வெளிநாட்டு தூதரகங்களின் வலையமைப்பு கொவிட் -19 நிதியத்துக்கு ரூ.27 மில்லியன் கையளிப்பு | தினகரன் வாரமஞ்சரி

வெளிநாட்டு தூதரகங்களின் வலையமைப்பு கொவிட் -19 நிதியத்துக்கு ரூ.27 மில்லியன் கையளிப்பு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உதவுவதற்காக இலங்கை வெளிநாட்டு தூதரகங்கள் வலையமைப்பின் ஊடாக சேகரிக்கப்பட்ட 27.7 மில்லியன் ரூபாவை வெளிவிவகார அமைச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தது.

இதற்கான காசோலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனாவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.

தாம் வாழும் நாடுகளில் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள நிலையிலும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை சமூகத்தினர், அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகளினால் செய்யப்பட்டுள்ள இந்த அன்பளிப்பு இலங்கையில் கொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உதவுவதற்கான அவர்களது ஆர்வத்தை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

பண உதவிக்கு மேலதிகமாக, மிகவும் தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பெருமளவான வெப்பமானிகள், பரிசோதனை உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்களும் பெருமளவில் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கை வெளிநாட்டு சேவைகள் சங்கமும் அதன் உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பங்களிப்பான 2.8 மில்லியன் ரூபாவை கடந்த மே 06ஆம் திகதி ஜனாதிபதி யிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments