சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவங்களை ஐ.தே.க உறுதிப்படுத்தும் | தினகரன் வாரமஞ்சரி

சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவங்களை ஐ.தே.க உறுதிப்படுத்தும்

வடகொழும்பில் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தினை ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுத்தும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி.ராமிடத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இது குறித்து சி.வை.பி ராம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியானது சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் அடையாளத்தினை உறுதிப்படுத்தாதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.

அதன்போது அந்த விடயத்தினை அவர் கவனத்தில் கொண்டதோடு குறிப்பாக சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் செறிந்து வாழும் பகுதியில் நிச்சயமாக அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் மக்கள் இம்முறை நிலையான அபிவிருத்தியினை கருத்திற்கொண்டு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்திற்கு உள்ளூராட்சி மன்றங்கள் கிடைக்கின்றபோது நாட்டினை அபிவிருத்தியில் மேலும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான பல திட்டங்களை தாம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பணிகளை திட்டமிட்டவாறு முன்னெடுக்க வேண்டும் என்று கூறியதோடு வடகொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பணிகளை முழுமையான பொறுப்பினை ஏற்று முன்னெடுக்குமாறும் என்னிடத்தில் பிரதமரும் எமது கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளர்.

மேலும் நாம் சிறந்தவொரு எதிர்காலத்தினை கட்டியமைக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். அபிவிருத்தியில் முன்னோக்கப் பயணிக்க வேண்டிய காலகட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எமது பிரதிநிதித்துவங்களை நாம் சரியான முறையில் தெரிவு செய்ய வேண்டும். ஐ.தே.கவின் காலத்தில் எத்தனையோ பாரிய அபிவிருத்தி திட்டங்கள், முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றையெல்லாம் மக்கள் கருத்திற்கொண்டு இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆணைவழங்கவேண்டும். அதில் மக்கள் குழப்பமடையாது செயற்படுவார்கள் என்ற பாரிய நம்பிக்கை எமக்கு உள்ளது என்பதை பிரதமரிடத்தில் நான் தெரிவித்துள்ளேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Comments