கொல்லாமற் கொல்கிறீர்கள் | தினகரன் வாரமஞ்சரி

கொல்லாமற் கொல்கிறீர்கள்

வீதி வெறிச்சோடிப் போயிருந்தது.

வழமையாக ஓரளவேனும் சனநடமாட்டம் இருக்கும். ஆனால் இன்று அவ்வளவாக இல்லை. சந்தியில் நின்ற ஆலமரத்தின் கீழ் ஐந்தாறு பேர் பேரூந்தின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். போக்குவரத்தும் அவ்வளவாக இல்லை. நாளுக்கு இரு பேரூந்துச் சேவைகள் மட்டுமே காலையில் ஒன்று மாலையில் ஒன்று.

மல்லாவிக்கு செல்வதாய் இருந்தால் என்ன பாண்டிகுளம், கல்விளான் போன்ற இடங்களுக்குச் செல்வதாய் இருந்தாலென்ன இவ்விரு பேரூந்துகளையும் எவ்வாறோ பிடித்தால் மட்டுமே சாத்தியம்.

சில வேளைகளில் காலையோ அல்லது மாலையோ பேரூந்துச் சேவை இடம்பெறாதும் விடுவதுண்டு.

மாலை 02 மணிக்கு யாழ்ப்பாணம் செல்கின்ற பேரூந்து வண்டி புழுதிப் படலத்துக்குள் தன்னைச் செருகியவாறு ஐயன்கன்குளம் வழியாக நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் நடப்பது போல தள்ளாடியபடி சில ஆசிரியர்களையும் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

போர் முடிவடைந்து மீள்குடியமர்வுகளும் மெல்ல முளைத்துக் கொண்டாலும் வீதிகள் மட்டும் இன்னமும் புனரமைப்புச் செய்யப்படவில்லை. போரின் முன்னரான காலத்தில் இருந்த நிலையிலும் பார்க்க இன்னும் மோசமாகவே சிதைந்து கிடந்தது.

பேரூந்து கிளம்பிச் சென்ற புழுதி இன்னும் தணியவில்லை. ஆனாலும் இதெல்லாம் பழக்கப்பட்டதுதான். அன்று பழஞ்சோற்றுக்கும் பச்சை மிளகாய்க்கும் பழக்கப்பட்டுப் போன உடம்பு இன்று பங்குனிவெயிலுக்கும் படரும் புழுதிக்கும் பழக்கப்பட்டுப் போனது.

இடப்பெயர்வின் பின் மேற்கொள்ளப்பட்ட மீள் குடியமர்வை அடுத்து மீண்டும் தமது சொந்தக் கிராமமான ஐயன்கன்குளத்தில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்துக் கொண்டு மீண்டும் தன் வாழ்க்கைக்கு தலைப்பட்டாள் சாந்தி.

வன்னிப் போரில் முள்ளிவாய்க்காலில் தனது கணவனை கண்முன்னே கொத்துக்குண்டுக்குப் பறிகொடுத்துவிட்டு பிள்ளைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பாக நலன்புரி நிலையத்தில் தங்கியவள் மீள் குடியமர்வில் மீண்டும் சொந்தவூர் மீண்டாள்.

கணவனையும் இழந்த நிலையில் மூன்று பிள்ளைகளையும் வளர்த்தெடுக்க வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டவளாய், அந்த பொறுப்பை ஒரு தாயாக நின்று ஏற்றவள், தனது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்த பாடுபட்டாள். பிள்ளைகளைக் கற்பிப்பது, வாழ்வாதாரத்தைத் தேடுவதென அவளது தலையில் ஆயிரம் சுமைகள் மலையாக....

தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியைப் பெற்று வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய பலசரக்குக் கடையை அமைத்துக் கொண்டாள்.

நேரம் பகல் பன்னிரெண்டை எட்டிக் கொண்டிருந்தது.

சாந்தியின் கடையை நோக்கி இரண்டு மூன்று பெண்கள் வந்து கொண்டிருந்தனர். தொடர்ந்தும் சிலர் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கடையிலும் அவ்வளவு வியாபாரம் இல்லை. நாளாந்தம் கிடைக்கின்ற சிறு தொகை இலாபத்தில் ஒருவாறு தன் குடும்பச் சக்கரத்தைச் சுழற்றும் சாரதியானாள்.

