கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் ஒருமைப்பாட்டுக்கு சவால் | தினகரன் வாரமஞ்சரி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் ஒருமைப்பாட்டுக்கு சவால்

கல்முனை, வடக்கு உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதுதான் கல்முனை மாநகரசபையாக இருக்கின்றது. இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகியவற்றில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.  

இந்நிலையில், சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்கள், தமது பிரதேச செயலக பிரதேசத்தை, கல்முனை மாநகரசபைக்கு முற்றிலும் வெளியே பிரித்தெடுத்து முழுமையான நகரசபையாக்க கோரி போராடுகிறார்கள். இந்நிலையில், கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி போராடுகிறார்கள். ஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள்,தனி நகர சபைக்காக போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் எனப் போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தர்க்கரீதியாக எடுத்து கூற வேண்டும்.  

இந்தப் பிரச்சினையினால் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

 நேற்றுக் காலை நாடு திரும்பிய அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கூறியதாவது,

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் தரப்பினர் என்னை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இதையடுத்து இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும் தேசிய ஒருமைப்பாட்டு துறைசார் அமைச்சர் என்ற முறையில் கலந்தாலோசித்துள்ளேன். இது தொடர்பில் அமைச்சர் வஜிரவுடன் நேற்று உரையாடினேன். இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும் எனவும், புத்தாண்டு விடுமுறையை அடுத்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தீர்மானத்துள்ளோம்.  

இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில் இவை நடைமுறையில் இருக்கின்றன. எனவே, கல்முனை வடக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மாத்திரம், இதில் தவறு காண்பது முறையல்ல. அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தையே முழு பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படியே கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே, கல்முனை உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என்ற கோரிக்கையில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கு இதுவரையில் தர்க்கரீதியாக எடுத்து கூற தவறியுள்ளார்கள் என நான் நினைக்கிறன். 

உண்மையிலேயே கடந்த பல பத்தாண்டு காலங்களாக எரிந்து வரும் இந்த பிரச்சினை தொடர்பில், நடந்து முடிந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தின் போது, கிழக்கு மாகாணத்தில் கூட்டாக ஆட்சி நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாட்சி நிர்வாகம் தலையிட்டு சுமுகமான ஒரு தீர்வை கண்டிருக்க வேண்டும்.

அது நடைபெறவில்லை என்பது துரதிஷ்டவசமானதாகும்என்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறினார்.

Comments