கோழிப்பண்ணை | தினகரன் வாரமஞ்சரி

கோழிப்பண்ணை

நிலத்தின் இருள் படிப்படியாக அகன்ற வண்ணமிருந்தது. ஓரிரு காகங்கள் ஜோடி ஜோடியாக ஆகாயத்தில் பறக்கத் தொடங்கின. இளம் சூரியன் ஒரேயடியில் நிலத்தில் பதியாது சுற்றாடல் ஓரளவு சாம்பல் நிறத்தில் ஒளி விட்டு பரந்து சென்றது.

மஜிஸ்ரேட் பங்களாவில் அதிகாலையிலேயே திறக்கப்பட்ட ஜன்னல் கதவுகள் மூலம் மென்மையான திரைச்சீலையை அங்குமிங்குமாக்கி குளிர் உள்ளே நுழைந்தது.

நீதவான் தன் படுக்கை அறையில் அங்குமிங்குமாக இரவு ஆடையுடன் சிந்தித்த வண்ணம் இருந்தார்.

அமைதியற்ற மனது அவரை சிக்கலுக்குள்ளாக்கி அதிர்ச்சிக்குள்ளாகியிருந்ததோடு, அதிலிருந்து மீளுவதற்குப் பதிலாக மேலும் அதிலே மூழ்கியிருப்பதற்கான ஆசை மேலோங்கியிருந்தது.

சொற்களால் விபரிக்க முடியாத வகையிலான சோகமும் நிச்சயமற்ற தன்மையும் தனக்குள் உருவாகியிருப்பதனை அவர் உணர்ந்தார்.

இவ்வாறான சிக்கல் மிகு மனதுடன் கடமையைச் சரியாக நிறைவேற்ற முடியாது என்பதனைப் புரிந்து கொண்ட அவர், இன்றைய தினத்தில் நீதிமன்றத்துக்குப் போவதில்லை எனத் தீர்மானித்தார்.

***

பதினாறு வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு பெண்ணுக்கும் சுயதொழிலில் ஈடுபட்டு, தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், நிரந்தர வருமான வழிகளை அமைத்துக் கொள்வதற்கும், அதற்குத் தேவையான சகலவற்றையும் (நிதி, மூலப்பொருள், ஆலோசனை போன்றவற்றை) இலவசமாக வழங்கும் செயற்றிட்டமொன்று தொடர்பாக அறிவூட்டுதல் மற்றும் பதிவு செய்வதற்காக 28ஆம் திகதி ஞாயிறு மாலை 2:30மணிக்கு வட்டப்பளை கிராம எல்லையில் அமைந்துள்ள 'பனை மரங்களின் நிழலில்' நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சகல பெண்களிடமும் கோரிக்கை விடுக்கும் அறிவித்தல்  வீதி வீதியாக 26ஆம் திகதி ஒட்டப்பட்டிருந்தது. கண்ணகி அம்மன் கோவில் வீதி எங்கும் வட்டப்பளை கிராமம் முழுவதும் துண்டுபிரசுரங்கள் பங்கிடப்பட்டிருந்தன.

28ஆம் திகதி 1:00மணி முதல் பல வருடங்களாக யுத்தத்தினால் சேதத்திற்குள்ளான வீடுகளுக்குப் பதிலாக பனை ஓலை, பொலித்தீன் மற்றும் தகரத் துண்டுகள் மூலம் பொருத்தப்பட்ட குடிசைகளுக்குள் வெயிலுக்கு வெந்து வரண்டு போன தோலுடனான சரீரத்தை உடைய பெண்களும் சிறுபிள்ளைகளை கக்கத்தில் அல்லது முந்தானையில் தாங்கிக்கொண்டு ,  ஓரளவு நடக்கும் வயதினையுடைய பிள்ளைகளைகை பிடித்து அழைத்துக் கொண்டு  தாய்மாரும் திருமணமான, திருமணமாகாத நடுவயது மற்றும்  வயோதிபப் பெண்களும், யுவதிகளும் கூட்டம் கூட்டமாக 'பனைமர நிழலில்' ஒன்று சேரத் தொடங்கினர்.