இவ்வாறாக நான்கு ஜீவன்களினதும் வாழ்க்கை அம்மன் பவனியாய் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

கிடைக்கின்ற இலாபத்தில் இயன்றளவு சேமித்து மேலும் சில பொருட்களைக் கொண்டு கடையைச் சற்று விஸ்தரிக்கத் தொடங்கினாள்.

முள்ளிவாய்க்காலோடு வாழ்வு முடிந்து விட்டது என எண்ணி முடங்கிவிடாமல், நெஞ்சுரம் பெற்று தன் வயிற்றிலே வளர்ந்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற ஓர்மத்துடன் தனிமரமாய் வாழும் எண்ணிலடங்கா பெண்களில் ஒருத்தியாய் சாந்தியும் இருந்தாள்.

ஏணையிலே கிடந்த பிள்ளையின் அழுகுரல் கேட்டு ஏணைக்கு அருகில் சென்றவள், நித்திரையால் எழுந்து விட்ட தன் கடைக்குட்டியை நெஞ்சோடு வாரி அணைத்தவளாய் மீண்டும் கடைக்குள் நுழையவும், இரண்டு பேர் பொருட்களை வாங்குவதற்காய் கடைக்குள் வரவும் நேரம் சரியாக இருந்தது.

“என்ன சுந்தரம், இன்னும் விதானையாரின் கூட்டம் தொடங்கல்லையோ? பதிலுக்கு ஆறுமுகம் விதானையார் வீட்டுத்திட்ட கூட்டம் என்று சொல்லி நெடுக கூட்டம் போடுறார் ஆனால் வீடு வந்தபாடு இல்லை.

என்றவாறு அலுத்துக் கொண்டு சைக்கிளை வேலியோரமாக சாத்தி விட்டு போடப்பட்டிருந்த கதிரையொன்றில் வந்து அமர்ந்து கொண்டார் ஆறுமுகம்.

“இல்லலையண்ணை இன்னும் அவங்கள் வரக்காணம்” என்றவாறு தோளில் கிடந்த துவாய்த்துண்டை எடுத்து ஒரு உதறு உதறிவிட்டு, முகத்தை ஒரு தடவை அழுத்தித் துடைத்துக் கொண்டார் செல்வம். முகமெங்கும் முளைத்துக் கிடந்த வியர்வைத் துளிகள் அப்படியே பொசுங்கிப் போயின.

“அப்பப்பா.. என்ன வெயில்..!!!முகத்தைச் சுளித்தவாறே செல்வம் கூறி முடிக்கவும் ஆறுமுகம்.

“ஓமடாப்பா பங்குனியெண்டா சும்மாவா? அது தன்ர வேலையைக் காட்டுது.

கிராம முன்னேற்ற அபிவிருத்திச் சங்க ஆண்டுக் கூட்டமும் வீட்டுத்திட்டக் கூட்டமுமாம். சனம் பெரும்பாலும் வந்து சேர்ந்துவிட்டது. ஆனாலும் இன்னும் சிலர் வந்தாகவில்லை. இன்னும் சிலர் வந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். கூட்டத்துள் ஒருத்தியாய் சாந்தியும் வந்து கொண்டிருந்தாள்.

“இஞ்சர் ஆறுமுகண்ணை, உவள் சாந்தியிடை கதையேதும் அறிஞ்சியளோ..”

காதும் காதும் மெல்ல கதை பேசலாயின.

“என்னடாப்பா.. அறிஞ்சதே!! பேப்பரில வராத குறை

என்னடா வெண்ண உப்பிடிக் கேக்கிறாய். சீச்ச்சீ .. என்ன பொம்பிளை. வாய் கூசுது இவளின்ட கதையைக் கதைக்க..” என்றவாறு செல்வத்தின் தோளில் தட்டிக் கொண்டார் ஆறுமுகம்.

என்னண்ணை செய்ய.. அவன் சந்திரன் எவ்வளவு நல்ல பொடியன். ஊரில யாரக் கேட்டாலும் அவனத் தெரியாததுகள் கிடையாது”

என்று ஆறுமுகம் கூறி முடித்தும் முடியாததுமாய் .

“ஓமண்ணை சந்திரன் நிம்மதியாய் போய்ச் சேர்ந்திட்டான். இவள் இப்ப தன்ர கூத்து. பூ பொட்டு இல்லாமல் இருக்கிறாள். அடக்க ஒடுக்கமாய் இருக்கணும் எண்டு சிந்திக்கிற வயசு இல்லையோ இவளுக்கு, வேற வாழ்க்ைக தேவைப்படுது அவளுக்கு.

