2019 ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயார்; 24ஆம் திகதி வர்த்தமானியில் வெளியீடு | தினகரன் வாரமஞ்சரி

2019 ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயார்; 24ஆம் திகதி வர்த்தமானியில் வெளியீடு

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்புப் பணிகள் முடிவடைந்திருப்பதாகத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 24ஆம் திகதியன்று புதிய வாக்காளர் இடாப்புக்கான அறிக்கையில் கைச்சாத்திட்டு உத்தியோக பூர்வமாக வர்த்தமானிமூலம் பிரகடனப்படுத்தப்படுமெனத் தெரிவித்தார். கடந்த வாரம் வாக்காளர் இடாப்புப்பணிகள் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் 2019க்கான வாக்காளர் இடாப்பில் பதிவதற்குரிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் பதியப்பட்டவர்களுக்கு ஓர் இடத்தை மட்டும் தெரிவு செய்வதற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக்கால அவகாசம் ஜனவரி 3ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.  

இக்காலப் பகுதியில் இடத்தை உறுதிப்படுத்தத் தவறியவர்களின் விண்ணப்பம் தொடர்பில் தேர்தல்கள் செயலகம் தீர்மானிக்க ஓர் இடத்தில் பதிவு செய்யப்படும் இப்பணிகள் எதிர்வரும் 10ஆம் திகதியன்று முடிவுக்குவரும். 

அதனையடுத்து பூரணப்படுத்தப்பட்ட 2019க்கான வாக்காளர் இடாப்பில் 24ஆம் திகதி கைச்சாத்திடப்படும் எனத் தெரிவித்த ஆணைக்குழுத்தலைவர், இதற்கமைய 2020ஆம் ஆண்டில் இடம்பெறவிருக்கும் சகல தேர்தல்களின் போதும் புதிய வாக்காளர் இடாப்புக்கமையவே தேர்தல்கள் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார். 

2018ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் பதிவான வாக்காளர் எண்ணிக்கையைவிட சுமார் இரண்டு இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்வாங்கப்படுவதாகவும் இதன் பிரகாரம் புதிய வாக்காளர் இடாப்பில் இளம் வாக்காளர்கள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எம்.ஏ.எம். நிலாம்

Comments