மதூஷ், சகாக்கள் இன்று துபாய் நீதிமன்றத்தில் | தினகரன் வாரமஞ்சரி

மதூஷ், சகாக்கள் இன்று துபாய் நீதிமன்றத்தில்

சகாக்களின் வீடுகளிலும் அதிரடிச் சோதனை

துபாயில் கைதான போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியும் பாதாளக் குழுவின் பிரபல நபருமான மாக்கந்துர மதுஷ் என்கின்ற சமரசிங்க ஆரச்சிலாகே மதுஷ் லக்‌ஷித்த தனது சகாக்களுடன் இன்று (10) துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.  

ஐக்கிய அரபு இராச்சிய நாட்காட்டியின்படி வெள்ளி, சனிக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதாலும் இன்று மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.  

இதனையொட்டி துபாயின் மிகச் சிறந்த சட்டத்தரணிகள் குழாமொன்றை தமக்காக வாதிடுவதற்கு மதுஷ் ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணி சட்டத்தரணிகள் 15பேரை மதுஷ் அமர்த்தியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.  

மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட ஏனைய போதைப்பொருள் வர்த்தகர்களான கஞ்சிப்பானை இம்ரான், கெசல்வத்தை தினுக்க, அங்கொடை சூட்டி, பாடகர் அமல் பெரேரா, அவரது மகன் நதீமல் பெரேரா, தொலைக்காட்சி நடிகர் வேன் ரயன் உள்ளிட்டோரும் அடங்குகின்றனர். கைதுசெய்யப்பட்ட 30பேரில் பலர் இரத்தப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அதில் ஐவர்மீது நடத்தப்பட்ட

பரிசோதனையில் அவர்களின் இரத்தத்தில் போதைப்பொருள் கலந்திருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஆனால், மதுஷ் உள்ளிட்ட ஏனையவர்களின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளபோதிலும் பரிசோதனை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை எனத் தெரியவருகிறது. ஐக்கிய அரபு இராச்சிய சட்டத்தின்படி, ஒருவரின் இரத்தத்திலோ சிறுநீரிலோ போதைப்பொருள் கலந்திருக்குமாயின் அது போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கருதப்படும். இந்நிலையில், மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார்களா அல்லது துபாயில் தண்டிக்கப்படுவார்களா என்பதுபற்றி உறுதியாகத் தெரியவரவில்லை.  

எவ்வாறாயினும், போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டவர்களை நாடு கடத்துவது பற்றி இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்ைகயை மேற்கொண்டிருப்பதாக வெளிநாட்டமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மதுஷை கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியையும் அரசாங்கம் ஏற்கனவே கோரியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   இதேவேளை, பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் பயன்படுத்திய கார் நேற்று மாலை வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.  

இந்த ஹோட்டல் உரிமையாளர், மதுஷுடன் சேர்த்து கைது செய்யப்பட்டஅமில பிரசங்க ஹெட்டிஹேவா எனப்படும் சுரன்பி சுத்தா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  

பிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் வெளிநாடு செல்வதற்கு முன்னர், சில தினங்கள் இந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளதுடன், இருவரும் சேர்ந்து வெளிநாடு சென்றுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  

வெலிகம பொலிஸாரால் சுரன்பி சுத்தாவின் மூத்த சகோதரரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது இந்தக் கார் நடிகர் ரயன் வேன் ரோவன் வந்திருந்த கார் என்று தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.  

காரை சோதனை செய்த போது காரில் இருந்து 5750மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.  

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்  

அநேநேரம், மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடையதெனக் கருதப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

பாதுக்கை, போரகெதர பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி நேற்றுக் காலை கார் மீட்கப்பட்டுள்ளது.  

அந்தக் காரை சோதனை செய்த போது எவ்வித அனுமதிப் பத்திரங்களும் இல்லை என்பதுடன், அனுமதிப் பத்திரங்கள் இல்லாத காரணத்தால் காரை மறைத்து வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கார் ஏதாவது குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Comments