புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் மந்தம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் மந்தம்

சம்பந்தனின் கோரிக்ைக நியாயமானது - மனோ

விசு கருணாநிதி

 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் மந்த கதியில் நடைபெறுவது நாட்டுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் ஆரோக்கியமானதல்லவென்று தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர வேண்டும் எனும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் கோரிக்ைக நியாயமானது என்றும் அமைச்சர் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணுமுகமாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதென்ற உடன்பாட்டின் பிரகாரமே கடந்த ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நடத்தப்பட்டன.

சிறுபான்மைக் கட்சிகள் என்ற வகையில் இந்த உடன்பாட்டுடனேயே நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தன. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் இன்னமும் ஓர் இடைக்கால அறிக்ைக மட்டத்தில் மாத்திரமே புதிய அரசியலமைப்புக்கான முனைப்புகள் காணப்படுகின்றன. உண்மையில் இது வருந்தத்தக்க விடயம், என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவாருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள அழைப்பு நியாயமானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுவிடயத்தில், தமது கட்சியின் ஆதரவு கோரப்படும் பட்சத்தில், அதுகுறித்துப் பரிசீலித்துப் பதில் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.

விமலுக்கு அருகதையில்லை

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்து விமர்சிக்கவோ கருத்து கூறவோ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எந்த அருகதையும் கிடையாதென்று அமைச்சர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் பாராளுமன்றத்திற்குக் குண்டெறித் தாக்குதலை நடத்தியவர் வீரவன்சவின் உறவினர் என்று கூறப்படுகின்றது. அவ்வாறான ஒருவர், யதார்த்தமற்ற ஒரு விடயத்தைக் குறிப்பிட்டதற்காக அவரை விமர்சிக்கும் அருகதை விமல் வீரவன்சவுக்குக் கிடையாதென்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், பாரதூரமற்ற ஒரு விடயத்தை வைத்துக்ெகாண்டு தென் பகுதியில் அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், சாமானியர்களைப்போலன்றி ஓர் அரசியல்வாதி நிதானத்துடனும், தெளிவுடனும், முதிர்ச்சியுடனும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆயிரம் கனவுகள் மனதில் இருந்தாலும் அத்தனையையும் வெளியில் உரைக்க முடியாது என்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறினார்.

Comments