முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அடிப்படைவாத குழு கொலை மிரட்டல் | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அடிப்படைவாத குழு கொலை மிரட்டல்

முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த பாதுகாப்பு அமைச்சு துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சு இதனை மேற்கொண்டுள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்கள் கபீர் ஹாஷிம், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர்

தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறையிட்டதையடுத்தே ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளருடன் தொடர்பு கொண்டு உடனடி பாதுகாப்புக்குப் பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படைவாதக் குழுவொன்றிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்கள் கபீர் ஹாஷிம், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் தாங்கள் எதிர்கொண்டிருக்கும் உயிரச்சுறுத்தல் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் தெளிவுபடுத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் கபீர்ஹாஷிமின் இணைப்புச் செயலாளரான முஹம்மத் தஸ்லீம் அண்மையில் இனம் தெரியாத ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்தார். மாவனல்லை நகரில் புத்தர் சிலை உடைப்பு விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்குப் பாதுகாப்புத் தரப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியதாலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த முறைப்பாடு தொடர்பில் உடனடியாக கூரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளருக்கு பணிப்புரை விடுத்த நிலையில், முஸ்லிம் அமைச்சர்களை வார இறுதியில் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பையடுத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments