திராவிட சமூகத்தின் செழுமையை எடுத்துரைக்கும் கீழடி அகழாய்வுகள் | தினகரன் வாரமஞ்சரி

திராவிட சமூகத்தின் செழுமையை எடுத்துரைக்கும் கீழடி அகழாய்வுகள்

ஆரியர் – திராவிடர் இடையிலான மோதல், பிணக்கு, முரண்பாடு, நீயா – நானா போட்டி மனப்பான்மை என்பன இன்று நேற்றல்ல, மிக மிக நீண்ட காலமாகவே கயிறிழுப்பு போல தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. ‘எல்லோரும் கப்பம் கட்டுகிறார்கள் ஒருவனைத்தவிர’ என்பதுபோல ஒரு வசனம் வரும் வீரபாண்டியன் கட்டமொம்மன் திரைப்படத்தில். அடங்க மறுத்த கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் கைது செய்து தூக்கிலிட்டு விடுவார்கள். இது சரித்திரம். இந்தியாவின் வட புலத்துக்கு கைபர் கணவாய் வழியாக உள்ளே நுழைந்தவர்களே ஆரியர்கள் என்றும் அக் காலப்பகுதியில் இந்தியா வெங்கும் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள் திராவிடர்களே என்பதும் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மானிடவியல் மற்றும் தொல்லியல் நிபுணர்களின் கருத்தாகும். இன்று பாகிஸ்தானில் அமைந்திருக்கும் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட தொல் எச்சங்கள் ஆதித் திராவிடர் நாகரிக மென்றும் அதையொத்த நாகரிகம் மஹாராஷ்டிராவிலும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதையும் இணைத்துப் பார்க்கும் தொல்லியலாளர்கள், திராவிட நாகரிகம் இந்தியாவெங்கும் ஒரு சமயத்தில் பரந்து வியாபித்திருக்கிறது என்பதற்கான சான்றாக இதைக் கொள்ளலாம் என்கிறார்கள்.  

தற்போது மதுரையில் இருந்து தென்கிழக்கே இருபது கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை  மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தின் தென்னந் தோப்பில் நடைபெற்றுவரும் அகழ்வாய்வு, மொஹஞ்சதாரோ, ஹரப்பா பிராந்தியத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இரண்டாயிரத்து 500 வருடங்களுக்கும் முற்பட்ட நாகரிகத்துடன் தொடர்பு பட்டதாக இருக்கிறது என்பதை நிரூபித்திருப்பதாகவும் தமிழக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.  

வட இந்தியர்களின் கங்கைக் கரைநகர நாகரிகம் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், இந்தியாவின் தொன்மையான மற்றும் வளர்ச்சியடைந்த நகர நாகரிகமே கங்கை நாகரிகம் என்ற கூற்றுக்கு, தொன்மை பற்றிப் பேசும் தமிழர்களினால் தக்க பதிலடியை ஆதாரத்துடன் முன்வைக்க முடியாத நிலை இருந்து வந்திருக்கிறது. அடுத்ததாக சங்க காலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மதுரையை மையமாகக் கொண்ட முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எழுந்து நின்றதாகவும் இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டுவரை இச் சங்க காலம் நீடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இக் காலப்பகுதியில்தான் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பல சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியம், காதல், குடும்பம், போர், களிப்பு எனச் செழுமையான வாழ்க்கையை தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று தமிழ் அறிஞர்கள் சொல்லி வந்தாலும், ‘இவர்கள் அனைவரும் வாய்ச் சொல் வீரர்கள் மட்டும்தான்’ என்று திருப்பிப் போட்டுத் தாக்கினார்கள் வட இந்திய வரலாற்று ஆய்வாளர்கள். ஏனெனில் பேசுவதற்கும் மேற்கொள் காட்டுவதற்கும் அவர்களிடம் ஒரு கங்கை நகர நாகரிம் இருந்தது. தமிழர்கள் தாம் கைவசம் வைத்திருந்த சங்க இலக்கியங்களுக்கான நிலத்தடி அதாவது தொல்லியல் ஆதாரங்கள் இல்லாததால் தமது தொன்மையை நிரூபிக்க முடியாதிருந்தது. அதாவது தமிழர்கள் தாம் நகர நாகரிகத்தில் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்தது.  