தம் மனதில் பல்வேறு எண்ணங்களை எண்ணிய பெண்கள் நெருப்பு வெயிலில் பனைமரங்களின் ஓரமாக  தாம் விரும்பியவாறு அமர்ந்திருந்தனர். அந்த இடத்தின் ஓர் ஓரத்திற்கு அருகாக மேசை ஒன்றின் மேல் வெள்ளைப் புடவை ஒன்று விரிக்கப்பட்டு, அதன் மேல் பூப்பூச்சு ஒன்றும் மேசைக்குப் பின்னால் சில கதிரைகளும் வைக்கப்பட்டிருந்தன. இரு பனை மரத்துக்கு இடையே கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்றில் தூக்கப்பட்டிருந்த மாதர் சங்கத்தின் பெயருடனான சிவப்பு நிற பனர் ஒன்று காற்றில் பறந்து கொண்டிருந்தது.

சரியாக பகல் 2:00மணிக்கு அறிவூட்டும் கூட்டம் ஆரம்பமானது. கொழும்பிலிருந்து வந்த கறுப்பு நிறக் காற்சட்டையும் கடும் சிவப்பு டீ சேர்ட்டும் கடும் வெயிலின் சூட்டிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கறுப்பு முகக்கண்ணாடி அணிந்திருந்த இரு யுவதிகளும் அவர்களது மொழி பெயர்ப்பாளராக யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த நடு வயதுடைய ஒரு தமிழரும் பாதுகாவலர்கள் எனக் கருதக் கூடிய நன்கு வளர்ந்த இரு இளைஞர்களும் வெள்ளை வேன் ஒன்றில் பிற்பகல்1:50மணியாகும் போது கூட்ட மைதானத்திற்கு வந்தனர்.

கூடியிருந்த பெண்கள் அமர்ந்திருந்த இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அது எப்படி நடந்தது என்பதனை அவர்கள் அறிந்திருக்கவில்லை எனினும் முன்பு பேசி முடிவு எடுத்திருந்தது போன்று அவர்கள் எழுந்து நின்றனர். அவ்வாறு எழுந்து நின்றது பெரும் அச்சத்துடனாகும்.

யுவதிகள் இருவரும் வெண்மையான தமது பற்களின் அழகை கூடியிருந்த பெண்களுக்குக் காண்பித்தார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் இந்த சிரிப்புக்குப் பதிலளிப்பதா? அல்லது கரகோசம் செய்வதா? என்ற தீர்மானத்துக்கு வர முடியாது அமைதியாக அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கூட்டம் பிற்பகல் 5:30மணி ஆகும் போது முடிந்து விட்டது.

பார்வதியின் மனது கோழிப்பண்ணையின் பக்கம் திரும்பியிருந்ததனால் அவருக்கு  விலங்கு வளர்ப்பு உதவித் திட்டத்தின் கீழ் பிரதிபலன் கிடைத்தது. 50கோழிக்குஞ்சுகளும் அவை முட்டையிடும் கோழிகளாக மாறும் வரை உணவு, மருந்து, மிருக வைத்திய ஆலோசனை, கோழிப் பண்ணை நிர்வாகம் பற்றிய ஆலோசனை மற்றும் கோழிகள் முட்டை இடுதலை ஆரம்பித்த பின் சந்தை விலையில் சகல முட்டைகளைக் கொள்வனவு செய்தல், முட்டையிடுவது பூரணப்படுத்தப்பட்ட பின் வயதான கோழிகளை இறைச்சிக்காகக் கொள்வனவு செய்வது வரை நிதி வழங்கும் நிதி நிறுவனம் மேற்கொள்ளும் என நிதி நிறுவனத்தினால் அறிவூட்டப்பட்டது.

அதன்படி பார்வதி சகல நிபந்தனைகளுக்கும் இணங்கி உடன்படிக்கைக்கு கையொப்பமிட்ட பின் செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்காக அவருக்கு முற்பணம் கிடைத்ததோடு, 50கோழிக்குஞ்சுகள் இரு வாரத்துக்குள் வீட்டுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. வாழ்க்கையில் ஒருபோதும் ஒரே தொகையாக கைக்குக் கிடைக்காத பணத்தொகையுடன் பார்வதி மிக மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றார்.

எனினும், பெண்களிடையே அழகான இரு யுவதிகளும், மொழிபெயர்ப்பாளரும் தெரிவித்த முற்பண அளவே பகிந்தளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது. யுவதிகள் சிங்கள மொழியில் தெரிவித்த முற்பணத் தொகையும் மொழிபெயர்ப்பாளர் தமிழில் தெரிவித்த முற்பணத்தொகையும் ஒன்றுதானா? என்பதனை அறிந்து கொள்வதற்கான வழிமுறை ஒன்றும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பது தவிர, அவர்களுக்குச் செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. இந்தளவு கூட அவர்கள் புரிந்து கொண்டது வரும் வழியிலாகும்.

