நன்றி மறப்பது | தினகரன் வாரமஞ்சரி

நன்றி மறப்பது

அக்கிராமத்து வீடுகளின் வளவுகளுக்குள் வேலியிட்டுக் கொடுப்பார். மலசல கூடங்கள் இல்லாத ஊர் கிச்சலப்பாதான் கொல்லைகளுக்கு வேலியிட்டு சுத்தம் பண்ணிக் கொடுப்பார். அதுதான் அக்கிராமத்துக் குளியலறை; மலசல கூடம். அதிகமாக பெண்களுக்குரியதுதான் அது.

ஆண்களைப் பொறுத்த வரை ஆத்துக்கரையோரமுள்ள கண்ணாக் காடுகளில் கழித்தவர்கள் அந்த ஆற்றிலே கழுவி சுத்தம், ஒரு முழுக்கு, வீடு வந்து மேனியில் உப்பு கசிகசிப்பைப் போக்க கிணற்று நீரை அள்ளிக் கழுவி அல்லது முழுகிக் கொள்வது அதோட பாத்ரூம் சமாச்சாரம் நிறைவேறிவிடும். அது அந்த கிராமத்து நடைமுறைப் பழக்கம்.

அங்கு நாலு வீட்டிலே எவுண்ட, எடுபிடி வேலைகளை செய்து தன் ஒரு வயிற்றைக் கழுவி நிரப்பிக் கொள்ளும் பிழைப்புத்தான் கிச்சலப்பா. இவருக்கு யாரும் இல்லை என்று சொல்லி மறுப்பதில்லை, முகம் சுழிப்பதுமில்லை. தனது செலவு போக சாப்பாடு எப்படியும் கிடைக்கும். வேறு தேவைப்பாடு போக, தான் உழைப்பு ஊதியம் மேலதிகம் ஏனைய பிச்சைக்காரருக்கு பங்கிட்டு விடுவார். பிச்சை வாங்கி பிச்சை கொடுப்பதில் இவர் பணக்காரன். தர்மகர்த்தா.

இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவரின் முற்றத்தில் நின்ற மரமொன்று முறிந்து தென்னோலையால் வேயப்பட்டிருந்த மாலின் மேல் விழுந்து, அக்குடிசைக்குள் இருந்த அவரின் ஆசை மனைவி தவிர, அவரின் மரம் அன்று முறிந்து விட்டது. மரம் முறிந்ததை தோணியாக, தளபாடச் சாமான்களாக ஒட்டிவிட்டார்கள் ஆனால் அவரின் முறிந்த மனதை யாராலும் ஒட்ட முடியவில்லை. அவர் அரைகுறை மென்டலானாலும் அவர் மத்தியில் ஒன்றும் ஏற்படவில்லை. அவர் தெளிவாகவே இருக்கிறார்.

தலைக்குத் தலைப்பாகை நிறை குப்பாயம். முழு அங்கிக்கு மேல் கறுப்பு நிற கோட் கழுத்து நிறைய சில்வர் டஸ்ட் மின்னும் காகிதப் பூமாலைகள், இது மாப்பிள்ளை அலங்காரக் கோலம். மாப்பிள்ளை மொகலாய சாம்ராச்சிய அக்பர் பத்துசா வைப் போல அலங்கார தேர் போன்ற குதிரையின் மீது அமர்ந்திருப்பார். கல்யாண மாப்பிள்ளை என்று சொல்லுவதைவிட, குதிரையின் மீது வீற்றிருப்பார் என்றால் தான் சரியாகப் பொருந்தும். மாப்பிள்ளையின் மயக்கம் மெல்ல மெல்ல குதிரையின் நடைகேற்ப அப்படி இப்படி அசைவார். அந்தத் தோரணக் குதிரையை மெதுமெதுவாக நடத்திச் செல்பவர் எங்களின் கிச்சலப்பாதான்.

