ரஞ்சித் டி சொய்ஸாவின் இறுதிக்கிரியை இன்று | தினகரன் வாரமஞ்சரி

ரஞ்சித் டி சொய்ஸாவின் இறுதிக்கிரியை இன்று

காலஞ்சென்ற இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரி.ரஞ்சித் டி சொய்ஸாவின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் கடந்த 4ஆம் திகதி புதன்கிழமை காலையில் ரஞ்சித் சொய்ஸா காலமானார். அன்றிரவே அவரது உடல் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது.

கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடும் சகயீனமுற்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலையிட்டு கடந்த மாதம் 28ஆம் திகதி காலை  மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் 4ஆம் திகதி காலமானார்.

57வயதான ரஞ்சித் டி சொய்யா இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் அன்னாரது மனைவி இரத்தினபுரி மாவட்டத்தின் சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டுவருபவராவார்.

கொடகவல பிரதேசத்தின் நிலச்சுவாந்தாரான ரஞ்சித் சொய்ஸா 1997இல் அரசியல் பிரவேசம் செய்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியூடாக அட்டகலம்பன்ன பிரதேசபைத் தேர்தலில் வெற்றியீட்டி அச்சபையின் தலைவரானார். 2002இல் அந்தச் சபையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார்.

2004இல் சப்பிரகமுவ மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். அந்த மாகாணசபையில் இளைஞர் விவகார தேசிய வைத்திய, மகளிர் விவகார அமைச்சராக பதவி வகித்தார்.

2010பாராளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரிமாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி முதற்தடவையாக பாராளுமன்றத்தில் பிரவேசித்தார். மீண்டும் 2015தேர்தலும் போட்டியிட்டு வெற்றியீட்டினார். அவர் சுகயீனமுற்றிருந்த நிலையிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பெரும் பங்களிப்பு செய்தார்.

அன்னாரது உடலுக்கு இரத்தினபுரி உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இன்று மாலை அவரது ஊரான கொடகவலை பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை நடைபெறவுள்ளது.

Comments