மதவாத அரசியல்! | தினகரன் வாரமஞ்சரி

மதவாத அரசியல்!

மத சார்பற்ற நாடான இந்தியாவில் அது நடந்து 27ஆண்டுகளாகின்றன.

1992 டிசம்பர் 6ஆம் திகதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்திருக்கும் பாபர் மசூதி, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கரசேவர்களின் (கரசேவக் என்றால் செங்கல்லை நிலத்தில் ஊன்றுபவர் என்று பொருளாம்) ஆக்ரோஷமான தாக்குதலில் 464 வருட பழைமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு தரை மட்டமானது. அப்பள்ளிவாசல் பாபர் மன்னனால் கட்டப்பட்டது என்பதால் அதன் பெயர் பாபர் மசூதி என வழங்கப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், இராமாயண கதையில் நாயகனான இராமர் பிறந்த இடம் அயோத்தி என்பதால் அவர் பிறந்திருக்கக்கூடிய இடத்தில் ஒரு இராமர் கோவில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டே அந்த இடத்தில் பாபர் மன்னன் மசூதியை அமைத்ததாகவும் ஒரு கதையாடல் நீண்டகாலமாகவே மத்திய பிரதேசத்தில் இருந்து வந்துள்ளது. ஆக்ராவில் ஏற்கனவே அமைந்திருந்த இந்து கோவிலை இடித்து விட்டுத்தான் அந்த இடத்தில் தாஜ்மஹால் அமைக்கப்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது.

பூமி நாடுகளாகப் பிரிக்கப்பட்டு அரசன் என்ற தலைவனுக்குக் கீழ் மக்கள் வாழும் முறை நடைமுறைக்கு வந்து ஐயாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இக் காலப்பகுதியில் உலகெங்கும் போர்கள் ஓயாமல் நிகழ்ந்த வண்ணமே இருந்துள்ளன. ஒரு மன்னர் இன்னொரு நாட்டைக் கைப்பற்றுவதும், அங்குள்ள வளங்களை சூறையாடுவதும் வழமையான விடயங்கள். ஆக்கிரமிக்கும் அரசர் மாற்று மதத்தவராக இருக்கும்போது அவர் அந்நாட்டு வழிபாட்டு தலங்களை அழிப்பதும் அக்காலத்தில் சாதாரண விடயங்கள். டில்லி சோமநாதர் ஆலயம் படையெடுத்து வந்த இஸ்லாமிய அரசர்களினால் 16 தடவைகள் அழிக்கப்பட்டதாக ஒரு குறிப்பு உண்டு. தென்னிந்தியாவுக்கு படையெடுத்து வந்த அலாவுதீன் கில்ஜி மதுரை மீனாட்சியம்மன் கோவிலைத் தகர்த்ததாகவும், தஞ்சை பெரிய கோவிலை மண்ணால் மூடி ஒரு குன்றுபோல காட்டியதால் அது அழிவில் இருந்து தப்பியதாகவும் வரலாறு சொல்கிறது. பின்னர் வந்த போர்த்துக்கேயரும் இந்து, பெளத்த ஆலயங்களை தகர்த்து கத்தோலிக்க தேவாலயங்களை அமைத்தனர்.

இத்தகைய நிகழ்வுகள் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் நிகழவில்லை. உலகெங்கும் நிகழ்ந்தன. ரோமப் பேரரசு கத்தோலிக்கத்தைத் தழுவியபோது ரோமர்களிடமிருந்த பண்டைய சமய பழக்கவழக்கங்கள் துடைத்தெறியப்பட்டன. புதிய சமய நம்பிக்கைகள் நிலை பெற்றதால்தான் பண்டைய கிரேக்க சமயம் அழிந்ததோடு அதன் ஒப்புயர்வற்ற கடவுள்களின் உருவச் சிலைகள் அருங்காட்சியங்களின் பொக்கிஷங்களாகின. ஈரானில் செல்வாக்கு பெற்றிருந்த பஹாய் சமயம் இஸ்லாத்தின் வருகையின் பின்னர் மங்கி மறைந்தது.