மாப்பிள்ளையின் வெள்ளை நிற தலைப்பாகை ஒத்த தலைப்பாகை. ஆனால் காவி முழங்கைகள் மறைய யாரோ கொடுத்த அரைக் கைச்சட்டை. இப்போதைய லோங்சை முழங்காலுக்குக் கீழே வெட்டிய (சிறுகால்) ‘ஒர்கிஸ் காக்கி’ துணியாலானது. கால்களிலே பாதணி கிடையாது. நடந்து நடந்து காய்ச்சிப் போன அடிபுதையரணம் அவர்கள் பாதத்தோல்தான்.

இதுதான் மாப்பிள்ளை வீற்றிருக்கும் சிம்மாசனக் குதிரை. இழுத்துச் செல்லும் கிச்சலப்பாவின் அழகிய தோற்றம் குனிந்ததலை நிமிராது அவரின் வாய் திறவாது ஊமை.

கிச்சலப்பா இவர்களுக்கு முன்னாள் தங்கராசாவின் டும்... டும்... டும், மேளம் பீ..ப்...பீ மிருதங்க நாதஸ்வரம் முழங்க ஊர்வலம் சீனடி, சிலம்படி, விளையாட்டு வரவேற்கக் காத்திருக்கும். மணப்பெண்ணின் மணவறைக்குச் செல்ல தளத்தில் வெள்ளைச் சேலை விரிக்கப்பட்டு (வெண்கம்பள) வரவேற்பு. உபசாரம் அமர்க்களம் மகா ஜோர். மாப்பிள்ளைக்கு விரிக்கப்பட்ட வெள்ளையில் முதலில் தங்கராசாவின் மேளவாத்தியக் கோஷ்டியே செல்லும் அதற்குப் பின்னாலே....

மாப்பிள்ளைக் கோஷ்டி பின்னே சென்றாலும் அவர்கள் ஒரு சதமும் பெண் தரப்பிடம் கைக்கூலித்தனம் அல்லது ஆதனம் பெற்றிருக்காத முன்னேற்றவாதிகள்.

மாப்பிள்ளை குதிரையிலேற்றி இழுக்கும் பழக்கம் கிச்சலப்பாவோடு மறைந்து விட்டது. ஆனால் பதிலுக்கு கைக்கூலி சீதனம் வாங்கும் பழக்கம் தோன்றிவிட்டது.

அப்போது அந்த ஊரிலே புஹாரிக் கந்தூரிதினம் ஒரு பெருநாள் போல சில பணக்காரர்களும் பிள்ளைகளும் பெறுமதியாக துணி வாங்கி தைத்த புத்தாடைகளே அணிவார்கள்.

காலிலே, கையிலே சின்னச்சின்ன உண்ணிகள், பருக்கள் தொற்றினால் அதற்காக கறுத்த உண்ணிக்கு கறுத்த மிளகு மூட்டை புஹாரிக்கு கொடுப்பேன் என்றும், வெள்ளை உண்ணிக்கு வெள்ளை உப்பு மூட்டை கொடுப்பேன் என்றும் நிய்யத்து (மனதால் எண்ணுதல்) வைப்பார்.

படா... டாப்... படர் சத்தம் அந்தப் பள்ளிவாசல் கொம்பவுண்டுக்குள்ளே சீனப் பட்டாசு கொழுத்துவார்கள் எண்ணாவாம் ஊமைப்பிள்ளை பேச வேண்டும் என்ற வேண்டுதலாம். மதச்சடங்கு போல அமர்க்களம் நடக்கும் அமைதியான மதம், கலாசாரம் பற்றி அந்த கிராம மக்களுக்கு, மதப் பெரியார்களுக்கு இல்லாத கவலையும், சிரத்தையும் கிச்சிலப்பாவுக்கு மட்டும் எங்கிருந்தும் வருவதற்கு நியாயம் ஏது?

ஆனால் எவர்படும் கஷ்டத்தையும் சகித்துக் கொண்டிருக்கமாட்டார். அதேநேரம் பிறரின் அக்குத் தொக்கு, ஈ, எறும்பு துயரும் தாங்காதவர் தான் கிச்சலப்பா. ஆனால் வீடு பற்றி எரியும்போது பார்த்திருக்கமாட்டார். பிறர் துயரில் பங்கெடுப்பார்.

