பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட பொறிமுறை தேவை | தினகரன் வாரமஞ்சரி

பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட பொறிமுறை தேவை

நமது நிருபர்

காணாமல்போனோரின் உறவுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நேரில் தலையிட்டு விசேட பொறிமுறையொன்றை வகுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சி.வை.பி. ராம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நஷ்டஈட்டுத் திட்டம் விரைவில் அமுலுக்கு

வரவேண்டும் என்றும் துறைசார்ந்த அமைச்சுகள் இதுவிடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல்போனோர் விவகாரம் குறித்து சி.வை.பி. ராம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

“ காணாமல்போதல், காணாமல் ஆக்கப்படுதல் ஆகிய இரண்டு பதங்களுக்கிடையில் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. இயற்கை அனர்த்தம், வழிமாறுதல், சுயநினைவின்மை ஆகிய காரணங்களால் ஒருவர் காணாமல்போகும்பட்சத்தில் அதைப் பாரதூரமான விடயமாக கருத முடியாது. எனினும், பலவந்தமாக காணாமல்ஆக்கப்படுவதானது குற்றவியல் குற்றமாகும். சுருக்கமாகச்சொல்லின் மனிதப்படுகொலைக்கு ஒப்பான கொடூரச்செயலாகும்.

இலங்கையில் காணாமல்போனவர்களின் பிரச்சினை நெடுநாளாகவே இருந்துவருகின்றது. யுத்தம், தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சி, கலவரம் ஆகியவற்றால் ஆயிரக்கணக்கானவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் காணாமல்ஆக்கப்பட்டனர். இறுதிக்கட்டபோரின்போது படையினரிடம் நேரில் கையளித்த உறவினர்கள், காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களின் உறவினர்கள் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுக்களின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையாலும், இதுர சர்வதேச அமைப்புகளாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் பொறுப்புகூறவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. தமது உறவுக்கு என்ன நடந்துள்ளது என்பதை உறவினர்கள் அறிந்துகொள்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும். இதைஎவரும் சவாலுக்குட்படுத்தமுடியாது என்றும் ராம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments