கதிர்காம கந்தன் கொடியேற்றம் 24இல் ; 23இல் அன்னதானம் | தினகரன் வாரமஞ்சரி

கதிர்காம கந்தன் கொடியேற்றம் 24இல் ; 23இல் அன்னதானம்

காரைதீவு குறூப் நிருபர்

 

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தனாலயக் கொடியேற்றம் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுமென கதிர்காம பஸ்நாயக்க நிலமே வி.ரி.குமாரகே தெரிவித்தார்.

இக்கொடியேற்றத்திருவிழா கதிர்காமம் பால்குடிபாவா பள்ளிவாசலில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏலவே பஞ்சாங்கம் வேல்சாமியின் பாதயாத்திரை நிகழ்ச்சிநிரல் மற்றும் நாட்காட்டியில் குறிப்பிட்டிருந்ததன்படி எதிர்வரும் 23ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெறுமென ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் கதிர்காம பஸ்நாயக்க நிலமேயுடன் நேற்று தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்னதானம் 23இல் ஆரம்பம்!

இதேவேளை கதிர்காமத்தில் அன்னதானம் 23இல் ஆரம்பமாகின்றது. இந்த யாத்திரீகர்கள் விடுதியிலும் அண்மையில் ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்ட தெய்வானைஅம்மன்ஆலய அன்னதானமண்டபத்திலும் 23ஆம் திகதியே அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டுவிடும்.

கதிர்காமம் இந்து கலாசார திணைக்கள யாத்திரீகர்கள் விடுதியில் வருடாந்தம் தொடர்ந்து அன்னதானத்தை சிறப்பாக நடாத்திவரும் சிவபூமி தொண்டர்சபையினர் இம்முறையும் அன்னதானத்தை கொடியேற்றம் தொடக்கம் தீர்த்தோற்சவம் வரை நடாத்தவுள்ளனர்.

அன்னதானசபையின் தலைமைப்பொறுப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தகவல்தருகையில்:

இம்முறை அடியார்களுக்கான அன்னதானத்தை நாம் 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருக்கின்றோம். பாதயாத்திரீகர்கள் வெளிமாவட்ட பக்தர்கள் அனைவருக்கும் வாழையிலையில் விருந்தளிப்பதற்காக நாம் 23ஆம் திகதியே எமது பணியை ஆரம்பிக்கவிருக்கின்றோம்.

அதற்கான பணிகளை இப்போதே ஆரம்பித்திருக்கின்றோம்.

மரக்கறிகளின்விலைகள் சற்று அதிகமாகவிருந்தமை மற்றும் வெள்ளம்வரட்சி காரணமாக எமக்கான உதவிகள் சற்று குறைவடைந்திருந்தாலும் வழமைபோல அன்னதானம் இடம்பெறுமென திரு. ஞானசுந்தரம் மேலும் தெரிவித்தார். 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.