கடுகதி ரயில் மோதி 62 பேர் பலி | தினகரன் வாரமஞ்சரி

கடுகதி ரயில் மோதி 62 பேர் பலி

அமிர்தசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது கடுகதி ரயில் மோதியதில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். விபத்து நடந்த ரயில் பாதை பகுதியில் 300 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து நேர்ந்த பகுதியில் இருந்தவர்கள் தெரிவிக்கையில், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோரா பதக் பகுதியில் தசரா விழா கொண்டாட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்றைய தினம் மாலை நடைபெற்ற விழாவில் பெருந்திரளானோர் பங்கேற்றனர். ரயில் தண்டவாளத்தையொட்டி உள்ள மைதானத்தில் இராவண வதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதைக் காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். நிற்பதற்குக்கூட இடம் இல்லாமல் நெருக்கடியாக இருந்தது.

இதனால், அருகில் இருந்த தண்டவாளத்திலும் மக்கள் நின்றுகொண்டு இராவண வதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஜலந்தர் நகரிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி அவ் வழியே கடுகதி ரயில் வந்துகொண்டிருந்தது.

இராவண வதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததாலும், இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததாலும் ரயில் வந்துகொண்டிருந்ததை அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுக்குத் தெரியவில்லை.

ரயில் வந்துகொண்டிருந்த சப்தமும் அவர்களுக்கு கேட்கவில்லை. இந்த நேரத்தில் ரயில் மோதியது.

ஒரே நேரத்தில் எதிரெதிர் புறத்தில் இரு ரயில்கள் வந்துகொண்டிருந்தால் பலரால் தப்பிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அமிர்தசரஸ் மாவட்ட துணை ஆட்சியர் ராஜேஷ் சர்மா கூறுகையில்,

விபத்து இடம்பெற்ற பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 62 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றார்.

அமிர்தசரஸ் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

ரயில் வருவது தொடர்பான முன்னறிவிப்பு எதுவும் விழா ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விழாவில் எம் எல் ஏ நவ்ஜோத் கௌர் சித்து தலைமை விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். விபத்துக்கு பிறகு அவருக்கு எதிராக அங்கிருந்தவர்கள் கோஷமிட்டனர். எனினும், அவர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ரூ.5 லட்சம் இழப்பீடு- பஞ்சாப் முதல்வர்: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

அதிகாரிகள் சிலர் கூறுகையில், இராவண வதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தது.

வெடியிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஒரு பகுதியினர் தண்டவாளத்தை நோக்கி பின் நகர்ந்தனர். இதனால், ஏற்கெனவே அங்கு நின்றுகொண்டிருந்தவர்களும் பின்னால் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த ரயில் அவர்கள் மீது மோதியது என்று தெரிவித்தனர்.

உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பஞ்சாப் அரசிடமும், காங்கிரஸ் கட்சியினருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தினார்.

குடியரசுத் தலைவர்,

பிரதமர் இரங்கல்

அமிருதசரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பஞ்சாப் அரசுக்கு செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா உட்பட மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.


ஜனாதிபதி அனுதாபம்

 

பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ள ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். இந்திய ஜனாதிபதி சிறி ராம்நாத் கோவிந் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியை தனித்தனியே அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ரயில் விபத்து குறித்த தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பஞ்சாப்பில் இடம்பெற்ற விபத்தினால் பலர் உயிரிழந்தும் காயமடைந்துமுள்ள செய்தியை கேட்டுத் தான் ஆழ்ந்த கவலையடைவதாக கூறியுள்ளார்.

 

Comments