தொலைந்த வாழ்க்கை | தினகரன் வாரமஞ்சரி

தொலைந்த வாழ்க்கை

இரவெல்லாம் துங்காமால் அழுது கொண்டேயிருப்பாள். ஏனோ அவளை ஆறுதல்ப் படுத்த அவளிடம் இருந்த ஒரே நம்பிக்கை அவளது ஒரு வயது நிரம்பிய கைக்குழந்தை தான் உயிராக இருந்தது. 

ஒரு ஆழ்ந்த சோகம் அவளை வாட்டிவதக்கிக் கொண்டிருந்தது. பதினெட்டு வயது நிரம்பிய அவளது உள்ளம் தேக்கு மரக்காடு பற்றி எரிவததைப் போல அமைதியிழந்து இருந்தது.

திக்கு திசை தெரியாதவளாய் தனித்து விடப்பட்ட ஆட்டுக் குட்டியைப் போல ஏதோவொரு கோணத்தில் திசை மாறிப் போனது அவளது வாழ்க்கை. பாவம் அவளுக்கு கொழுந்து பறிக்கவும் தெரியவில்லை. இரண்டு நாள் கூட அவளால் வேலையை செய்யமுடியவில்லை பக்கத்துவீடடு சரசு அக்காவுடன் தேயிலை மலைக்கு ஒரு படங்கு சாக்கினை உடம்பில் சுற்றி முதுகில் ஒரு கடினமான பையினையும் மாட்டிக்கொண்டு மலையில் ஏறிய அவளால் ஒரு நிதானத்தில் இருக்க முடியவில்லை .  ‘புள்ள காம்பராவில்'   விட்டு வந்த குழந்தையின் எண்ணங்களே அவளைச்  சுற்றி வந்தன. சரசு அக்காவிடம் அவளின் ஆழ்மனம் பல நூறு கேள்விகளை கேட்டுக்கொண்டேயிருந்தது.

எப்படியோ முதல் நாள் கடந்துவிட்டது.  ஆனால் அடுத்த நாள் தேநீர் நேரத்தில் குழந்தைய ஒரு தடவை   பார்த்துட்டு வாரேன் என்று பதட்டத்தில் ஓடியவள் ஒரு பாறையில் தடுக்கி விழுந்தாள்.  பயம் அவளின் கண்ணை மறைத்தது. கையில் இருந்த கொஞ்ச பணமும் கரைந்தது. குழந்தையின் பட்டினியை போக்கிக்கொள்வதற்கு வேறுவழியில்லை வேலைக்கு போகவேண்டிய கட்டாயம்.

பக்கத்து வீட்டு சரசக்காவின் வீட்டுக்காரர் ஒரு ஏஜென்சியில்  வேலை என்பதால் இவளுக்கும் ஒரு வேலையை பார்க்க சொன்னாள். ஏனோ அவ்வளவு பழக்கமில்லாத இந்த சரசு அக்கா தான் சோறு பொங்கினால் அவளுக்கும் சேர்த்துக்கொடுப்பாள். துணி துவைப்பதற்கும் அவள் சரசு அக்காவிடம் தான் பாதி சன்லைட் சோப் வாங்கினாள். அவளுக்கும் ஓர் அக்காவின் ஆறுதல் கிடைத்தது. ஆனாலும் பொம்மைக்காக பறிதவிக்கும் சிறுபிள்ளையின் மனம்போல் அவளின் மனம் வாடியது.

எப்படியோ ஒரு வழியாய்  ஓய்வு பெற்ற அதிபரின் வீட்டில் வேலை கிடைத்தது. புது இடம் புதுவேலை என்பதால் முதல் நாள் கைக்குழந்தையுடன் சென்று தயங்கி தயங்கி நின்றாள். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த முன்னாள் அதிபரின்  மகள்வழி பேரப்பிள்ளைகள் அவளை சுற்றி ஓடி விளையாடியது. அது அவளுக்கு சிறு அமைதியை கொடுத்தது. வாடி அம்மா இங்க எல்லா வேலயும் நீயும் நானும் தா செய்யனும் நா எல்லாத்தையும் சொல்லித்தாரேன் முதலே ராஜன்கிட்ட சொன்னது போல அன்னன்னக்கி சம்பளம் கொடுத்துர்ரேன் மா” என்றார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கண் முன்னே அவளின் குழந்தை இருந்ததால் வேலையை நிம்மதியாகத்  தொடங்கினாள்.

தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள். துணி எல்லாம் துவைத்து காயப்போடுவாள்.    சமையலுக்கும் உதவியாக நிற்பாள். வீட்டை சுத்தம் செய்வாள் மார்கெட்டுக்கு வீட்டுக்கார அம்மாவுடன் சென்று மரக்கறிகளையெல்லாம் வாங்கி வருவாள். வீட்டுக்கார அம்மாவின் பேரப்பிள்ளைகளை கிளாஸிற்கு கூட்டி சென்று வருவாள்.  இருந்தாலும் அவள் வருத்தம் தோய்ந்த முகத்துடனேயே எப்போதும் காட்சி தருவாள்.  வேலை செய்து கொண்டிருக்கும் போது அழுவாள்.