ஓமடா செல்வம் ஒரு கடையைப் போட்டாய். சரி பிள்ளை குட்டியை வளக்கத்தானே வேணுமெண்டு விட்டா, இளந்தாரிமட்டங்கள் இப்ப வேற கடையளுக்கு போறாங்களில்லையெல்லோ .. என்று ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார் ஆறுமுகம்.

கூட்டத்தில் இருந்த சனக் கூட்டம் தாங்களும் தங்கள் பாடுமாய் ஒரு புறம். இவர்கள் மறு புறம்.

பின்னையென்ன அண்டைக்கு சந்தசாமி அண்ணையிட பொடிப்பயலிடம் வெத்திலை வாங்கி வா எண்டு சொல்லிவிட அவன் வந்து சொல்லுறான் சாந்தி அக்கா கடையில இல்லையாம். ஏன்ரா வேற கடையில வாங்க ஏலாதா என்று கேட்க தான் வேற கடையளுக்கு போறேல்லையாம் சாந்தியக்கா கடைக்குத்தான் போறவராம்.. அப்ப பாருங்களன்.

ஆ ஆ நல்ல கூத்து ஏற்கனவே ஒருத்தன வளைச்சுப் பிடிச்சு காசக்கீச வாங்கி கடையொண்டைப் போட்டிற்றாள். அப்ப மிச்சம் என்று கூறியவாறு செல்வத்தின் முகத்தைப் பார்த்தார் ஆறுமுகம்.

ஓமண்ணை ச்சீ! வெட்கங்கெட்ட வேலையண்ண. உது மட்டுமல்ல .. சுந்தரமண்ணை இருக்கிறார் எல்லோ, அவரோடை இவ கடும் லிங். பிள்ளையள ஆள்த்தான் பள்ளிக் கூடத்துக் கெல்லாம் ஏத்தியிறக்கிறார். இராசாத்தியக்கா என்ன பாவம் செய்தவவோ.. என்று ஆறுமுகத்தாரின் தோளில் மெல்லத் தட்டி குசு குசுத்தான் செல்வம்.

உந்தப் பம்பலை நானும் கனநாள் கண்டிருக்கண்டா. உது மட்டுமில்லை ஆள்த்தான் கடைக்கு சாமான்கள் எடுத்துப் போடுதாம் .

எல்லாரும் மயங்கிட்டாங்க போல.. கூட்டத்திற்கு வர வேண்டிய முக்கியஸ்தர்கள் வாகனத்தில் வந்திறங்கினார்கள். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் அமைதியானார்கள்.

வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல் கூட்ட முன்றலில் இருந்த முக்கியஸ்தர்கள் பலரதும் கண்கள் நோண்டிக் கொண்டிருந்தன.

அன்று சாந்தியின் கடை திறக்கவில்லை

நாளையும் பூட்டு

இராசம்மா அக்காட வீடு குடிபூரல்.

இராசம்மா அக்காவும், சாந்தியின் அம்மாவும் நீண்ட கால நண்பிகள். பாரிசவாத நோயினால் பீடிக்கப்பட்டு இராசம்மாவின் தாய் நாலைந்து ஆண்டுகளில் இறந்து விட்டார்.

பிள்ளை எனக்கு ஓடியாடி வேலை செய்யவும் யாருமில்லை. எனக்கு கொஞ்சம் உதவியாய் இரு மோனை. ஒரு மாதிரி உந்தப் புது வீடு குடிபூரலை நடத்தி முடிச்சிடனும். மறக்காம வந்திடு. பிள்ளை”

என்று விட்டுப் போயிருந்தார் இராசம்மா அக்கா. குடிபூரல் வீட்டு பலகாரச் சூடு மற்றும் இன்னும் பல வேலைகளில் சாந்தி துடிதுடிப்பாய் இருந்தாள். புது வீட்டிற்கான படம் ஆற்றங்கரை பிள்ளையாரில் வைக்கப்பட்டிருந்தது. படத்தை எடுத்து வருவதற்காச் சென்ற வாகனத்தில் சாந்தியும் சென்றிருந்தாள். சென்றவர்கள் படம், கண்ணாடி முதலான பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்ள சாந்தியும் படம் ஒன்றைத்தூக்க முயன்ற போது ..

அவளது கையை யாரோ பிடிப்பதாய் ஒரு உணர்வு.

