பொதுத் தேர்தலில் எமக்கு அறுதிப் பெரும்பான்மை | தினகரன் வாரமஞ்சரி

பொதுத் தேர்தலில் எமக்கு அறுதிப் பெரும்பான்மை

19வது அரசியலமைப்புத் திருத்தத்தினால் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்கின்றார் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே. முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் இந்த திருத்தத்தினால் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதை ஏற்றுக் கொண்டிருப்பதாக அவர் சொல்கின்றார். அவர் தினகரனுக்கு வழங்கிய செவ்வி....

கேள்வி: நகர திட்டமிடல் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பில் உங்களது அரசாங்க காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அவ்வேலைத்திட்டங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்தில் உரிய முறையில் இடம்பெறவில்லை எனச் சிலர் கூறுகின்றனர். தற்போது நகர அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை விபரிக்க முடியுமா? 

பதில்: சில தினங்களுக்கு முன்னர் எமக்கும் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாத வேலைகள் தொடர்பில் தற்போது நாம் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். துரிதமாக அப்பணிகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கின்றோம். உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். நகர அபிவிருத்தி அமைச்சு என்பது மிகவும் விரிவானதொரு அமைச்சாகும். நகர திட்டமிடல் இருந்தாலும் சில குறைபாடுகள் இருக்கின்றன.  

திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் குறைபாடுகளைச் சரி செய்து கொள்வதற்கு நாம் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றோம். கடந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவவராகவும், பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்து குப்பை கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கினார். அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததால் குப்பை மேடு சரிந்து வீழ்ந்தது. மக்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படாதவாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அன்று நிறுத்தப்பட்ட அவ்வேலைத்திட்டங்களை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். 

கேள்வி: புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் 15வீதமாக இருந்த வரி 9வீதமாகக் குறைக்கப்பட்டது மக்களுக்கு சாதகமானதாக இருந்த போதிலும் நீண்டகாலத்திற்கு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் கூறுகின்றனரே? 

பதில்: வற் வரியினைக் குறைத்த போது மற்றொரு விடயத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. ஒரு நாளைக்கு எட்டு இலட்சத்திற்கு குறைந்த வருமானம் பெறும் நிறுவனம் வற் வரி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் முன்னரிருந்த வகையில் 17வீத இலாபத்தைப் பெறுவார்கள். 100ரூபாய்க்கான பொருளுக்கு 17வீத வற் வரி செல்லும். தற்போது அவர்களுக்கு அந்த 17வீதம் மீதமாகும். அவர்களுக்கு பொருள் ஒன்றுக்கு 17ரூபாய் இலாபம் உள்ளது.  

கேள்வி: நீங்கள் அவ்வாறு கூறினாலும் உங்களது அரசாங்கம் வரி நிவாரணங்களை வழங்கியது கடந்த அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களை நீக்கியேயாகும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனரே? 

பதில்: அவ்வாறு நீக்கிய ஒன்றைக் கூறுமாறு நான் அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். நாம் அவ்வாறு எதனையும் நீக்கவில்லை. அவர்கள் அவ்வாறு மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் என்ன என்றே நாம் கேட்கின்றோம். இன்று மக்களுக்கு எந்தளவுக்கு நிவாரணங்கள் கிடைத்துள்ளது என்று பாருங்கள்? ஒவ்வொருத்தருக்கு தேவையான வகையில் பேச முடியும். வரிகளைக் குறைத்து விற்பனையினை அதிகரிப்பதே எமது தேவை. 

கேள்வி: இந்நாட்டின் கடன் வட்டித் தவணை 2020ம் வருடத்தில் ஒரு இலட்சம் கோடி என சிலர் கூறுகின்றனர். இத்தொகையினைச் செலுத்துவதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்கள் உள்ளன? 