இவ்வாறெல்லாம் நிகழ்ந்தது சரியா, தவறா, எதேச்சதிகாரம் அல்லவா? என்றெல்லாம் இன்றைக்கு கேள்விகள் எழுப்பி உரையாடல் நடத்தலாமா? என்பதே கேள்வி. கொச்சிக்கடை அந்தோனியார் கோவில் அமைவதற்கு முன்னர் அங்கே இந்துக் கோவில் ஒன்று இருந்ததாகவும் கதையாமல் உண்டு. இவை அனைத்தும் வரலாற்றுத் தவறுகள் என்று கூறும் சில பிரிவினர் இந்து கோவில்களை இடித்து விட்டு கட்டப்பட்ட மசூதிகளையும் நினைவாலயங்களையும் தகர்த்துவிட்டு அங்க ஏற்கனவே இருந்த இந்து கோவில்களை மீள் நிர்மானம் செய்ய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். சின் கொள்கையாக இருக்கிறது. ஆக்ரா இந்துக்களிடம் கேட்டால், ஒரு சிவன் கோவிலை இடித்துவிட்டுதான் அந்த இடத்தில் சாஜஹான் தாஜ்மகாலை நிர்மாணித்தார் என்பார்கள்.

இந்தத் தீவிர வாத இந்து கோட்பாட்டின் அடிப்படையில்தான் பாபர் மசூதியைத் தகர்த்துவிட்டு அங்கே இராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோட்பாட்டில் பிறந்ததே ‘ராமர் ஜென்ம பூமி’ கோரிக்கை.

1992க்கு முன்னர் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது. மதசார்பற்ற காங்கிரஸ் மற்றும் அதன் மதசார்பற்ற அணியை மக்கள் மனதில் கேள்விக்குறியாக்க வேண்டுமானால் மதவாதத்தை உருவாக்க வேண்டும் என்று கருதிய பா.ஜ.க. அயோத்தி விவகாரத்தை பிரச்சினைப் பொருளாக எடுத்துக் கொண்டது. பாபர் மசூதியை இடித்தால் வழக்கு, வம்பு, பதவி துறப்பு, அவப்பெயர் எல்லாம் கிட்டும் என்பது உண்மையானாலும், வட இந்திய இந்தி வலயம் என அறியப்படும் உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம், பீஹார், மஹாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் வாழும் கோடிக் கணக்கான பாமர இந்துக்களின் மனதில் இடம்பிடிக்க முடியும் எனக் கருதிய பா.ஜ.க, அதையே ஆயுதமாக எடுத்துக் கொண்டது. அதுபோலவே, பாபர் மசூதி தகர்ப்பின் பின்னர் வட மாநிலங்களில் பா.ஜ.கவின் செல்வாக்கு அதிகரித்தது. சாதாரண இந்துக்கள் பாபர் மசூதி இடிப்பை ஒரு வீரதீரசெயலாகக் கண்டனர். பிரதமர் மோடியின் எழுச்சியின் பின்னாலும் இஸ்லாமிய வெறுப்பும், இனக் கலவரமும் உந்து சக்திகளாகக் காட்சி அளிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னைரேயே திட்டம் தீட்டியிருந்தது. அதன் பிரகாரம் 1992 ஜனவரி மூன்றாம் திகதி முதல் சிறிய ஊரான அயோத்தியில் வெளியில் இருந்து வந்த இந்துகள் ஒன்றுகூடத் தொடங்கினர். சில ஆயிரம் தாங்க முடியாத அந்த ஊரில் இலட்சக்கணக்கில் இந்து கரசேவர்கள் திரளத் தொடங்கியதும் ஊர் மக்கள் அச்சமடைந்தனர். ஏதோவொன்று நடக்கப்போகிறது என்பது அவர்களுக்கு புரிந்தாலும் அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் கல்யாண்சிங் அதைப் பொருட்படுத்தவில்லை. அப்போது மத்தியில் நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே நரசிம்மராவ் அறிந்து கொண்டிருந்தாலும் அலட்டிக் கொள்ளவில்லை.

பா.ஜ.க. அந்த நிகழ்வுக்கு வைத்த பெயர் கரசேவக். உள்ளே வரும் ஒவ்வொரு கரசேவகரும் கையில் இராமர் பெயர் பொறித்த ஒரு செங்கலை கொண்டுவந்து நட்டு வைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். பின்னர் மசூதிக்கு அருகே இராமர் கோவிலை அமைப்பதே தமது திட்டம் என அறிவித்திருந்தது. மசூதியை இடிக்கும் திட்டம் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

1992 டிசம்பர் 5ஆம் திகதியே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அயோத்தி வந்து விட்டனர். அசோக்சிங்கால், உமாபாரதி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பங்ரஜ்கள், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார், பா.ஜ.க, சிவசேனா உட்பட பல தீவிரவாத இந்து அமைப்புகளின் உயர் மட்டத் தலைவர்கள் முன்வரிசையில் அமர்ந்திருக்க இலட்சக்கணக்கான கரசேவர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். உத்தர பிரதேச பொலிசாரும் விசேட படைப் பிரிவும் காவலுக்கு இருந்தாலும் தம்மால் இந்த கொதித்துக் கிடக்கும் சனத்திறளைக் கட்டுப்படுத்தக் கூடும் என்பதில் சந்தேகம் கொண்டிருந்தனர்.