எவ்வளவோ மக்கள் கூட்டம். அந்த ஊர் அயலூர் மக்கள் முழுவதும் ஒன்றுகூடிய கூட்டம். நிறைந்து வழியும் புஹாரிச் சந்தி நான்கு பிரதான வீதிகள் சந்திக்கும் புஹாரியடி. பூச்சிமணி அலுமினிய சாமான்கள், பூந்தி, அல்வா, துதல், மஸ்ட், பெற்றிஸ், வடை, சம்சா, வட்டிலப்பம், செறுப்பு, உப்பு, சில்வர், செம்பு. பித்தளை, பெலூன் பொம்மை, பட்டாசு வெடிக்கடைகள் ஏராளம். மூன்று நாட்கள் களைகட்டியிருந்து இன்று மூன்றாவதும் இறுதியுமாக கலகலப்புக் கடைகள் யாவுமே ஹலாலான வியாபாரங்கள் வியாபித்துக் காணப்பட்டன.

கடைகள் ஒவ்வொன்றிலும் சிறுவர்கள், பெரியவர்கள், வாலிபர்கள் கூட்டம். ஊசி போட இடம் இல்லாத கூட்டம் என்பார்களே அப்படிப்பட்ட கூட்டம். திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளித்தது அந்த புஹாரியடி கூட்டம்.

‘ஓடி வா!... ஓடி வா... ஒன்றுக்கு நாலு ஓடி வா! பொழுது போனாவராது, பொழுது பட்டாக் கிட்டாது ஓடி வா!' இந்தக் கூவிய அழைப்பு எல்லா அங்காடிக் கடைகளிலும் கேட்டாலும் அங்கு மட்டும் எங்கும் இல்லாத இரைச்சல் கூடுதலான கூட்டம். லொத்தர் தாயக்கட்டை உருட்டல், சுழல் சக்கரத்துக்கு ஈட்டி எறிதல், விளையாட்டுத் தாளில் சூது விளையாட்டுக்கள். பல நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதனாலேயோ என்னவோ கூடுதல் பராக்குக்கள் காரணமாகவோ அங்கு மாபெரும் கூட்டம் கூடியிருந்து குதூகலம் அரசோச்சியது. புஹாரிக் கொமிட்டி ஒலிபெருக்கியில் தடுத்தது. நேராக வந்து தடுத்தார்கள், கெஞ்சிப் பார்த்தார்கள். அந்த விளையாட்டுக் கூட்டத் தலைவனிடம் மத பெரியார்கள் மன்றாடினார்கள். அந்தத் தலைவன் அந்த ஊர் சண்டியனாம் எவர் சொல்லையும் அவர் கேளாதவராம். அவர் தன் அருவருப்பான செயலை நிறுத்தவில்லை. மேற்கொண்டு கண்டிப்பாகச் சொல்லவும் பயம் ஏன்? அவர் பெரிய சண்டியனல்லவா? பொறுக்க முடியாதோர் காவல் வந்த பொலிசாரிடம் முறையிட்டார்கள்.

‘ஹராம்’ கூடாது சட்டத்துக்கும் விரோதம் இந்தப் பொது-- இடத்தில் இதைச் செய்யாதையும். பொலிஸ் மிக நாசூக்காக எடுத்துச் சொன்னது ம்ஹ்...ம் சண்டியன் ஒன்றுக்கும் மசியாதவன் தானே! வாய்த்தாக்கம், வாக்குவாதம் முற்றி தடுத்த இரண்டு பொலிஸாருடனும் வாக்குவாதம். பொலிஸாரை அறைந்து விட்டான். ----------

எங்கள் கிச்சலப்பா (கிச்சலான்) இளகிய மனசுக்காரர். இரக்க சிந்தை நிறைந்தவரல்லவா? விட்டு ஓடிய அங்காடிக் கடையிலிருந்து எடுத்த சோடா போத்தலைத் திறந்து தண்ணீர் கேட்ட பொலிஸுக்கு பருக்கிப் பருகக் கொடுத்தார்.

