நல்லாட்சி அரசாங்கம் 2020வரை தொடரும் | தினகரன் வாரமஞ்சரி

நல்லாட்சி அரசாங்கம் 2020வரை தொடரும்

எம். ஏ. எம். நிலாம்

நம்பிக்ைகயில்லாப் பிரேரணைக்குப் பின்னரான அரசியல் நிலவரம் என்னவாகவிருந்தபோதிலும் நல்லாட்சி அரசாங்கத்தை 2020 வரை முன்கொண்டு செல்வதில் எந்த மாற்றமும் கிடையாதென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) கட்சியின் மறுசீரமைப்புக் கூட்டத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நேற்றைய கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சி தனித்துப் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டபோதிலும், அந்தக் கோரிக்ைகயைப் பிரதமர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், கட்சித் தலைமையில் உடனடியாக மாற்றம் செய்வதில்லை என மறுசீரமைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக ஆராயும் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் உட்பட ஏனைய நிர்வாகிகள் மற்றும் கட்சி மறுசீரமைப்பு குறித்த நடவடிக்ைககளை முன்னெடுப்பதற்கு பத்துப் பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. கட்சி மறுசீரமைப்புக் குழுக்களின் சிபாரிசுகளை ஆராய்வதற்கான கூட்டம் நேற்று சனிக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

தனித்து ஆட்சியமைக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திய போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனை முற்றாக நிராகரித்ததோடு ஜனாதிபதியுடன் நல்லாட்சி அரசாங்கத்தை 2020 வரை தொடர்வதற்கு உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்ததாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

புதிய நிருவாகம் தெரிவு செய்யப்படும் வரை கட்சியின் தவிசாளர், பொதுச்செயலாளர் உட்பட சகல நிருவாகிகளும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை அப்பதவிகளில் தொடர்வார்களெனவும் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மீதான நம்பிக்ைகயில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து கட்சி மறுசீரமைப்பு நடவடிக்ைககளைத் துரிதப்படுத்தும் பொருட்டு முதற்கட்ட நடவடிக்ைக யாக மறுசீரமைப்புக் குழுக்களின் சிபார்சுகளை ஆராயும் முதலாவது கூட்டம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பீரிஸ், ரஞ்சன் ராமநாயக்க, எஸ். எம். மரிக்கார் உட்பட பலரும் விமர்சனப் போக்கில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். எந்தப் பணிகளையும் தங்களால் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தனித்து ஆட்சியை அமைப்பதே ஒரே வழியெனவும், நம்பிக்ைகயில்லா பிரேரணையின் போது பிரேர​ைணயை ஆதரித்த அமைச்சர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கோரிக்ைககளை முற்றாக நிராகரித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2020 வரை நல்லாட்சியை தொடர ஜனாதிபதியுடன் இணக்கம் கண்டிருப்பதாகவும் தனித்து ஆட்சி அமைப்பதோ பிரேரணைக்கு ஆதரவளித்தவர்களை வெளியேற்றுவதோ உகந்ததாகக் காணப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை இந்தத் தருணத்தில் காட்ட முடியாமை பற்றியும் பிரதமர் இங்கு சுட்டிக் காட்டியுள்ளார். அமைச்சரவையை மறுசீரமைக்கும் போது ஜனாதிபதியுடன் முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படுமெனவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டதாக தெரியவருகின்றது.

இப்போது நாம் கட்சி மறுசீரமைப்பு குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். கட்சிக்கட்டுப்கோப்பு சீர்குலையாதவாறு செயற்பட வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஜனநாயக வழிமூலம் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். நம்பிக்ைகயில்லாப் பிரேரணை விடயத்தின்போது காட்டிய ஒற்றுமை தொடரவேண்டும். அதற்குக் களங்கம் ஏற்படாத வகையில் மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அனைவரதும் கருத்துகளை உள்வாங்கி அவசியமான மறுசீரமைப்பை மேற்கொள்வதே நோக்கமெனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

காலை முதல் மாலை ஐந்து மணியைத் தாண்டிய நிலையிலும் கருத்துப் பரிமாறல்கள் இடம்​ெபற்றதாகவும் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கட்சி வட்டாரம் தெரிவித்தது.

மறுசீரமைப்புக் குழுக்களில் சில சிபாரிசுகளைக் கூட்டத்தில் பங்கேற்ற பலரும் நிராகரித்தாகவும் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தலைமையிலான குழு, கட்சியின் பொதுச் செயலாளராக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையே நியமிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை உறுப்பினர்கள் பலர் நிராகரித்ததோடு திறமையுள்ள, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒருவரே நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு குழுக்களினதும் சிபாரிசுகளையும் நேற்றைய கூட்டத்தின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு காத்திரமான தீர்வைக் காணும் பொருட்டு பத்து பேர் கொண்ட குழுவை அமைக்க நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

Comments