வட இந்தியர்களிடம் செழுமையான காப்பியங்கள் உள்ளன. மகாபாரதம், கம்பராமாயணம், பாகவதம், பகவத்கீதை, விஷ்ணு புராணம் எனப் பட்டியலிடலாம். அதில் வரும் பாத்திரங்கள் காதலிலும், வீரத்திலும், அறத்திலும் தலை சிறந்தவர்களாக விளங்குகின்றன. அவர்கள் கடவுள் தொடர்புடையவர்களாகவும், மனிதரிடையே கடவுள்களே துஷ்டர்களை வதைக்கு முகமாக பிறப்பு எடுப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். அழகும், வீரியமும், யுத்தத் திறனும் கொண்ட ஆரியர்கள் தேவலோக மகளிரைத் திருமணமும் செய்கிறார்கள். அவர்கள் போற்றும் ரிஷிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் கரிய நிற அரக்கர்களை துவம்சம் செய்கிறார்கள் இந்த வலிமை பொருந்திய ஆரியர்கள். அவர்கள் நிர்மூலம் செய்யும் கரிய அரக்கர்கள் திராவிடர்களே தவிர வேறு எவருமில்லை என்பது திராவிட சிந்தனையாளர்களின் கருத்து. இராமாயணத்தில் சித்தரிக்கப்படும் இராவணனும், அரக்கர்களும், குரங்குகளும் கரடிகளும் திராவிடர்களுக்கான குறியீடுகளே என்பது திராவிட அறிஞர்களின் முடிவாகும். அதாவது இந்தியா வெங்கும் பூர்விகக் குடிகளாகப் பரவி வாழ்ந்த மண்ணின் மைந்தர்களான திராவிடர்களை மொஹஞ்சதாரோவில் இருந்து படிப்படியாக தென் திசை நோக்கி விரட்டியடித்து அவர்களை தென் இந்தியாவில் குடியேறச் செய்தார்கள். அவர்களை ஒடுக்கி வைத்தார்கள்.  

இங்கிருந்துதான் ஆரிய – திராவிட மோதல் ஆரம்பமானது. அதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார் ஈ.வே.ரா. ஒரு படி மேலேபோய், இந்து மதம் திராவிட மதம் அல்ல. அது ஆரியர்களின் மதம். தமிழர்களை ஒடுக்கி வைப்பதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் மதம். அவர்கள் நெருப்பை முக்கிய நிகழ்வுகளில் சுத்திகரிக்கும் பொருளாக உபயோகிப்பவர்கள். தமிழர்கள் நெருப்பை எப்போதும் அழிவின் அறிகுறியாகப் பார்ப்பவர்கள். திராவிடர்கள் நெருப்புக்குப் பதிலாகத் தண்ணீரை புனிதப் பொருளாகப் பயன்படுத்துபவர்கள். இவ்வாறு அம் மதமே தமிழர்களை அடிமைப்படுத்தும் ஒன்றாகவும், தமிழர்களுக்கு எதிரானதாக அவர்கள் இயற்றிய காப்பியங்களும் நூல்களும் இருப்பதாலும் தமிழர்கள் முதல் வேலையாக இத்தளைகளில் இருந்து விடுபட வேண்டியது அவசியம். தமிழர்களுக்கென செழுமையான வரலாறும், இலக்கியமும், தொன்மையும் தனிச் சிறப்புடன் இருக்கையில் ஆரிய சிந்தனைகளும் ஆரிய மதமும் தமிழனுக்குத் தேவையில்லை என்றார் பெரியார்.  

அவரது முதல் சீடரான அறிஞர் அண்ணாதுரை பெரியாரின் சிந்தனைகளுக்கு உயிர் கொடுத்தார். கூத்துகளாக, நாடகங்களாக, பாடல், வசனங்களாக மற்றும் சினமாக்களாக திராவிட சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றவர் அண்ணாதுரை. தமிழை சீர்த்திருத்தி எளிமையான, வடமொழி கலப்பற்ற மொழியாக மாற்றியதில், எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்ததில் திராவிட சிந்தனையாளர்களுக்கு பெரும் பங்குண்டு.  

திராவிட சிந்தனையாளராக அறியப்படும் அரசியல்வாதியான கரு. பழனியப்பன் இதை அழகாகவும் எளிமையாகவும் சொல்வார்.  

வட நாட்டவர்களுடன் நாம் பழகலாம் நட்பு பாராட்டலாம், ஒன்றாக பணியாற்றவும் செய்யலாம். ஆனால், அடிப்படையில் அவர்கள் வேறு நாம் வேறு என்பதை உணர்ந்து வைத்திருக்க வேண்டும். நாம் இந்து தெய்வங்களை வணங்கி வைஷ்ணவ ஜனதோவை பாட வேண்டியதில்லை. திராவிடக் கடவுளர்கள் உள்ளனர். முருகன் தமிழர்களின் ஆதிக் கடவுள். சிவன், பார்வதியுடன் முருகன் தொடர்பு படுத்தப்பட்டது பிற்காலத்தில். நாட்டார் தெய்வங்கள், சிறு தெய்வ வழிபாடுகள் தமிழருக்கு சொந்தமானவை.

திருப்புகழ், திவ்யபிரபந்தம், திருக்குறள், நன்னெறி என தமிழருக்கென தனி பக்தி மற்றும் நீதி நூல்கள் உள்ளன. தத்துவ விசாரணை உண்டு. சங்க இலக்கியங்கள் அரக்கர்களை அழிக்கும் பெரும் போர்களைப் பற்றிப் பேசுவதில்லை. தமிழர் வாழ்வியலை அது சொல்கிறது. அழகியலை பேசுகிறது என்பதன் மூலம் கரு. பழனியப்பன் தமிழ்ச் சமூகம் தனித்து இயங்கும் வல்லமையை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை விளக்குவார்.  

