மீட்டெடுக்கப்பட்ட உலக மகா யுத்தக் கப்பல்; மீண்டும் மூழ்கடிக்கப்பட்டது | தினகரன் வாரமஞ்சரி

மீட்டெடுக்கப்பட்ட உலக மகா யுத்தக் கப்பல்; மீண்டும் மூழ்கடிக்கப்பட்டது

அதன் பழைய தோற்றத்தில்...

ஸாதிக் ஷிஹான்

யுத்தமொன்றை யார் செய்தாலும் எவ்வாறு செய்தாலும் எப்போது செய்தாலும் அது என்றும் கொடியதாகவே இருக்கும். அழிவுகளும் இழப்புக்களும் தான் ஏற்படுமே தவிர நன்மை செய்யாது. யுத்தமானது எத்துனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எப்போதாவது ஒரு தடவை அது தொடர்பில் பேசப்படுவதை காணலாம். இதற்கு சிறந்த ஒரு உதாரணமாக ஹிரோஷிமா நாகசாகியை கொள்ளலாம். யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் பேசப்படுகின்றன. ஏனெனில் குரூரம் ஏற்படுத்தும் வடுக்கள் மாறாதவை.

அண்மையில் திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது திருகோணமலை கடற்பரப்பில் வைத்து ஜப்பானிய விமான தாக்குதல் மூலம் தாக்கியழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட எஸ்.எஸ். சகயிங் (SS Sagaing) கப்பல் சமீபத்தில் மீட்டெடுக்கப்பட்டது. மூழ்கடிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் தற்பொழுது மீண்டும் பரபரப்பாக பேசு பொருளாக அக்கப்பல் மாறியிருக்கிறது.

பிரித்தானியாவுக்குச் சொந்தமான எஸ்எஸ் சகயின் என்ற இந்தக் கப்பல், 1924 ஆண்டு கட்டப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்துள்ளது.இது சுமார் 138 மீற்றர் நீளத்தைக் கொண்ட இது பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பலாகும்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானிய கடற்படையினரின் படை நடவடிக்கைகளுக்கு உதவியாகவும் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றியிறக்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்ட இக்கப்பல் திருகோணமலை துறைமுக பிரதேசத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் திகதியன்று, ஜப்பான் விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் இக்கப்பல் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் மூழ்கியும்விட்டது.

 

 

 

 

 

இழுத்துச் செல்லப்படும் மீட்கப்பட்ட கப்பல்

அப்போது இந்தக் கப்பலுக்கு ஏற்பட்டிருந்த பாரிய சேதங்களை கவனத்தில் கொண்டு அக்கப்பல் கைவிடப்பட்டது. இந்தக் கப்பலானது 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதியன்று முழுமையாக மூழ்கடிக்கப்பட்டது. என்றாலும் சிறிது காலத்திற்கு பின்னர் அந்தப் பகுதி ஓரளவு அபிவிருத்தி செய்யப்பட்டு கொங்ரீட் இடப்பட்டு இறங்கு துறையாகவும் இலங்கை கடற்படையின் சிறிய ரக படகுகள் தரித்திருக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்ததாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டார கூறுகிறார்.

இது இவ்வாறு இருக்க, இலங்கை கடற்படையினர் அண்மைக் காலமாக தமது கடற்படைக்கு தேவையான பாரிய கப்பல்களை கொள்வனவு செய்து வருகின்ற நிலையில் திருகோணமலைத் துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பில் அப்போதைய கடற்படைத் தளபதியான அட்மில் ரவீந்திர விஜேகுணவர்தன (தற்போதைய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி) தலைமையில் 2016ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு 2017ஆம் ஆண்டு அப்போதைய கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவிடம் தரப்பட்டது. புதியதொரு இறங்குதுறையை நவீன முறையில் அமைப்பதே இந்த அபிவிருத்தி திட்டத்தின் நோக்கம்.

இந்நிலையில் சுமார் 35 அடி ஆழத்தில் மூழ்கிக்கிடந்த அந்தக் கப்பலை மீள எடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படையின் சுழியோடல் படைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்து அதன் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட கெப்டன் கிரிஷாந்த அதுகோரலவின் தலைமையில் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.

தற்காலத்தில் வெல்டிங் மற்றும் நவீன முறைகளை பயன்படுத்தியே புதிய கப்பல்கள் கட்டப்படுகின்றன அதனால் அவற்றை மீட்பதும் அப்புறப்படுத்துவதும் இலகுவாகும் மாறாக சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பழைமை வாய்ந்த முறையில் தயாரிக்கப்பட்ட இந்நக் கப்பலை மீட்பதும் அப்புறப்படுத்துவதும் இலகுவான செயலல்ல. ஏனெனில் இந்த கப்பலில் அனேகமான பகுதிகள் அக்கால முறைப்படி ஆணிகள் மற்றும் (ரிவர்ட் முறை) வேறு முறைகளில் பொருத்தப்பட்டே கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடலுக்குச் சென்று இதனை அப்புறப்படுத்துவதாயின் சுழியோடிகள் மற்றும் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அடங்கிய குழு அவசியம்.

திட்டமிட்ட ரீதியாக கடற்படை மீட்புக் குழுவினர் செயற்பட்டதில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முழு கப்பலும் 35 அடி ஆழத்திலிருந்து வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது.

சில பாகங்கள் முதலில் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் பகுதி பகுதியாக இலகு படுத்தப்பட்டு மிதக்கச் செய்யவும் மறுபுறம் பலுௗன் மற்றும் இயந்திரங்களின் அழுத்தங்களுடன் கப்பல் கடலின் மேற்பகுதியில் மிதக்கச் செய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.டோக்கியோ சீமேந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான கிரேன் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான டப்களும் மீட்பின் போது பயன்படுத்தப்பட்டன.

பாரிய திட்டம் தீட்டப்பட்டு 98 சுழியோடிகளின் சுமார் ஐந்து மாத கால அயராத தொடர் முயற்சியின் பலனாக 35 அடி ஆழத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி மீட்டெடுக்கப்பட்ட "சகயின்" திருமலை துறைமுக கடற்பரப்பை அண்டிய வேறொரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் மூழ்கடிக்கப்பட்டது.

உலகில் பவளப் பாறைகள் மற்றும் சுழியோடல் (Coral reef and Diving) என்பது சுற்றுலா துறை சார்ந்தவர்கள் மத்தியில் பிரபல்யமான விநோத விளையாட்டாகும். இவற்றை கருத்திற் கொண்டு உலகிலுள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை இலங்கை பக்கம் திருப்பும் வகையிலும் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் நோக்குடனுமே மேற்படி கப்பல் திருமலை துறைமுக கடற்பரப்பை அண்டிய வேறொரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக மகா யுத்த வரலாற்றுடன் தொடர்புபட்ட "சகயின" கப்பலை மீட்டெடுக்கும் நடவடிக்ைகயை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்ததன் மூலம் கடற்படையும் கடற்படையின் சுழியோடிகளும் சர்வதேச மட்டத்தில் நற்செயரை ஈட்டிக் கொண்டுள்ளனர்.

Comments