எல்லை நிர்ணய அறிக்ைகயை மீளாய்வு செய்வதில் நெருக்கடி | தினகரன் வாரமஞ்சரி

எல்லை நிர்ணய அறிக்ைகயை மீளாய்வு செய்வதில் நெருக்கடி

பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான மீளாய்வுக்குழு அதன் முதலாவது கூட்டத்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடத்தியது.

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருப்பதால் திருத்தம் செய்வதில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாக மீளாய்வுக்குழு தெரிவித்திருக்கின்றது. முழுமையாக மீளாய்வு செய்து திருத்தங்களைப் பரிந்துரை செய்வதானால் குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசம் எந்த விதத்திலும் போதுமானதாகக் காணப்படவில்லை. அறிக்கையை முழுமையாக மீளாய்வு செய்வதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் கேட்டறிவதற்கு குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சித்தலைவர்களையும் சந்தித்துக் கருத்துக்களைக் கேட்டறியவும் அதனையடுத்து புத்திஜீவிகள், பொது அமைப்புகளுடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித்தலைவர்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புகளின் நிலைப்பாடுகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் அதற்கமைவாக அறிக்கையை மேலோட்டமாக மீளாய்வு செய்து முதற்கட்ட அறிக்கையொன்றைச் சபாநாயகரிடம் கையளிப்பதென முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.

மீளாய்வுக் குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் இதற்கு மேல் எதனையும் செய்யமுடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அதன் முதலாவது கூட்டம் இடம்பெற்றுள்ளது. வழங்கப்பட்ட காலம் இரண்டு மாதங்களாகும். அடுத்த 45 நாட்களுக்குள் அறிக்கையை ஆழமாக மீளாய்வு செய்வது இயலாத காரியம் என்பதாலேயே மீளாய்வுக்குழு இந்த வழியைக் கையாள முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

 

Comments