குத்தினான்...

குத்தினான்...

குடலுக்கே குத்தினான்...

கள்ளு வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வளைந்த கத்தியை வலது கையால் எடுத்து, அதனை வானத்தை நோக்கி  நீட்டி, பெரும் குரலில் சப்தமிட்டவாறு   ஓடி வந்த சிவநேசன், ஒற்றைப் பாதை வழியாக கண்ணகி அம்மன் கோவில் வீதிக்கு நுழைந்து, தனது வேகத்தை அதிகரித்து பிரதான வீதிக்குள் பிரவேசித்து, களைப்புடன் இயன்றளவு வேகத்தில் முன்நோக்கி ஓடினான்.

'குத்தினேன்... குத்தினேன்...

சாவதற்கே குத்தினேன்...'

'வயிற்றைப் பிளந்தேன்...'

'இரத்த ஆறு...'

'கொன்றேன்...'

முன்னாள் இராணுவ வீதித் தடை தென்பட்டது. அங்கிருந்த படை வீரர்களில் இருவர் முன்னே வந்து கத்தியைக் காட்டிக் கொண்டு ஓடி வரும் சிவநேசனைப் பிடித்துக்கொண்டனர்.

சிவநேசனது வேகம் எந்தளவு என்றால் படை வீரர்களது பிடியிலிருந்து தப்பி 20அடியளவு முன்னால் போய் தடால்  என்று விழுந்தான்.

விழுந்தவுடன் முன்னால் வந்த படை வீரர் ஒருவர் வளைந்த கத்தியைப் பறித்தெடுத்தார்.

இரு கைகளையும் பின்னால் சேர்த்துக் கட்டி சிவநேசனை இராணுவ காவலரணுக்கு எடுத்துச் சென்றனர். காவல் அரணின் தலைவரான  இராணுவ சார்ஜன்ட் அவரிடம் விசாரணைகளை ஆரம்பித்தார்.

வெறி காரணமாக கூடுதலான களைப்பு காரணமாகவும் அதிர்ச்சியடைந்திருந்த சிவநேசனுக்கு சொற்களை கோர்வையாகப் பேச முடியவில்லை.

'கொன்றேன்... கொன்றேன்... ஆம் ... குத்தினேன்... செத்துட்டான்'

'யாரை?'

'வயிற்றுக்கே குத்தினேன்... எல்லாம் முடிந்துவிட்டது. செத்துட்டான்.'

சிவநேசனின் கையிலிருந்த கத்தியில் ஒரு சொட்டு இரத்தம் கூட படாமலிருப்பது  குறித்து இராணுவப் படையினர் அவதானித்தனர்.

'எங்கிருந்து குத்தினாய் சொல்லுடா?' சார்ஜன்ட் உரத்துக் கேட்டார்.

'வீட்டிலே...'

'ஆம்.. இறந்துவிட்டார்... இறந்துவிட்டார்.'

சிவநேசனுக்கு சீனி கூடுதலாகப் போட்டு ஒரு தேநீர் கோப்பை வழங்குமாறு சார்ஜன்ட் தமது படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலிருந்து வந்து சிவநேசனைக் கைது செய்யும் போது ஓரளவு அமைதி அடைந்திருந்ததோடு, சொற்களைப் பேசக்கூடிய நிலைக்கு வந்திருந்ததனை காணமுடிந்தது. மேலாடைகள் அற்றும்  கள்ளு வெட்டுவதற்கு வசதியாக மரம் ஏறும் அசுத்தமான  சிறிய சாரத்தினால் உடலின் கீழ்ப்பகுதி மூடப்பட்டிருப்பதாலும்  கூடுதலாக கள்ளுக் குடித்திருந்ததனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்ததாலும்  , தனது உடல்  துர்நாற்றம் காரணமாகவும்  அதிகாரிகள் முன்னால் சிவநேசன் வெட்கத்திற்கும் அசௌகரியத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருந்தான்.

