இந்து சமுத்திரத்தில் மேலும் 16 இலட்சம் சதுர கி.மீ. பரப்பளவு இலங்கை வசம் | தினகரன் வாரமஞ்சரி

இந்து சமுத்திரத்தில் மேலும் 16 இலட்சம் சதுர கி.மீ. பரப்பளவு இலங்கை வசம்

இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேலும் 16 இலட்சம் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட கடற்பரப்பு இலங்கைக்குச் சொந்தமாகவுள்ளது.

இதற்கு ஏற்றவாறு சமுத்திரவியல் மற்றும் ஆய்வாளர்களின் நிபுணத்துவ பேச்சுவார்த்தை முன்னேற்றகரமாக நடப்பதாகவும் சமுத்திரவியல் தொடர்பான அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.நாவின் சமுத்திர வள சட்டம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின்படி இலங்கைக்கு சட்டப்படி உரிமையாகவுள்ள இந்த கடற்பரப்பின் பரப்பளவு இலங்கையைப் போன்று 23 மடங்கு என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்படி இப்பாரிய பரப்பளவு கொண்ட கடலில் எண்ணெய் அகழ்வாராச்சி, இயற்கை வாயு, கனிம பொருட்கள் என்பவற்றை பயன்படுத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றின் முழுமையான உரிமை இலங்கைக்கு கிடைக்கும்.

விசேடமாக கடல் படுகையின் முழுமையான உரிமையும் இலங்கைக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இக்கடல் பிரதேசத்தில் மீன்பிடிக்கும் உரிமையுடன் பாரிய கடற்றொழில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவும் முடியும்.

இந்த உடன்படிக்கைக்கு அமைவாக புதிதாக இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் உரிமை தொடர்பில் தற்போது அதிகாரிகள் மற்றும் நிபுணத்துவர்கள் மட்டத்தில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. மிக விரைவில் இவ்வேலைகள் நிறைவுபெறும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிருந்து 200 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பிரதேசம் வரையுள்ள 5 இலட்சத்து 17,000 சதுர மைல் பரப்பளவு இலங்கைக்கு உரித்துடையது.

தற்போது கிடைக்கவுள்ள உரிமை இதற்கும் மேலதிகமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எமது நாட்டிலுள்ள ஆறுகளினூடாக வரும் சேறு இக்கடல் பிரதேச பகுதிகளில் படிந்துள்ளதால் இந்த கடல் பரப்புக்கு சட்டரீதியான உரிமை கிடைக்கிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

 

Comments