'வி. என் மதிஅழகன் சொல்லும் செய்திகள்' நூலின் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில் | தினகரன் வாரமஞ்சரி

'வி. என் மதிஅழகன் சொல்லும் செய்திகள்' நூலின் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நாயகம் வி.என். மதிஅழகன் எழுதியுள்ள 'வி. என் மதிஅழகன் சொல்லும் செய்திகள்' எனும் இலத்திரனியல் தமிழ் ஊடக வரலாற்றில் வெளிவரும் முதலாவது செய்தித்துறை கருவி நூலின் மாபெரும் வெளியீட்டு விழா எதிர்வரும் 23.06.2018 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கலாசூரி ஆர். சிவகுருநாதன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில் தேசிய சகவாழ்வு ஒருமைப்பாடு நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்விழாவிற்கு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் தே. செந்தில்வேலவர் தலைமை தாங்குவார். சிறப்பதிதிகளாக முன்னாள் இந்து சமய கலாசார அமைச்சர் பி. பி தேவராஜூம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எம். இஸ்மாயிலும் கலந்து சிறப்பிப்பர்.

விழாவில் மங்கல விளக்கினை சமூக சேவையாளரும், ஆங்கில ஆசிரியருமான அகில இலங்கை சமாதான நீதவான் சுவாமிநாதன் தர்மசீலன் தம்பதியினர் ஏற்றி வைப்பர் இலங்கை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு. வை. க. வைத்தீஸ்வரக்குருக்கள் மற்றும் வடமாகாண கிறிஸ்தவ சங்கங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வணபிதா. எஸ். சந்திரகுமார் ஆகியோர் ஆசியுரை வழங்க நூலின் முதற் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வார்.

விழாவில் வாழ்த்துரைகளை பேராசிரியர் எஸ். தில்லைநாதன், எழுத்தாளர், கல்வியாளர், சிவில் சேவை அரச அதிகாரி உடுவை தில்லை நடராஜா, கவிஞர், எழுத்தாளர், வைத்திய கலாநிதி ஜின்னா செரிபுதீன், மூத்த ஊடகவியலாளர் வி. தனபாலசிங்கம் ஆகியோர் வழங்க நூலாசிரியர் அறிமுகத்தை எழுத்தாளர், சிவில் சேவை அரச அதிகாரி முனைவர் சிவலிங்கம் சதீஸ்குமார் செய்துவைப்பார்.

நூல் பற்றிய அறிமுகத்தை சிரேஸ்ட இலத்திரனியல் ஊடகவியலாளர் எஸ். விஸ்வநாதன் மேற்கொள்ள நூல் ஆய்வுரையை பேராதனை வளாக தமிழ்த்துறை பேராசிரியர் வ. மகேஸ்வரன் மேற்கொள்வார். இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் வி. என் மதிஅழகன் வழங்குவார்.

Comments