சிவநேசன் படைவீரர்களுக்குப் பயந்து மிகவும் அப்பாவித்தனமாக நன்றி தெரிவிக்கும் பார்வையுடன் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏறினான். அவனது இருபுறமாக இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமர்ந்து கொண்டார்கள். ஆரம்பத்தில் கன்னத்தில் விழுந்த ஓரிரு கண்ணீர் சொட்டு நாடியினூடாக தனது மடி மீது விழுந்தனைக்கண்ட சிவநேசன், சத்தமிட்டு அழத்தொடங்கினான். ஜீப் வண்டியின் வேகம் இரண்டு மூன்று மடங்கானவுடன் சுற்றாடல், மரம், இலைகள், வீடுகள் ஒவ்வொன்றாக கலந்து இழுத்து, இழுத்துச் செல்லப்படும் தெளிவற்ற சித்திரம் போன்று சாம்பல் நிறத்துக்கும் பச்சை நிறத்துக்கும் பின் நிறங்கள் கலப்பதாகத் தென்படுவதனை அவனால் காண முடிந்தது.

***

நீதவான், தட்டச்சாளர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தருடன் சிவநேசனின் வீட்டுக்கு மாலை 4மணிக்கு வந்தார். அப்போதாகும்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராமத்தின் பெண்கள் மற்றும் பிள்ளைகள் உட்பட்ட ஒரு குழுவினர் சிவநேசன் வீட்டுக்கும் அதனை எதிர் நோக்கி அமைந்துள்ள கோழிப் பண்ணைக்குமிடையேயுள்ள பூமியில் கூடியிருந்தனர். பின்புறமாக வெள்ளைப்புடவை ஒன்று போடப்பட்டிருந்த சிறிய மேசைக்குப் பின்னால் இரு கதிரைகளும் போடப்பட்டிருந்தன. மற்ற நாட்களில் சிறிய சத்தத்திற்கும் சத்தமிட்டுக் கூவும் கோழிகள் இவ்வளவு பேர் கூடியிருந்தும் எவ்வித சத்தமும் எழுப்பாது அமைதியாக இருந்தன.

நீதவான் வருவதற்கு சற்று முன் இரு கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்த சிவநேசனை அழைத்துக்கொண்டு பொலிஸ் வாகனம் வந்தது.

நீதவான் வீட்டுப்பக்கம் ஒரேயடியாக நோட்டமிட்டார். நிலத்தில் இருந்து 8அடி வரை மேலாக நிலத்துக்கு சமாந்தரமாக அமைந்துள்ள  கம்பியில் இருந்து இருபக்கமும் நிலத்தைத் தொடும் வகையில் சாய்ந்ததாக பனை ஓலை வேயப்பட்ட கூரை அங்கு இருந்தது. இரு பக்கத்திலும் சுவர்கள் இருக்கவில்லை. கடும் காற்று மற்றும் மணல் தூசிப் புயல்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு இரு பக்கமாகக் கூரையை நிலத்துக்கு தொடர்புபடுத்தி இருப்பதாக அவர் அனுமானித்தார். அருகிலுள்ள வீடுகளும் அவ்வாறே உள்ளே பயன்படுத்தக்கூடிய நில அளவு சதுர அடி 60-70க்கும் கூடுதலாக இல்லை.

வீட்டின் முன் பக்கமும் பின் பக்கமும் கதவுகளுக்கு இடம் வைத்து எஞ்சிய பகுதிகள் பனை ஓலை மற்றும் பொலித்தீன் மூலம் மறைக்கப்பட்டிருந்தது. தேவைப்படும்போது மூடி விடுவதற்கு கதவை திறக்கக் கூடிய பனை ஓலைகளால் தயாரிக்கப்பட்ட கதவு மூடி ஒன்று முன்னாலுள்ள பனை ஓலை சுவரிற்குச் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.

முன்னால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணை முறையாக வளை அடித்து, தகடுகள் கூரைக்குப் போடப்பட்டிருந்தன.

நீதவான் தலையைத் தாழ்த்தி பனை ஓலை கதவு நிலையினூடாக வீட்டுக்குள் பிரவேசித்து மீண்டும் தலையைத் தாழ்த்தி பூதவுடலுக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் பொலிஸ் உத்தியோகத்தரும் தலைக்கவசத்தை அகற்றிவிட்டு கௌரவம் தெரிவித்தார்.

பின்பு நீதவான் மேசையின் அருகில் வைத்திருந்த கதிரையில் அமர்ந்தார். தட்டச்சாளர் மேசையின் அகலம் குறைந்த பக்கத்திலிருந்த கதிரையை இழுத்து அமர்ந்து கோவையை மடியில் வைத்துக்கொண்டார். ஊர்வாசிகள் சகலரும் மேசைக்கு 10அடி தூரமளவில் கூடியிருந்தனர். உயர் பதவி வகிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் மட்டும் நீதிபதிக்கு அருகிலிருந்தார். நீதவான் வீட்டின் பிரதான வாசலுக்கு எதிராகவே அமர்ந்திருந்தார். வீட்டுக்குள்ளான காட்சிகள் தெளிவாகத் தென்பட்டன. சரியாக வீட்டுக்கு  நடுவில் மேற்பக்கம் நோக்கி பண்டார வீட்டின் கூரையை நோக்கி சாய்ந்து கிடந்தார்.