பதில்: இந்நாட்டில் சமாதானம் ஏற்படும் போது, தேசிய பாதுகாப்பு ஏற்படும் போது, ஆட்சிப் பொறிமுறை பலப்படும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். முதலீட்டாளர்கள் வருவார்கள். அவற்றின் மூலம் நாட்டிற்கு வருமானம் கிடைக்கும். 

19வது அரசியலமைப்புத் திருத்தத்தினால் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அது மாத்திரமல்ல, முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் இந்த திருத்ததினால் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றை அன்று கூறியது நாமல்ல. மூன்று அதிகார சக்திகள் அதனால் உருவானது. சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமர் என மூன்று அதிகார சக்திகள் உருவானது.  

இவ்வாறு நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். 

கேள்வி: மீண்டும் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கே இந்த 19வது அரசியமைப்புத் திருத்தத்தை நீக்கிவிட்டு மீண்டும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யப்படுவதாக சிலர் கூறுகின்றனரே? 

பதில்: இது சரியாக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியின் வாயினுள் கைத்துப்பாக்கியைப் போட்டதைப் போன்ற கதையாகும். அவ்வாறான கதைகள் போதியளவில் கூறப்படுகின்றன. அவ்வாறான சர்வாதிகார ஆட்சியா இப்போது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பது மிகத் தெளிவானது. ஜனநாயகத்தை மதிக்கும், மக்களுக்குச் சாதகமான ஆட்சியொன்று நாட்டினுள் ஏற்பட்டிருக்கின்றது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.  

கேள்வி: இன்னும் நான்கு மாதத்தினுள் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. அதற்கு ஆயத்தமா? 

பதில்: நாம் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காகச் செயற்படுகின்றோம். தேர்தலின் போது அனைத்திற்கும் பதில் கிடைக்கும். 

கேள்வி: கடந்த காலங்களில் தொடர்ந்தும் பேசப்பட்ட மத்திய வங்கி பிணை முறி சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அச்சம்பவத்துடன் தொடர்புடைய அர்ஜூன் மஹேந்திரனைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சிலர் கூறுகின்றனரே? 

பதில்: நாம் புதிதாக எப்.சீ.ஐ.டி நியமிக்கப் போவதில்லை. எனினும் நாட்டில் உள்ள பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மற்றும் சீ.ஐ.டி என்பவற்றைப் பயன்படுத்தி எமக்குக் கிடைக்கும் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்வோம். இதற்கான எளிய உதாரணம் சுவிஸ் தூதரப் பிரச்சினை. எமது நாட்டின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு விசா வழங்கப்பட்டு முழு குடும்பத்துடன் சுவிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு சென்ற பின்னர் பெரும் குற்றச்சாட்டு நாட்டுக்கு ஏற்படும் வகையில் நாடகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நாடகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இதில் தலையிட்டு ஏனைய தூதரங்களுக்கு தெளிவு படுத்தியது நல்லது. இல்லாவிட்டால் உலகில் எந்த நாட்டில் சம்பவம் ஒன்று இடம்பெற்று முறைப்பாட்டாளர் வாக்குமூலம் வழங்காமல் இருந்தார்? சுகயீனத்தினால் முறைப்பாடு செய்யாமல் வைத்தியசாலையில் அனுமதிக்காமல் இருந்தார்? இன்று வரையிலும் முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை. வைத்தியர்கள் பொலிஸில் ஆஜராகவில்லை. தினம் தினம் இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.  

கேள்வி: இந்த அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கூற முடியுமா? 

பதில்: நாம் இப்போது முன்னெடுத்துச் செல்வது இடைக்கால அரசாங்கமாகும். இதனுள் நாம் சிந்தித்தோம். இதனடிப்படையில் அமைச்சுக்களின் எண்ணிக்கையினை பதினைந்தாகக் குறைத்தோம். நாட்டை ஆட்சி செய்வதற்குத் தேவையான, நாடு செயற்படுவதற்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நாம் நடைமுறைப்படுத்துவோம்.

சுபத்ரா தேசப்பிரிய
தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)

Comments