அவளை ஒரு தடவை தூக்கி வாரிப் போட்டது. படத்தை தூக்க முயன்ற கரங்கள் மெல்ல மெல்ல பின்வாங்கிக் கொண்டன.

சாந்தியைத் தவிர வேறு எவரும் அந்தச் சம்பவம் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு பெண் தனது கணவனை இழந்து வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறாள். என்றால் அவளைத் தூக்கி நிமிர்த்தி நல்ல பாதையொன்றை காட்ட வேண்டிய சமுதாயம் இவ்வாறு தீ நாக்குகள் கொண்டு நச்சரிப்பது அதுவும் ஏராளமானோர் உள்ள சபையில் அவமதிப்பது.

இவை எதனையும் சாந்தியால் மட்டுமல்ல அவள் நிலையிலுள்ள எந்தவொரு பெண்ணாலும் தாங்கிக் கொள்ள இயலாது.

உண்மையிலே சுந்தரம் நிறைய வழிகளில் சாந்திக்கு உதவி புரிவான். சுந்தரத்திற்கும் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையொன்றும், முன்பள்ளிக்குச் செல்லும் பிள்ளையொன்றும், இருந்தன. அது போலவே சாந்திக்கும். ஆகவே தனது பிள்ளைகளைக் கூட்டிச் செல்லும் போது சாந்தியின் பிள்ளைகளையும் கூட்டிச் செல்வதையும். மீளவும் ஏற்றி வருவதையும் அவன் வழக்கமாக்கியிருந்தான்.

வயதிற்கு வந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கதைத்தால் கூட அதனைக் காதலாகவும் தவறான நோக்கத்தோடும் ஊடுருவிப் பார்க்கும் எமது சமூகக் கண்கள் அவளது செயற்பாடுகளையும் அவ்வாறே நோக்கின.

அவள் பாவம் உண்மையில் பாவம் !!!

அவளது பக்கம் நின்று நோக்கும் போதுதான் அவளது நிலை புரியும். அதுதான் சொல்வார்கள் தலையிடியும், காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று. கணவனைப் பறிகொடுத்து வாழ்க்கையோடு போராடிய படி அன்றாட உணவுக்காய் அலையும் பெண்களை ஏன் இந்தச் சமூதாயம் இவ்வாறு ஓரவஞ்சனை செய்கின்றது, என்பதைச் சாந்தியால் எள்ளளவும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் அதனையெண்ணி பல முறை வருந்தியிருந்தாலும் இராசம்மாவின் குடிபூரல் நிகழ்வில் நடந்த சம்பவம் அவளை முற்றாகப் பாதித்திருந்தது. அவளைக் கொதிப்படையச் செய்து விட்டது.

ஊரில் பலரும் சாந்தியை பலவாறாகக் கதைக்கின்ற போதிலும் அவள் மட்டும் அவ்வாறான ஒரு நோக்கோடு எவரோடும் பழகியதில்லை.

நிறுவனக்காரனோடு கதைச்சு காசு வாங்கிறாள். கடைக்கு வாறபோறவனோட பல்லிளிக்கிறாள். சுந்தரத்தை மடக்கி வைச்சிருக்கிறாள்.

இப்படி இன்னும் இன்னும்.

ஏராளம் !

என்ன சனங்களப்பா, ஒருத்தி இப்படி அவலப்படுகிறாள் எண்டு பாக்குதுகளில்லை. உதவிதான் செய்ய வேண்டாம் அப்படி உபத்திரமாவது செய்யாமல் இருந்தால் கூட நிம்மதி என்று அடிக்கடி நொந்து கொள்வாள் சாந்தி.

காய்க்கின்ற மரத்திற்குத்தானே கல்லெறி படும் என்பார்கள். அதுபோல கற்களால் மட்டுமல்ல, சொற்களாலும் சாந்தியின் மனது தாக்கப்பட்டுப் போய் கிடக்கிறது. பெற்ற தந்தை மற்றும் சகோதரங்களுக்கு மேலாக தனது கணவனையே பறிகொடுத்து விட்டு நிற்பவளின் காயங்கள் ஆறுமுன்னே மேலும் மேலும் அவளுடலில் புதிய காயங்கள் திணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இஞ்சார் இராசம்மா உவள் சாந்தி போடுற உடுப்புக்களைப் பாத்தியோ?

இப்பத்தைப் பொடியள் பொட்டையள் போடுற போல அவவிட உடுப்பு.

என்றவாறு குசினிக்குள் நுழைந்தாள் புஸ்பம்.

