அரசை இனியும் நம்பத் தயாரில்லை சர்வதேச சமூகமே தீர்வை தர வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

அரசை இனியும் நம்பத் தயாரில்லை சர்வதேச சமூகமே தீர்வை தர வேண்டும்

500 நாளை கடந்து வவுனியாவில் போராட்டம் யாழ் நல்லூரில் நேற்று அடையாள உண்ணாவிரதம்

செல்வநாயகம் ரவிசாந், யாழ் குறூப் நிருபர்

 

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு வவுனியாவில் ஆரம்பித்த போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இனியும் நாம் அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை. தீர்வுக்கு பதிலாக நல்லாட்சி அரசும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. அரசும், அரசியல் தலைமைகளும் எம்மை கைவிட்டுள்ள இன்றைய சூழலில் சர்வதேச சமூகம் எமக்கு தீர்வை தருவார்களென நம்புகின்றோம் என காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்கள் நேற்று தெரிவித்தனர்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுச் சனிக்கிழமை(07) யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு,கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாம் எமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியாவில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் 500 நாட்களாகியும் உரிய தீர்வின்றித் தொடர்கின்றது. கடந்த 500 நாட்களாக நாங்கள் இந்த அரசாங்கம் எங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு தருமென நம்பியிருந்தோம்.

ஆனாலும், அரசாங்கம் எங்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசாகத் தந்துள்ளது. எனவே, நல்லாட்சி என்று சொல்லுகின்ற இந்த அரசாங்கத்தை இனியும் நாங்கள் நம்பப் போவதில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கமும், எமது அரசியல் தலைமைகளும் எங்களைக் கைவிட்டுள்ள தற்போதைய சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவார்கள் என முழுமையாக நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய்மார்கள் ஜனாதிபதியுடன் தங்கியுள்ள நான்கு பிள்ளைகளையும் விடுதலை செய்ய வேண்டுமெனத் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதும் அவர்களுக்கு உரிய தீர்வேதுவும் கிட்டவில்லை.

அதேபோன்று ஓமந்தைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரிடம் நேரடியாக எங்களால் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? எனக் கேட்கும் போது அரசாங்கம் ஏன் மெளனம் சாதிக்கிறது?

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் எங்களுக்கு அறவே தேவையில்லை என நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். காணாமலாக்கப்பட்டோர் அலுவலகமொன்றை நிறுவி அரசாங்கம் எங்களை ஏமாற்ற முற்படுகின்றது. இதற்கெதிராக நாங்கள் வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் எதிர்ப்புப் போராட்டம் ஏற்கனவே நடாத்தியுள்ளோம்.

வவுனியாவில் எங்களுடைய போராட்டம் ஆரம்பமாகி 500 ஆவது நாளில் வடக்கு, கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களினதும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய தாய்மார்கள் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம். இதன் ஒரு கட்டமாக நாங்கள் நல்லூர்க் கந்தனுக்கு 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு 50 தீச்சட்டிகள் எடுக்கப்பட்டு நேர்த்திக் கடன் செலுத்துகின்றோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Comments