பொலிஸ் ஜீப் வந்தது. எழுந்த பொலிஸ் யாரையும் காணாது திகைத்தவர். இவர்தான் எனக்கு தண்ணி தந்தார் என்று காட்டினார் கிச்சலப்பாவை. ‘யார் அடிச்சவன்’? எங்கடா அவன்’ என்று ஐ.பி. தணு வைக் கத்தினார். கிச்சலப்பாவையும் மிரட்டினார். அடிபட்ட பொலிஸையும், கிச்சலப்பாவையும் ஏற்றிக்கொண்டு ஜீப் வண்டி விரைந்தது.

எப்படி விசாரித்தாலும்; கிச்சலப்பாவுக்கு ஆள் தெரிந்தாலும் அவர் சொல்லப் போவதில்லை. உண்மை கிச்சலப்பாவுக்குத் தெரியாதுதானே! இவர் சொல்ல வேண்டியில்லை. பொலிஸுக்கு அவனைத் தெரியும். ஊர் முழுக்க அட்டகாசக்காரன், சண்டியன் சாவு சந்தியிலே! சும்மா விசாரித்துவிட்டு கிச்சலப்பாவுக்கு நன்றி தெரிவித்து துறையைக் கடத்திவிட்டார்கள். இது நடந்து இற்றைக்கு சுமார் காலங்கள் கடந்திருக்கும். அதே புஹாரிச் சந்தியில் ‘அடோ என்னடா ரோட்டிலே கைவார் போடுர நீ’ என்று சும்மா வந்த பொலிஸார் கேட்டார்கள். ‘ஆ என்னய்யா தெருவில கதக்கப்படாதா?’ என்று கேட்டான். ஆடி ஆடி நிலையாக நிற்க முடியாத அந்தக் குடிகாரன்.

‘டோப்ல’ வாய்க்கு வந்தவாறு உழக்கலுரையாடி அடிவாங்கிக் கொண்டிருந்தான். ஒருவரும் அவனையோ, அடிக்கும் பொலிஸாரையோ சாட்டை செய்யவில்லை.

கிச்சலப்பா போவாதங்க அவன் குடிகாரன். பொலிஸோட வாய்க்கு வாய் கதைக்கு கதைகொடுத்து அடிவாங்கிறான்.

தடுத்தால் கேட்காத கிச்சலப்பா, 'ஐயா! இவன் ஒரு குடிகாரன் இவன அடியாதங்க பாவம் புள்ள குட்டிக்காரன்' என்று சிங்களத்தில் கெஞ்சினார்.

‘அடோ வாய அடக்கிறது’, ‘டோப்’காரனைப் பார்த்து பொலிஸ் அவனின் கைச் சந்தில் இரண்டு குத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

ஏன்டா சும்மா வீணா அடிப்பட்டுச் சாவப போறா? ஹறாமான சாராயம், கஞ்சா குடிச்சிரிங்க ஊட்ட பெயித்து படுடா? என்று கூறிய கிச்சலப்பா குட்டி லெக்சர் அடித்து விரட்டினார்.

‘அப்பா நீங்க வந்து தடுக்காட்டி அடிச்சிக் கொண்டு பெயித்து கூட்டுல போட்டிருப்பான்’ என்றான்.

குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு என்பார்கள் இவனுக்கு விடிய முன் வெறிமுறிந்ததும் இவன் பேச்சு போச்சு.

விழுந்து கிடந்தவன் எழுந்து நின்று சொன்னான். இந்த கிச்சலப்பாதான் பொலிஸுக்கிட்டச் சிங்களத்தில் சொல்லி எனக்கு அடி வேங்கித் தந்தான்’ என்றானே அந்தக் குடிகாரன்.

இவன் மட்டும் மறக்கவில்லை, இப்படியான நல்ல கிச்சலப்பாக்களை இந்த ஊரே மறந்து விட்டது.

 

 

Comments