இந்தத் திராவிட சிந்தனைக்கு வலுசேர்த்திருக்கிறது. கீழடி ஆய்வுகள் வழியாக வெளிப்பட்டிருக்கும் உண்மைகள். திராவிடர்களுக்கு ஒரு நகர் நாகரிகம் இருந்துள்ளது என்பதை மட்டுமன்றி கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே இங்கு வாழ்ந்த திராவிடர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களும் கிட்டியுள்ளன.

கல்வெட்டுகள் மூலம் அரச உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது அன்றைய வழமை. அந்த ஆணைகளை மொழியறிவு கொண்டவர்கள் மூலமாக எழுதுவித்தார்கள். எழுத்தறிவு அக் காலத்தில் அரசர், பண்டிதர், பிராமணர், பிரபுக்கள் மத்தியிலேயே காணப்பட்டதுடன் சாதாரண குடிமக்களுக்கு வெள்ளையர் வருகை வரை கல்வியறிவு எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. ஆனால் கீழடியில் கிடைத்த மட்பாண்டங்களில் தமிழ் பிராமி எழுத்துகள் வரையப்பட்டிருப்பதைக் காண முடியும். இது, சாதாரண குடிமகனாக குயவர்களும் தமிழறிவு, எழுத்தறிவு கொண்டவர்களாக விளங்கினார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் தமிழின் எழுத்துரு காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்ற போதிலும் அதன். ஒலி வடிவம் பெருமளவுக்கு மாற்றம் அடையவில்லை என்பதையும் கீழடி ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இன்றளவும் தமிழர் மத்தியில் பயன்பாட்டில் உள்ள மாடத்தி என்ற பெயர்ச் சொல் கீழடியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. வள்ளுவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல தமிழ்ப் பதங்கள் இன்றைக்கும் பாவனையில் உள்ளன. தொல்காப்பியத்தில் பயன்பாட்டில் இருந்த பல சொற்கள் இன்றைக்கும் அதே ஒலி வடிவத்துடன் பாவனையில் உள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.  

கீழடியில் முதல் கட்ட ஆய்வுகளை இந்தியத் தொல்லியல் துறையே 2014ம் ஆண்டில் ஆரம்பித்தது. அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற தொல்லியலாளரின் தலைமையில் இரண்டு கட்ட ஆய்வுகள் நடைபெற்றன. இரண்டு முதல் மூன்று மீற்றர் அளவில் நிலத்தடியில் மட்பாண்ட பொருட்கள், கல்மணி என்பன கிடைத்தன. பரிசோதனை கூட ஆய்வின் பின்னர் கி.மு. 290 ஆண்டுகள் பழையமையானவையே இவை என்பது நிரூபணமானது. மூன்றாவது கட்ட ஆய்வுகளில் கட்டுமானங்கள் தொடர்பான சான்றுகள் கிடைக்காததால் இந்தி தொல்லியல்துறை கீழடி ஆய்வுகளை முடிவுக்குக் கொண்டுவரத்தீர்மானித்தது.  

இலங்கையில் தொல்லியில் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியும். இந் நாட்டில் பண்டைய மனிதர்கள் எவ்வாறான நாகரிகம் கொண்டவர்களாக வாழ்ந்தார்கள் என்பதையும், பௌத்தத்துக்கு முன்னரான இலங்கை வாழ் மக்கள்,

அதாவது, இயக்கர், நாகர் எழுவர் போன்றோர் யார் என்பதையும் இலங்கை தொல்லியல்துறை கண்டறிவதற்கு முற்படுவதில்லை. இலங்கையின் பௌத்த சிங்கள பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே அது தன் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இனவாத, மதவாத ரீதியாகச் செயல்படும் ஒரு துறையாக அது பெயர் பெற்றிருக்கிறது. இந்தியாவிலும் இதே நிலையே காணப்படுவதாக நம்புவதற்கு இடமிருக்கிறது. இலங்கை தொல்லியல் துறை எப்படி பௌத்த, சிங்கள காலத்தைத் தாண்டி ஆய்வுகளை மேற்கொள்வதில்லையோ அதேபோல ஆரிய – இந்து காலாசாரத்தைத் தாண்டி செயல்படுவதற்கு மத்திய அரசு இந்தியத் தொல்லியல்துறைக்கு இடமளிப்பதில்லை. கீழடியில் அதுதான் நடந்தது. தமிழரின் பண்டைய வாழ்வியலை கீழடி வெளிப்படுத்தும்; அந்த வெளிப்பாடுகள் இதுவரை நம்பப்பட்டு வரும் இந்திய பண்டைய வாழ்வியல் கண்டுபிடிப்புகளை புரட்டிப் போடும் என்பதை உணர்ந்து கொண்டதால் கீழடி ஆய்வுகளை இந்தியத் தொல்லியல் துறை நிறுத்திக் கொண்டது. என்றே தமிழகத்தில் பரவலாக நம்பப்படுகிறது.  

(தொடரும்)   

அருள் சத்தியநாதன்  

Comments