காலை 11 மணியளவில் நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தி பாபர் மசூதியை சுற்றியிருந்த தடுப்புச் சுவர் மீது ஏறித் தாண்டிக் குதித்தனர். கொஞ்ச நேரத்தில் தடுப்புச் சுவர் தகர்ந்து வீழ்ந்ததால் இப்போது பல நூற்றுக்கணக்கான – பத்தாயிரம் பேர்வரை இருக்கலாம் – கரசேவர்கள் கையில் செங்கலுடன் பாபர் மசூதியை நோக்கி ஓடினார்கள். அவர்கள் கைகளில் செங்கல் மட்டுமல்ல, கத்தி, கடப்பாறை சுத்தியல் என்பனவும் இருந்தன. சில நிமிடங்களில் மசூதியின் உச்சியில் ‘ஜெய்ராம்’ என்ற கோஷம் வானைப் பிளக்க பலர் ஏறி நின்று, கும்மட்டங்களை தகர்க்க ஆரம்பித்தனர். எங்கும் ஜெய்ராம் என்ற கோஷமும் ‘பட்சா பட்ச்சா ராம்க’ (அனைவரும் ராமனின் குழந்தைகள்) என்ற கோஷமும் வானைப் பிளக்க, மசூதி தகர்ப்பு முழு வீச்சில் அரங்கேறத் தொடங்கியது. கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்துகொண்ட காவலர்கள் விலகிக் கொண்டனர். மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் நடப்பதை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க, கரசேவர்களை ஊக்கப்படுத்தும் கோஷங்களை உமாபாரதி எழுப்பிக் கொண்டே இருந்தார். ‘உடைத்துத் தள்ளு, உந்தித் தள்ளு, இன்றும் ஒரே ஒரு தள்ளுதான் என கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். கரசேவர்களை அங்கே சென்று அமைதிப்படுத்துங்கள் என அத்வானி உமாபாரதியிடம் கேட்டுக்கொள்ள, முக்கால் மணித்தியாலயம் கடந்த பின்னர் திரும்பி வந்த அவர், எல்லாம் கைமீறிய போய்விட்டது என அத்வானியிடம் கைவிரித்தார்!

காலை 11 மணிக்கு ஆரம்பமான தகர்ப்பு, மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது. ஆர்.எஸ்.எஸ்.சின் பெருங்களவு நனவானது. இந்தியாவின் மதசார்பின்மை கோட்பாட்டுக்கு பா.ஜ.க வைத்த முதல் வேட்டு இது! அதன் இந்து ராஜ்ய கனவு நனவாவதற்கு வைக்கப்பட்ட மூலைக் கல்லாகவும் இதைக் கொள்ளலாம். இன்று பா.ஜ.க முன்வைக்கும் மும்முனைத் திட்டத்துக்கான அடிக்கல்லும் இதுவே, ஒரே நாடு (நாடெங்கும் பா.ஜ.க. ஆட்சி) ஒரே மொழி (சமஸ்கிருதம் அல்லது சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட இந்தி), ஒரே சமயம் (இந்து மதம்) என்பதை முன்நிறுத்தியே பா.ஜ.க இன்று சொல்பட்டு வருகிறது.

மசூதி தகர்க்கப்பட்டதும் உத்தர பிரதேச முதல்வர் கல்யாண் சிங்குக்கு அழைப்பெடுத்த அத்வானி, நடத்த விஷயத்துக்கு பொறுப்பேற்று பதவியை இராஜிநாமா செய்யச் சொன்னார். அவரும் ராஜிநாமா செய்ய, உத்தர பிரதேசத்தில் கவர்னர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இந்துக்களும் முஸ்லிம்களும் அருகருகே வாழும் பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டன. கலவர சூழல், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் பீஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் தலை தூக்கின.

