இலங்கை நீதித்துறை செய்யாததை அமெரிக்கப் பத்திரிகை சாதித்துள்ளது | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை நீதித்துறை செய்யாததை அமெரிக்கப் பத்திரிகை சாதித்துள்ளது

இலங்கையில் நிதி மோசடி ஒழிப்புப் பிரிவு, குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்ட மாஅதிபர் திணைக்களம் என்பவற்றால் செய்ய முடியாத ஒரு விடயத்தை அமெரிக்க பத்திரிகையொன்று செய்திருக்கிறது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட செயலகத்தில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் ராஜித சேனாரட்ண, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தல் நடவடிக்கைக்காக சீன கம்பனியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "நியூயோர்க் டைம்ஸ்" பத்திரிகை மிகவும் பிரபல்யமான ஒரு பத்திரிகை. அதில் ஒரு செய்தி வெளியாகிறது என்றால் அவர்கள் எழுந்தமானமாக எதனையும் பிரசுரிப்பதில்லை. எல்லா விதமான தகவல்களையும் சேகரித்ததன் பின்னரே செய்தியை பிரசுரிப்பார்கள்.

அதில் வெளிவந்துள்ள செய்தி தவறானது என்றால், உடனடியாக பதிலளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு "நியூயோர்க் டைம்ஸ்" அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அவர் அதற்கான பதிலை அனுப்பி வைக்கவில்லை.

இலங்கையில் பிரசுரமாகும் பத்திரிகைக்கு பதிலளிப்பதில் எந்தப் பயனுமில்லை. "நியூயோர்க் டைம்ஸ்" பத்திரிகைக்கே பதிலளிக்க வேண்டும்.

"நியூயோர்க் டைம்ஸ்" பத்திரிகையில் வெளிவந்த செய்தியின்படி காசோலைகளின் இலக்கம், பணம் பெற்றுக் கொடுத்த நபர்கள், வங்கி என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன.

பௌத்த பிக்கு ஒருவருக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணம் தரப்படவில்லை என்றும், அந்த செய்தி பிழையானது என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட சீன நிறுவனம் கூட அந்த செய்தியை இதுவரை நிராகரிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடியான கொடுக்கல் வாங்கலின் ஒரு சிறு துளியே இப்போது வெளியில் கசிந்திருக்கிறது.

இலங்கையிலுள்ள நிதி மோசடி ஒழிப்பு பிரிவு, குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்ட மாஅதிபர் திணைக்களம் என்பவற்றால் கூட செய்ய முடியாமல் போன ஒரு விடயத்தை அமெரிக்காவின் பத்திரிகையொன்று செய்திருக்கிறது. இந்த செய்தி எமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது.

மோசடியான கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு தொடர எமது சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு நீண்ட காலம் சென்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த மோசடிகள், திருட்டுகள், மனிதப் படுகொலைகள் என்பவற்றின் சகல தகவல்களும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் ஒரு முன்னாள் ஜனாதிபதி, அவர் வீதி வீதியாக நின்று “மைக்”கைப்பிடித்துக் கொண்டு பதிலளிப்பதை விட்டு விட்டு ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு தேவையான பதிலை வழங்க வேண்டும்.

"நியூயோர்க் டைம்ஸ்" பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி பொய்யானது என விமல் வீரவன்சவும் கூறியுள்ளதாக நான் காலை ஊடகங்களினூடாக பார்த்தேன்.

அவரைப் பற்றிப் பேசிப் பலனில்லை. அவருக்கு "நியூயோர்க் டைம்ஸ்" என்ற பத்திரிகையொன்று இருக்கிறது என்று கூட தெரியாதவர். அவர் அதனை வாசித்திருக்கவும் மாட்டார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ண மேலும் தெரிவித்தார்.

Comments