி உரையாட விளைகிறது.

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றதற்காக நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது நதுராம் கோட்சே(Nathuram Godse) குறிப்பிட்ட வார்த்தைகள் நினைவுகூறத்தக்கது. நவீன இந்தியாவை உருவாக்குவதற்காகவே காந்தியைச் சுட்டேன். இந்தியா இராணுவ வல்லமையுடனான வல்லரசாகவும் பெரும் பொருளாதார தேசமாகவும் மாறவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவரை சுட்டுக்கொன்றேன் எனக் குறிப்பிட்டார். நதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர் என்றும் அதிலிருந்தே பாரதீய ஜனதாக்கட்சி உருவானதென்பதும் யாவரும் அறிந்ததே. அதனடிப்படையில் இந்திய தேசியத்தின் காந்தி – நேரு சிந்தனை தகர்ந்து பாரதீய ஜனதாவின் அல்லது ஆர்.எஸ்.எஸ். இச் சிந்தனை மீதேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா அணிசேராமை என்ற வெளியுறவுக் கொள்கையை முழுமையாகக் கைவிட்டது என்பது பிரதமரின் இஸ்ரேல் விஜ யம் தெளிவுபடுத்துகின்றது.

இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது வரலாற்று சிறப்பாகவும் பெருமிதமாகவும் அமைந்துள்ளது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகால இராஜரீக உறவு நிலவும் நாடுகள். ஆனால், எந்த பிரதமரும் இஸ்ரேலுக்கு செல்லவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இஸ்ரேலிய பிரதமர் ஏரியன் ஷெரோன் இந்தியா வந்திருந்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்காக இஸ்ரேலியர் காத்துக் கிடந்தனர். மோடிக்கு செங்கம்பள வரவேற்புக் கொடுத்தது இஸ்ரேல் என்பதன் மூலம் இந்தியாவுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் உணர முடிகின்றது. அதுமட்டுமல்ல இஸ்ரேலிய பிரதமர் நெதென்யாகு உரையாற்றும் போது உலகத்தின் முதன்மையான நாட்டின் முதன்மையான தலைவர் நரேந்திர மோடி அவர்கள் இஸ்ரேலுக்கு வருகை தந்ததால் நாம் பெருமையடைகின்றோம். இஸ்ரேலின் உண்மையாக நண்பன் இந்தியா என்றார். பதிலுக்கு இந்திய பிரதமர்; இந்தியாவின் சிறப்பு மிக்க கூட்டாளி இஸ்ரேல் என விளித்துக் கொண்டதுடன் தானே முதல் தடவையாக இந்தியப் பிரதமராக இஸ்ரேல் வந்ததாக குறிப்பிட்டார். இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவியதும், பழைய நண்பன் மீண்டும் சந்தித்தது போல் அமைந்ததுடன் யூதர்களின் உழைப்பையும் சுறுசுறுப்பையும் எதிர்த்து போரிடும் குணத்தையும் இந்தியப் பிரதமர் பாராட்டத் தவறவில்லை. ஏறக்குறைய பிரதமர் மோடி உற்சாகமான உறவுக்கான பயணம் போன்றே அமைந்திருந்தது.

இரு நாடுகளும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகள் என்ற வகையில் பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம், பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, வேளாண்மை, வர்த்தகம், இராஜாங்க உறவு, தொழிநுட்ப உறவு என்பன பிரதான இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் மோடியின் “Make in India” திட்டத்திற்கு ஆதரவு பெறும் வகையில் இந்திய நிறுவனங்களுடன் கூட்டுத் தொழில் ஆரம்பிக்கவும், இஸ்ரேலில் இராணுவத் தளபாட உற்பத்தி அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அனேக ஊடகங்கள் இஸ்ரேல் - இந்திய உறவினைப் பற்றி குறிப்பிடும் போது இது ஒரு தந்திரோபாய நட்புறவு (Strategic Relationship) என வர்ணித்தன. தந்திரோபாயம் என்பது ஏதோ ஒரு இலக்கை அடைவதற்கான வழிமுறையைக் குறிப்பதாகும். அந்த வகையில் இருநாட்டுக்குமான உறவின் பிரதமர் மோடி ஏற்படுத்திய திடீர் திருப்பம் தந்திரோபாயமானதாகும்.