ஓமடி புஸ்பம் நானும் அவதானிச்சனான். அப்பத்தைப் பொடியள் பொட்டையள் கூட அப்படிப் போடாதுகள். பதினெட்டு வயசுப் பேரழகி எண்ட நினைப்பு போல அவவுக்கு.

இறுக்கமான பாவாடை. அதுக்க கண்டறியாத ஒரு ரீசேட்..

ஓமக்கா! அவன் சந்திரனை பறிகொடுத்துவிட்டு இவள் பாவி இந்த ஆட்டம் ஆடுறாள். அதுக்க அவர் சுந்தரத்தாரும் சேர்ந்தெல்லே.

மக்கள் கூடுமிடமெங்கும் பலரது பேச்சும் சாந்தியைப் பற்றியதாகவே இருந்தது. சாந்திக்கு ஆதரவாய் சிலர் பேசினாலும் அவர்களது கதைகள் எடுபடுவதில்லை.

கணவனை இழந்த ஒரு பெண் தலைநிமிர்ந்து வாழ முடியாதா? சரியான முறையில் மறுமணம் ஒன்றைச் செய்ய முடியாதா? அவளுக்குச் சுதந்திரம் இல்லையா?

மற்றைய பெண்களைப் போல அவளுக்கும் முன்னுரிமை கிடைக்கப் பெறாதா?

இவை யாவற்றையும் வழங்க வேண்டிய சமுதாயமே இழந்து நிற்கையில் இத்தகைய பெண்கள் எப்படித்தான் தலை நிமிர முடியும்.

ஆனாலும் எவரது பேச்சுக்கும் தலையசையாது தான் செய்வது தனக்கு சரியானது என்ற தோரணையில் சாந்தி தனது வாழ்வை நகர்த்திச் செல்லலானாள். இப்போது சாந்தியின் கடைக்கு சிலர் பொருட்களை வாங்க வருவதுமில்லை. குறிப்பாக சாந்தியைப் பற்றி கிசுகிசுக்கும் பழசுகள் அந்தப்பக்கம் நாடுவதில்லை.

விடிந்துவிட்டது.

பிள்ளைகளைத் தயார்ப்படுத்தி பாடசாலைக்கு சுந்தரத்தோடு அனுப்பிவிட்டு சாந்தி கடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

இஞ்ச புள்ள சாந்தி உன்னட்டதான்

என்று பேச்சுக் கொடுத்தவாறு..

என்ன சொல்லுங்கண்ணை ..

மரியாதையாகவே பேசினாள் சாந்தி

இஞ்சபுள்ள ஊருலகம் எல்லாம் உன்னைப்பற்றித்தான் கதை. ஏன் இப்படியெல்லாம்...?

எஞ்சிய வார்த்தைகள் முக்கித்தக்கி நின்றன.

இதுவரை நாளும் உறங்கிக்கிடந்த சாந்திக்கு முகத்திற்கு முகம் ஆறுமுகம் இவ்வாறு கூறியதும் உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டிருந்தது. மனதை உறுத்தியது. இன்னும் தான் அமைதி காப்பது தனக்கு அவ்வளவு நல்லதல்ல என்பதையும் ஊகித்தவளாய்....

“என்ன சொன்னியளண்ணை”

அப்போதும் மரியாதை தவறவில்லை ஆனாலும் தொனியில் சற்று அதட்டல் இருக்கவே செய்தது.

குபீரென அவளது உடல் வியர்த்துக் கொட்டியது. இல்லைப் பிள்ளை நீ விதவையாய் இருக்கிறாய் அப்படியிருந்து கொண்டு இப்படியெல்லாம்.”

நிப்பாட்டுங்கண்ணை

ஆறுமுகத்திற்கு காதைப் பொத்தி அறைந்தது போல் இருந்தது. விழியோரம் பூத்திருந்த கண்ணீர்த்துளிகள் அணைக்கட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும் நீராய்த் தரையை நனைந்தன.

அண்ணை நான் உங்களுக்கு ஒண்டு சொலலுறன். உங்களுக்கு இத்தனை வயசாகியும் அறிவு மட்டும் வளரவே இல்லை. அறிவு செத்துப் போச்சு, கேவலம், உங்களைப் போன்ற சிலரின் வார்த்தைகள் ச்சீ.. கேவலம் உறுதியிருந்தது.

சஞ்சயன் சண்முகநாதன் 

Comments