இவை எல்லாம் நடந்து கொண்டிருக்க, கரசேவர்கள் காரியத்தில் கண்ணாக இருந்தனர். தகர்க்கப்பட்ட மசூதியின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. கொண்டு வந்த செங்கற்களைப் பயன்படுத்தி இரவிரவாக ராமர் கோவிலை அமைத்தனர். அங்கே தாம் கொண்டு வந்திருந்த சீதா தேவி, பலராமர், அனுமன் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். அது தற்காலிகக் கட்டடமானாலும் இராமர் கோவிலை நிர்மாணித்த திருப்தி அவர்களுக்கு.

சிறிய ஊரான அயோத்தியில் இலட்சக்கணக்கானோரை வைத்திருக்க முடியாது என்பதால் மத்திய அரசு அவர்களுக்காக இலவச ரயில்களை ஏற்பாடு செய்தது. அடுத்தடுத்து அயோத்தி வந்த ரயில்கள் கரசேவகர்களை ஏற்றிக் கொண்டு அவர்களின் சொந்த ஊர்களில் இறக்கி விட்டது. அவ்வளவும் இலவசம் என்பதால் இந்திய ரயில் திணைக்களத்துக்கு 300 கோடிக்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டதாம்!

பின்னர் தனது சுயசரிதை நூலில், அது ஒரு பொன்னான நாள் என்றும் நவீன இந்தியாவின் நியாயமான நாள் என்றும் மசூதி இடிப்பை வர்ணித்திருந்தார் எல்.கே. அத்வானி.

இவ்விவகாரம் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தபோது, மத்திய அரசு தன் உறுதிமொழியில் தவறிவிட்டது தொடர்பாக எதுவும் பேசாத அன்றைய பிரதமர் நரசிம்மராவ், நிகழ்ந்தவைக்கு வருத்தம் தெரிவித்ததோடு. மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும். புதிய பள்ளிவாசல் அமைத்துத் தரப்படும் என்று சூளுரைத்தார். அவ்வளவுதான். அதன் பின்னர் எதுவுமே நடைபெறவில்லை. இன்றுவரை பிரச்சினைக்குரிய பூமியாகவே அயோத்தி இருந்து வருகிறது. ஒருமுறை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட போதிலும், இராமர் கோவில் இருந்தமையை உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கலவரம் நிகழப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த மத்திய அரசு ஏன் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை? ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நரசிம்ம ராவ் அரசு பதில் சொல்லவில்லை

தற்போது 27 ஆண்டுகள் கழிந்து விட்டன. இக் காலப்பகுதியில் பா.ஜ.கவின் திட்டங்களே படிப்படியாக செயலாக்கம் பெற்று வருவதைப் பார்க்க முடிகிறது. பெரும்பான்மைப் பலத்துடன் பா.ஜ.க அதிகாரத்தில் வீற்றிருப்பதோடு தற்போதைய சூழலில் அக் கட்சியைத் எதிர்த்து தோல்வியுறச் செய்யும் நிலையில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் இல்லை என்பதே அவதானிகளின் பார்வையாக உள்ளது. உத்தர பிரதேசத்தின் முதல்வராக ஒரு இந்துத் துறவியை, யோகி ஆதித்தியநாத், கொண்டு வந்துவிட்டார்கள். மா நிலத்தில் இறைச்சி விற்பனையை அவர் தடை செய்து உத்தரவும் போட்டு விட்டார். மாட்டிறைச்சி வைத்திருந்தாலே போதும், அவர் கொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சம் வட மாநிலங்களில் உள்ளது. அகண்ட இந்து இந்தியாவைப் பற்றி பேசும் பா.ஜ.கவினர், கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அந்நியர்களாகவே கருதுகின்றனர்.

மத சார்பின்மைத் தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதைவிட மதவாதத்தையும், இனவாதத்தையும் எளிதில் அறிமுகம் செய்யலாம். அதைத்தான் பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது. இலங்கையிலும் தேர்தல் வெற்றிகளுக்கு இனவாதமே கண்கண்ட ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தென்னாட்டில், குறிப்பாகத் தமிழகத்தில், தன் கருத்துகளை விதைப்பதில் பெருமளவு எதிர்ப்பையும் தடைகளையும் எதிர்கொண்டிருப்பதால்தான் பா.ஜ.க அரசு தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகுவதாக திராவிடக் கட்சிகள் கருதுகின்றன.

அருள் சத்தியநாதன் 

Comments