விகிதாசார முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

விகிதாசார முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்

விசு கருணாநிதி

 

விகிதாசாரத் தேர்தல் முறையிலேயே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்றுக்ெகாண்ட அனுபவங்களின் மூலம் புதிய கலப்பு முறை, மாகாண சபைத் தேர்தலுக்குப் பொருந்தாது என்று கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் கூறினார். அதேநேரம், ஒரே தினத்தில் ஒன்பது மாகாண சபைத் தேர்தலையும் நடத்தி முடிப்பதெனவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், இதுபற்றிய இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதை சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் சுட்டிக்காட்டியதாகவும் அவ்வேளையில், தாம் அப்போதே இதுபற்றிச் சுட்டிக்காட்டியதை அமைச்சர் நினைவு கூர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதுடன் எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவது பற்றியும் செவ்வாய்க்கிழமை இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

Comments