இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை; பயங்கரவாதத்தை ஒழிக்க இருவரும் உறுதி | தினகரன் வாரமஞ்சரி

இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை; பயங்கரவாதத்தை ஒழிக்க இருவரும் உறுதி

இந்திய பிரதமர் மோடியுடன்...

தமிழரின் அபிலாஷைகளை இலங்கை நிறைவேற்றுமென மோடி நம்பிக்கை

இந்தியா இலங்கை உட்பட சர்வதேச ரீதியில் பாரிய அச்சுறுத்தலாகவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிராகவும், அதற்கு தக்க பதிலடியை கொடுத்து பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் கூட்டிணைந்து செயற்படுவதற்கு இந்திய மற்றும் இலங்கை தலைவர்கள் இருவரும் உறுதியளித்தனர்.

மேலும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள், பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களிலும் இணைந்து செயற்படுவதற்கும் இவ்விரு நாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே மேற்படி விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி வரவேற்பளித்தார். அங்கு பிரதமர் மஹிந்தவை இந்தியப் பிரதமர் மோடி வரவேற்றார். இதனையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்திய ஜனாதிபதியுடன்...

பிரதமருடன் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன்தொண்டமான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இருநாட்டு பிரச்சினை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இருவரது சந்திப்பில் இந்தியா - இலங்கை இரு நாட்டு உறவின் முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து விசேட ஊடகவியலாளர் மாநாட்டினையும் நடத்தினர். இங்கு பிரதமர் மோடி பேசும்போது,

இலங்கையில் வாழும் தமிழர்களின் கனவுகளை, ஆசைகளை அந்நாட்டு அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். இலங்கை அரசின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய நலன்களின் மீது இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நலன்களையும் இந்தியா கருத்தில் கொண்டுள்ளது.

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்புறவு நாடாக இலங்கை இருந்து வருகிறது. இலங்கையின் அமைதிக்கும், மேம்பாட்டுக்கும் தொடர்ந்து இந்தியா துணை செய்யும். ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிய மரியாதையை, நீதியை, சமத்துவத்தை, அமைதியை இலங்கை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என நம்புகிறேன்.

இருதரப்பு மீனவர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரை மனிதநேயத்துடன் இந்த விடயத்தை அணுக வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் இரு நாடுகளும் கூட்டாக இருந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இரு நாடுகளுக்கும் இருக்கிறது.

இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டு பயங்கரவாதத்துக்குப் பதிலடி கொடுப்போம். பயங்கரவாதத்தை தடுக்கும் முயற்சியில் இருநாடுகளும் இன்னும் கூட்டுறவோடு செயல்படுவோம் என்றார்.

மஹிந்த ராஜபக்ஷ செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்,

இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பயங்கரவாதம் பொதுவான பிரச்சினையாக உள்ளது. இதற்கு எதிரான போரில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படுமென்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளுக்கும் பொதுவான பிணைப்புகள் உண்டு.

பயங்கரவாதம் மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்தியாவும் இலங்கையும் கூட்டாக பயங்கரவாதத்துக்கு எதிராக பதிலடி தருவோம். பயங்கரவாதத்துக்கு எதிரான இரு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்போம். இருநாடுகளிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதித்தேன். பாதுகாப்பு, பொருளாதாரம் விடயங்களில் இருநாடுகளும் ஒத்துழைக்கும்.இலங்கையில் வீட்டு வசதி திட்டங்களுக்கு இந்தியா மேலும் உதவ கோரிக்கை விடுத்துள்ளேன்.

இதை கவனத்தில் எடுத்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் இருநாட்டு பல்வேறு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நல்ல படியாக அமைந்தது என்றார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Comments