இனவாதம், மதவாதம், மொழிவாதம் தலைதூக்க இடமளிக்க போவதில்லை | தினகரன் வாரமஞ்சரி

இனவாதம், மதவாதம், மொழிவாதம் தலைதூக்க இடமளிக்க போவதில்லை

நாட்டில் இனவாதத்தை தூண்டவோ, அமைதியைச் சீர்குலைக்கவோ எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு காணித்துண்டுக்கான உரிமை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஜனநாயக உரிமைகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தது போன்று அரசாங்கம் இன, மத மொழி, பேதம்கடந்து அனைத்து மக்களதும் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார். காணியற்றவர்களுக்குக் காணித்துண்டொன்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வைபவம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். நேற்றைய வைபவத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7,206 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பாரிய திட்டங்களில் ஒன்றான காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

நாங்கள் மக்களுக்கு ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். ஒக்டோபர் மாதம் அதனைப் பாதுகாத்தோம். தற்போது வடக்கு, கிழக்கு, மலையகம் என சகல மாகாணங்களிலும் காணி இல்லாதவர்களுக்குக் காணிக்கான உரித்து வழங்கப்படும். இதனை வைத்து வியாபாரம் செய்வதற்கான சுயதொழில் முயற்சிக்கு இலகு கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். 

சகல மாணவர்களின் கல்வி அறிவு விருத்திக்காக 13 வருடங்கள் கல்வியைக் கட்டாயப்படுத்தியுள்ளோம். இதற்காக பயிற்றப்பட்ட ஆசிரியர்களை வழங்கவுள்ளோம். பாடசாலைகளில உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு மடிக் கணனிகளை வழங்கவுள்ளோம். 

டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறையை கொண்டுவரப்போகிறோம். இதன் மூலம் பொருளாதாரம் டிஜிட்டல் மயமாகும். இதன் மூலம் நிதிகளைப் பரிமாற்றம் செய்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். காணி உரிமைப் பத்திரங்களையும் முழுமையாக கணினி மயப்படுத்தவுள்ளோம். கணினி மயப்படுத்தலை கிராம ரீதியாக அமுல்படுத்தும் செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளளோம்.  

இந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மக்களுக்கு உரிமையைக் கொண்டுவந்துள்ளது இதனைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வெளிநாட்டு தூதுவர்கள் வட மாகாணத்திற்கு மாத்திரம் செல்கிறார்கள் எனப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கூறியிருந்தார். அவர்களை விட அபிவிருத்தி செய்வதற்காக நான் கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறேன். 

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி சம்பந்தமாக எதிர்வரும் காலங்களில் கூட்டங்களை நடத்தி கிழக்கு மாகாணத்தை முழுமையாக கட்டியெழுப்புவதற்கு திட்டம் வகுத்துள்ளேன். 

இன்று ஒவ்வொரு வீட்டிலும் கையடக்க தொலைபேசி பயன்படுத்தப்படுகின்றது. சரியான தகவல்களை பொதுமக்கள் பெறுகின்றார்கள். 

தகவல்கள் விரிவடைந்து தங்களின் நோக்கம் நிறைவேறுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் சகல பணிகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நாடுகள் முன்னேற்றமடைந்த நாடுகளாக மிளிர்கின்றன. தலைநகர் கொழும்பில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பில் உள்ள பெண்கள் கடைக்குப் போவதில்லை. வீட்டிலே இருந்து கொண்டு தங்களின் தேவைகளையும், பொருளாதார விடயங்களையும் எங்களுடைய மக்கள் இலகுவில் நிறைவேற்றிக்ெகாள்கிறார்கள். இதனால், பொருளாதாரம் விருத்தியடைகின்றது. கொழும்பு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு பொருளாதார கேந்திரமிக்க பகுதியாக திகழ்கின்றது. 

மட்டக்களப்பிலும், கல்முனையிலும் டிஜிட்டல் மயப்படுத்தி கடனட்டை பெறுகின்ற இயந்திரங்களைப் பொருத்தியுள்ளோம். இதேபோன்று கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் டிஜிட்டல் தொழிநுட்ப உரிமையை உங்களுக்கு பெற்றுத்தரவுள்ளோம். 

எந்தவொரு மதத்தையும், கலாசாரத்தையும் மதிக்கின்ற உரிமையைப் பெற்றுத் தந்துள்ளோம். யுத்தத்தினால் கூடுதலான அழிவுகளை வடக்கு சந்தித்துள்ளது. வடக்கை கட்டியெழுப்புவதுபோல் கிழக்கையும் கட்டியெழுப்புவேன். 

ஜனநாயகத்தைப் பாதுகாத்து சிறப்பானதொரு நாட்டை உருவாக்குவதே எமது இலட்சியமாகும். இனிமேல் இனவாதமோ, மதவாதமோ மொழி வாதமோ தலைதூக்கு இடமளிக்க போவதில்லை. இந்த விடயத்தில் நாம் ஜெயிக்க வேண்டுமானால் நாமனைவரும் ஒன்றுபட வேண்டும், குறுகிய நோக்கங்களை உள்ளத்திலிருந்து கிள்ளியெறிய வேண்டும். 

பாதுகாக்கப்பட்ட ஜனநாயக சுதந்திரத்தை இனிமேல் எவருக்கும் அடகுவைக்க நாம் தயாராக இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹிர் மௌலானா, எம்.எஸ்.எஸ்.அமீரலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காணி மறு சீரமைப்பு பிரதியமைச்சர் எட்வர்ட் குணசேகர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்த்தன, கிழக்கு மாகாண காணி ஆணையாளர், திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் - கே.விஜயரத்தினம்)

Comments