அப்படித்தான் ஒரு நாள்  தண்ணீர் சுட வைத்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு யோசனையில் முழ்கிவிட்டாள் நல்ல நேரம் கிச்சனில் இருந்து வந்த புகையினால் எல்லோரும் பதறி ஓடி வந்து அடுப்பை அணைத்தனர். நலலைவேளை ஒரு நொடிப்பொழுது தாமதித்திருந்தால்   பற்றியிருக்கும்.

ஏனோ அவளை யாரும் எதுவும் சொல்லவில்லை பார்த்து பத்திரமாக வேலை செய்யம்மா என்றனர்.  அவளின் அந்த நிலையைப் பற்றி வேலைக்கு சேர்த்த ராஜா கூறியிருக்க வேண்டும். அன்றும் அப்படித்தான் அம்மா அம்மா ‘இந்தாடியம்மா’ என்று ஒரு குரல். கனவிலிருந்து சட்டென்று விழித்தது போல அவள் திடிக்கிட்டு பார்த்தாள்.

 சிங்கிலிருந்து நீர் வழிந்தோடி கிச்சன் முழுவதும் நீர்.  அவளோ பாத்திரம் கழுவ வந்து அப்படியே நின்று கொண்டிருந்தாள். அன்றிலிருந்து அவளை எந்த வேலைக்கும் தனியான விடுவதில்லை அக்குடும்பத்தினர். பகல் வேளையில் அங்குதான் அவளுக்கு சாப்பாடு.

டீ குடிக்கும் போது அவளுக்கும் நீயும் நீரை சுடவைத்து ஊற்றிக்கொள் அம்மா என்றாலும் அவள் தன்னுடைய குழந்தைக்குத்தான் பால் ஊற்றி கொடுப்பாள்.

இங்கு வந்ததற்கு பிறகுதான் குழந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம்.

அவள் வீட்டில் யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டாள. இரவு வேலை முடிந்து போகும் போதும் சம்பளப் பணத்தை வாங்கிக்கொண்டு கையெடுத்து கும்பிட்டு தான் செல்வாள். தனியாக குழந்தையையும் வைத்துக்கொண்டு அவள் படும் அவஸ்தையை பார்த்து அவர்களும் வருத்தம் அடைந்தனர். 

அன்று ஏனோ தெரியவில்லை காலையிலிருந்து அவள் வேலைக்கு வரவில்லை அடுத்த நாள்வந்த அவளிடம் ‘ஏனம்மா நேற்று எங்கே போயிருந்தாய்? வீட்டில் சின்னவனின் பிறந்தநாள் இந்தாடியம்மா உனக்கும் ஒரு புடவை எடுத்தேன் வாங்கிக்கொள் என்றார் எஜமானியம்மா.  அவளின் மனமோ அதை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை வேண்டாமென தலையசைத்தாள்.

வீட்டுக்கார அம்மாவின் பேரப்பிள்ளைகள் கூட அவளின் குழந்தையுடன் ஒரு சகோதரனைப்போல ஆசையாய் தம்மிடமிருந்த விளையாட்டுப் பொருட்களையெல்லாம் காட்டி விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு அந்திப் பொழுதினில் வேலையெல்லாம் முடித்துவிட்டு அவள் செல்லும் வழியில் ஒரு கார் வீட்டை நோக்கி வந்தது.

வந்தவர் ஒரு பொலிஸ் அதிகாரி முன்னாள் அதிபரின் நண்பனும் நெருங்கிய உறவினரும் ஆவார்.  அப்போதுதான் நேற்று அந்த பெண்ணை  சிறைச்சாலையில் பார்த்தது ஞாபகம் வந்தது.

‘அங்கு அவனை பார்க்கத்தான் அவள் வந்தாள்’ என்றதும் யார் அவன் என்றனர். அவன் கைதி ராஜ் எப்ப பார்த்தாலும் அடிதடி.  போன கிழமைக்கூட அங்கு  ஏதோ தகராறு அவன் அடித்த அடியில் நாலைந்து பேர் வைத்தியசாலைளில். அவனுக்கு கோவம் வந்தால் கண்மூடித்தடிமாக நடந்துகொள்வான். இப்பொழுது தனிச் சிறைச்சாரையில் அடைத்து வைத்துள்ளனர். அவனொன்றும் அதற்கெல்லாம் புது ஆளல்ல மாசத்தில் பாதி நாள் அவனுக்கு அங்கேயே கழிந்துவிடும் என்றார். ஆனால் முன்னெல்லாம் வயது போன மூதாட்டிதான் இவனை கால்கடுக்க வெளியில் நின்று பார்த்து செல்வார்.  இப்போதோ அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து இவள்தான் பார்த்துச் செல்கிறாள். 

அது சரி அவள் வாங்கி வந்த வரம் அவளின் தலையெழுத்து அவனையெல்லாம் நம்பி இப்படிஇயாரு வாழ்க்கை தேவைதானா? என்றார்.

சரி நீங்களாவது அடைக்கலம் கொடுத்தீங்க என்று ஆறுதல் பட்டார்.  இரவு வானில் நட்சத்திரங்களுக்கு மத்தியில் தனித்துவிடப்பட்ட பிரகாசமான நிலவைப்போல அவளின் மனம் அவனைச் சுற்றி சுற்றி வருவதை பாவம் யாரும் அறிந்திருக்கவில்லை.. அவளும் அந்த குழந்தையை தோளில் சுமந்து அந்த நிலவொளியில் நடந்து தனிமையில் செல்கிறாள்.

பசறையூர் சீரா

Comments