அவரது அமெரிக்க விஜயத்தையும், இஸ்ரேலிய விஜயத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது கடினமானது. ஆட்களும், நாடும் தான் மாறியிருந்ததே அன்றி ஏனையவை ஒரேமாதிரியானதாகவே அமைந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்கா நட்புகளுடன் தனது உறவைப் பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. தந்திரோபாய நட்புறவானது ஏதோ ஒரு இலக்குடன் பயணிக்கின்றது. அது உலகத்தை மேற்கு கூட்டணி கைப்பற்றுவதற்கான உத்தியாக அமையவுள்ளது. அதில் எப்படியாவது இந்தியாவுக்கும் பங்கிருக்கிறது என்பதை மோடி வெளிப்படுத்த முயலுகிறார். மேற்காசியா முழுவதும் எழுந்துள்ள கொதி நிலை அரசியலானது பயங்கரவாதத்தை புதிய எதிர்ப்பு வாதத்தின் குறிகாட்டியாக அடையாளப்படுத்துகிறது. அதிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் இஸ்ரேலையும்- இந்தியாவையும் சம நேரத்தில் தாக்குகின்றன. இதனை தடுப்பதற்கு கூட்டான ஒத்துழைப்பு அவசியமாகின்றது. இதனையே இந்திய தரப்பு முதன்மைப்படுத்தியது. கட்டார், சிரியா விவகாரங்களில் இஸ்ரேல் செயற்படுவது போல் பாகிஸ்தான் விடயத்தில் இந்தியா செயற்பட முனைகிறது. இதுவே இந்திய தரப்பின் பிரதான தந்திரோபாயமாக அமைந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை பிராந்திய மட்டத்திலும் வல்லரசாக எழுச்சி பெறுவதற்கான காரணத்தின் விழிம்பிலுள்ளது. இதனால் இந்தியாவிடம் சில துறைகளின் தொழிநுட்ப பற்றாக்குறையும் அதற்கான விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மட்டுப்பாடானதாக அமைந்துள்ளது. இதனால் அத்தகைய விஞ்ஞான தொழிநுட்ப வலுவைத் தேடிக் கொள்ளவும் இஸ்ரேலுடனான முதலீட்டை ஈர்த்துக் கொள்ளவும் அதிக உபாயத் தனமனதாகவே மோடியின் விஜயம் அமைந்துள்ளது.

அது மட்டுமன்றி இந்தியா காலம் காலமாக கடைப்பிடித்து வந்த வெளியுறவுக் கொள்கையை கைவிட்டுவிட்டது. காங்கிரஸ் வரலாற்றிலேயே பலஸ்தீன விடுதலைக்கும் அதன் போராட்ட அணுகுமுறைக்கும் காவலாக இந்தியா செயல்பட்டது. ஆனால், புதிய உலக ஒழுங்கின் உதயத்திற்குப் பின்பு உலகம் முழுமையாக கொள்கைவாதங்களற்ற தேசமானது போல் இந்தியாவும் மாறிவிட்டது. அதிலும் பாரதீய ஜனதாக் கட்சியின் தீவிர வலது சாரி அணுகுமுறையின் ஊடாக மேற்கு உலகத்துடன் சேர்வதாக அமைந்துள்ளது. அதனடிப்படைக்குள்ளே இந்தியாவின் அதீத தீவிரப்போக்கும் இஸ்ரேலுடனான உறவும் வெளிப்படுத்தும் யதார்த்த நிலை எழுந்துள்ளது.

