சாய்ந்தமருதுக்கு தனி நகரசபை; விசேட வர்த்தமானி வெளியானது | தினகரன் வாரமஞ்சரி

சாய்ந்தமருதுக்கு தனி நகரசபை; விசேட வர்த்தமானி வெளியானது

கல்முனை மாநகர சபையை 2022ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதியன்று கலைப்பதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் 14ஆம் திகதி நள்ளிரவு இந்த விசேட வர்த்தமானியில் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்.

(252ஆவது அத்தியாயமான) மாநகரசபைக் கட்டளைச் சட்டத்தின் 284ஆவது பிரிவின் (அ), (இ), (ஈ) ஆகிய உபபிரிவுகளில் தனக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில் உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் 2001.06.11ஆம் திகதிய 1188/1ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள உத்தரவின் பிரகாரம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையை, அந்த மாநகர சபையின் எல்லைகளை மாற்றியமைப்பதற்கும், புதிய உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்காக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதியிலிருந்து கலைத்துவிடுவதாக அந்த அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அமைச்சரினால் நகரசபைக் கட்டளைச் சட்டத்திற்கமைவான உத்தரவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

(255ஆவது அத்தியாயமான) நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் 2,3மற்றும் 9ஆம் பிரிவுகளுக்கமைய எனக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு உள்நாட்டலுவல்கள், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் ஆகிய நான், இவ் உத்தரவினால்,

01. இதன் உப அட்டவணையில் Iஆது பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள பிரதேசத்தினை அக் கட்டளைச் சட்டத்தின் தேவைகளுக்காக ஒரு நகரம் என வெளிப்படுத்துகிறேன்,

02. அவ்வட்டவணையில் IIஆவது பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை அந்நகரத்தின் நிர்வாக எல்லைகளாக வெளிப்படுத்துகிறேன்:

03. இவ் உத்தரவின் (1)ஆவது பகுதியின் கீழ் வெளிப்படுத்தப்பட்டுள்ள நகரத்திற்கு நகர சபையை உருவாக்கி, அந் நகரசபைக்குரிய பெயரையும் அதன் உத்தியோகபூர்வப் பெயரையும் கீழ்வருமாறு குறித்துரைக்கிறேன்.

சாய்ந்தமருது நகரசபை

04. சாய்ந்தமருது நகர சபையின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்பட வேண்டிய திகதி 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி என்றும் உத்தரவிடுகிறேன்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கீழ்க்காணும் கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய நிலப்பிரதேசம்:

(கேபீ/23) சாய்ந்தமருது 1 (கேபீ/53ஏ) சாய்ந்தமருது 2 (கேபீ/52) சாய்ந்தமருது 3 (கேபீ/52பீ) சாய்ந்தமருது 4 (கேபீ/52ஏ) சாய்ந்தமருது 5 (கேபீ/52சீ) சாய்ந்தமருது 6 (கேபீ/50ஏ) சாய்ந்தமருது 7 (கேபீ/ 50பீ) சாய்ந்தமருது 8 (கேபீ/ 50) சாய்ந்தமருது 9 (கேபீ/ 50சீ) சாய்ந்தமருது 10 (கேபீ/ 47ஏ) சாய்ந்தமருது 11 (கேபீ/ 47பீ) சாய்ந்தமருது 12 (கேபீ/ 47டீ) சாய்ந்தமருது 13 (கேபீ/47ஈ) சாய்ந்தமருது 14 (கேபீ/47எப்) சாய்ந்தமருது 15 (கேபீ/ 47சீ) சாய்ந்தமருது 16 (கேபீ/47) சாய்ந்தமருது 17

பாகம் II

சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாக எல்லைகள்

வடக்கு – கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைப் பாதையின் மத்திய கோட்டினூடாக கடற்கரையிலிருந்து கிழக்குப் பக்கமாக ஆரம்பித்து மேற்குப் பக்கமாகச் சென்று,                                கல்முனை- அக்கரைப்பற்று பிரதான பாதையை அடைந்து, மீண்டும் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான பாதையிலிருந்து, வடக்குப் பக்கமாக ஆரம்பித்து பிரதான பாதையூடாக தெற்குப் பக்கமாக கானடிப்பாதை வரைக்கும் சென்று மீண்டும் கல்முனை – அக்கரைப்பற்றுப் பாதையிலிருந்து கிழக்குப் பக்கமாக ஆரம்பித்த கானடிப் பாதை வழியாக நேராக மேற்குப் பக்கம் செல்கின்ற போது நெல்வயற் காணிகளை ஊடறுத்து வெட்டையாறு சந்திக்கும் இடம் வரைக்கும்,

கிழக்கு : கடல்,

தெற்கு : சாய்ந்தமருது, மாளிகைக்காடு எல்லைப் பாதையின் மத்திய கோட்டினூடாக கடற்கரையிலிருந்து கிழக்குப் பக்கமாக ஆரம்பித்து மேற்குப் பக்கமாகச் சென்று கல்முனை – அக்கரைப்பற்று பிரதான பாதையை நேராக ஊடறுத்து வெட்டையாறு சந்திக்கும் இடம்வரை.

மேற்கு : வெட்டையாறு. என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4உள்ளூராட்சி சபைகள் காணப்பட்டது. அந்த நான்கு சபைகளும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா கொண்டுவந்த பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன.

அதனை மீண்டும் பிரித்து சாய்ந்தமருது பகுதியை ஒரு நகர சபையாக உருவாக்கி தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் நவம்பர் எழுச்சி, டிசம்பர் புரட்சி என பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகரசபைக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாசல் சுயேட்சை குழுவை தோடம்பழம் சின்னத்தில் களமிறக்கி அதில் சாய்ந்தமருதிலுள்ள 06வட்டாரங்களையும் வென்று விகிதாசார முறையில் 03என மொத்தம் 09உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும்.

கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் ஆகியோர் நகர சபை தருவதாக பகிரங்கமாக வாக்குறுதியளித்து ஏமாற்றினர்.

அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 06மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக இருந்தனர்.

சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையை நன்கறிந்த தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் எதிர் அரசியல் சக்திகளின் தடைகளை தகர்த்தெறிந்து தனது அயராத முயற்சியின் காரணமாக சாய்ந்தமருது நகரசபையை மலர செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

கல்முனை மாநகர சபையின் கீழிருந்த சாய்ந்தமருது பிரதேசம் தனியான நகரசபையாக பிரகடனப்படுத்தப்பட்ட அதி விசேட வர்த்தமானி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சாய்ந்தமருது மக்கள் வெற்றிக்களிப்பில் பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாய்ந்தமருது - கல்முனை பிரதான வீதி ஓரிரு மணி நேரம் மக்களால் நிரம்பிக் காணப்பட்டதால் வீதிப் போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

இந்த மகிழ்ச்சியை மக்கள் பட்டாசு கொளுத்தி, வானவேடிக்கைகள் விட்டு, இனிப்பு வழங்கி கொண்டாடி வருவதுடன் இந் நகரசபையை உருவாக்க காரணமாக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுக்கு மகத்தான வரவேற்பை வழங்கி கௌரவிக்க தயாராகி வருகிறார்கள்.

எம்.ஏ.எம். நிலாம், மாளிகைக்காடு குறூப் நிருபர்

Comments