வீட்டு நிலத்தில் இருக்கும் மென்மையான மணல் அவரது உடல் முழுவதும் கொட்டிக் கிடந்த  போதும் உடலின் மேற்பகுதியில் ஒரு சொட்டு மணல் கூட ஒட்டியிருக்கவில்லை.

வயிற்றின் நடுவில் சரியாகச் சொன்னால் பொக்குளைத் துளைத்துக்கொண்டு சரீரத்துள் புகுந்துள்ள கூர்மையான கிரிஸ் கத்தி போன்ற ஆயுதம் ஒன்றின் பிடியை மட்டும் காணக்கூடியதாக இருக்கின்றது. அதில் ஒருதுளி இரத்தம் கூட  வடிந்து சென்று வீட்டின் மணல் நனைந்திருக்கவில்லை.

பண்டார இரு கண்களையும் திறந்த வண்ணம் மேலே நோக்கி நேராக படுத்திருந்தார். பண்டாரவின் உடலுக்கு இரண்டு அடியளவு தூரத்தில் குந்திக்கொண்டு நிலத்தில் இருந்த பார்வதியின் கண் பெரிதாக வீங்கி இருந்தது. எனினும், கண்ணீர் கொட்டவில்லை. அவள் நிலத்தில் விழுந்த மேல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அவளது அழுக்கு  உள்ளாடை நிலத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவளது முகத்தில் ஐயப்பாடோ, கோபமோ, பாசமோ இருக்காத போதும்  அந்தத் தெளிவான முகத்தில் அபூர்வமான அழகு பிரகாசித்தது.

நீதவான் அவனைப் பார்த்தார். இரு கண்களும் நேருக்கு நேர் சந்தித்தாலும் பார்வதி அதுபற்றி கவலை கொள்ளவில்லை. அவர் பார்த்த பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். நீதவான் அவளது கண்களை பார்ப்பதற்கு முயற்சித்தார்.

கூட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு பின்பு ஒரு நாள் வயதுடைய 50கோழிக்குஞ்சுகளும் தேவையான உணவு, விட்டமின் வகைகள் மற்றும் மருந்துகளுடன் வந்த ஒரு குழுவினர் பார்வதியின் வீட்டுக்கு முன்னால் அழகான கோழிப் பண்ணை ஒன்றை சில மணித்தியாலங்களுக்குள் நிர்மாணித்தனர்.

போதியளவு இடவசதியுள்ள கோழிப் கோழிப்பண்ணையில் கோழிக்குஞ்சுகள் ஓடியாடி விளையாடுவதனையும், சிறகுகளை அடித்துப் பறக்க முற்படுவதும் உணவு உண்ணும் முறையும், சொண்டை கீழே நீட்டி தண்ணீர்ப் பாத்திரத்தில் தண்ணீர் சொட்டை  விழுங்கும்போது நீர்ச் சொட்டு சிறிய தொண்டையினூடாக கீழே போகும் போது தொண்டையில் ஏற்படும் அசைவும் பார்வதியின் மனதை மகிழ்ச்சியுறச் செய்தது.

நாளுக்கு நாள் வளரும் குஞ்சுகளைப் பார்த்து அவர் மிக மகிழ்ச்சியுடன் கோழிக்கூட்டில் வேலை செய்தார்.

காலை நேரத்தில் அரை மணி நேரம் கோழிக்குஞ்சுகளுக்கு வெளியே நடமாடி உணவினைத் தேடிக் கொள்வதற்கும் சுதந்திரமாக ஓடியாடி திரிவதற்கு அனுமதி வழங்கிய பார்வதி, அக்காலத்திற்குள் அவற்றைப் பாதுகாப்பதற்கு பெருமுயற்சி செய்தார். புழு ஒன்றைப் பிடிக்கும் குஞ்சு ஒன்று அதனை உண்ண முன் ஏனைய குஞ்சுகள்  அந்தக் குஞ்சினைத் தொடர்ந்து புழுவைப் பறித்துக் கொள்ள முயற்சிக்கிறது. (தொடரும்)

கமல் மெண்டிஸ்
தமிழில்: - என்.எம். அமீன்

Comments