இஸ்ரேலிய அரசும் அதன் அணுகுமுறையும் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஏழு தசாப்தங்களாக பலஸ்தீனர்கள் மீது ஏற்படுத்திவரும் ஆக்கிரமிப்பும், தாக்குதல்களும், அழிவுகளும் இந்திய அரசுக்கு சாதாரணமாகிவிட்டது. இந்திய அரசு - இஸ்ரேல் உடன் கூட்டுச் சேர்ந்தமையானது அதனையே உணர்த்துகிறது. பிராந்திய அரசுகள் உசாரடைய வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், இலங்கை என்பன அதிகமாக சீன பக்கம் சாய்ந்திருப்பதும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குமான பதிலீடு இஸ்ரேல் அணுகுமுறையாக அமையவுள்ளதா என சந்தேகிக்க தோன்றுகிறது.

இந்திய மிதமான, சமாதானமான அகிம்சைவாத அரசு என்கின்ற அடிப்படை முறையை முற்றாகத் தகர்த்து விட்டது. ஏறக்குறைய கடந்த காலத்தில் பின்பற்றிய இந்திய நலன் சார்ந்த கொள்கை உண்மைத் தோற்றத்தை மோடி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறலாம். இதுவரை இந்தியா உலகத்திற்கு ஒரு தோற்றத்தையும் பிராந்தியத்திற்கு இன்னொரு தோற்றத்தையும் காட்டிய நிலையை மோடியின் இஸ்ரேலிய விஜயம் தகர்த்து விட்டது.

இந்திய பிரதமர் தங்கியிருக்கும் ஹோட்டல் எந்த வெடிபொருட்களாலோ வேதியல் பொருட்களாலோ தாக்கமுடியாத பாதுகாப்பு கோட்டையாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிகளுக்குப் பின்பு மோடியே தங்கியிருக்கும் பாதுகாப்பு கோட்டையாகும். அத்துடன் இந்தியப் பிரதமரும் இஸ்ரேலுக்கு வழங்க எடுத்துச் சென்ற நினைவுப் பரிசில் 09 – 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு காப்பர் தகடுகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தோரா சுருளும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடமாகும். இது இஸ்ரேல் - இந்திய உறவின் வலிமையை உணர்த்துகின்றது.அதன் எதிர்காலத்தை பறைசாற்றுகிறது.

எனவே, பிரதமர் மோடியின் மூன்று நாள் விஜயம் சாதாரணமானதல்ல. வலிமையான தந்திரோபாய நட்புறவாக மலர தொடங்கியுள்ளது. யூதர்களின் இந்தியா மீதான அணுகுமுறை புதிய திருப்பங்களை ஏற்படுத்த விளைகிறது. அவர்களது உழைப்புக்கும், சுரண்டலுக்கும் முன்னால் இந்திய சமூகம் எதிர்கொள்ளுமா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. யூதர்களின் முதலீடுகளால் இந்தியாவும் தென்னாசிய பிராந்தியமும் அதிரப் போகின்றது. பாகிஸ்தான் அதிகமான நெருக்கத்தை சீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்துக்குள் மோடியின் விஜயம் அமைந்துள்ளது.

தென்னாசியாவில் ஏனைய நாடுகள் போன்று பாகிஸ்தான் செயற்படாது. அதுமட்டுமல்லாது சீன - இந்திய எல்லைத் தகராற்றின் தீவிரமாகும் சந்தர்ப்பமும் உணரப்பட்டதன் விளைவாகவும் இந்தியப் பிரதமரது விஜயம் சாத்தியப்பட்டிருக்கலாம். அதனால், பிரதமர் மோடி இஸ்ரேலிய விஜயம் பயங்கரவாதம், எல்லைத் தகராறு, பொருளாதாரம், தொழிநுட்ப போட்டியின் எழுச்சி என்பன மட்டுமல்லாது அகிம்சை, சமாதானம், அணிசேராமை என்கின்ற பழையவற்றின் முடிவுகளை அறிவித்துள்ள விஜயமாக அமைந்துள்ளது.

Comments