அறிவிக்கப்பட்ட திகதியில் திட்டமிட்டபடி தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

அறிவிக்கப்பட்ட திகதியில் திட்டமிட்டபடி தேர்தல்

பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறுமென தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,வாக்குரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டு மெனவும் தெரிவித்தார். 

தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளதால் இரண்டாவது அலை வராதென்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

எனினும் நாட்டில் எந்தப் பகுதியிலாவது எதிர்வரும்15ஆம் திகதிக்குப் பின்னர் கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்படுமானால் அந்தப்பகுதியின் முடக்கக் காலம் முடிவுறும் வரை அங்கு தேர்தல் நடைபெறமாட்டாது. பின்னரான ஒரு தினத்தில் அங்கு வாக்களிப்பு நடத்தப்படுமென்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதன் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமேற்படலாமென்றும் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதும் தாமதிக்கலாம் என தெரிவித்த அவர், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இறுதி முடிவெடுக்குமெனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில், 

தேர்தல் சட்டவிதிகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தவறிழைப்போர் உடனடியாக கைது செய்யப்படுவரெனவும் அவர் தெரிவித்தார். 

தேர்தல் சட்டத்தை ஆணைக்குழுவோ, தானோ தயாரிக்கவில்லை எனவும் அரசியலமைப்பு விதிகளுக்கமைய அதனை பாராளுமன்றமே தயாரித்து வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் அதனை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, பொது இடங்களில் சின்னம், இலக்கம், படம் என்பவற்றை காட்சிக்கு வைக்க முடியாது. கடந்த காலங்களில் விட்டதவறுகளை இம்முறை செய்ய ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. வேட்பாளர் வாகனம் தவிர்ந்த வேறெந்தமுறையிலும் அவை பயன்படுத்த முடியாது. சுகாதார வழிகாட்டல்களுக்கமைய பிரசாரக் கூட்டங்களை நடத்தும் போது அந்த இடத்தில் மட்டும் சின்னம், இலக்கம், படங்களை உள்ளடக்கிய கட் அவுட், பதாதைகளை வைக்க முடியும். கூட்டம் நிறைவுற்றதும் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். 

தேர்தல் செயற்பாடுகள், பிரசாரங்கள் தொடர்பில் தொடர் கண்காணிப்புகளை முன்னெடுக்க பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விஷேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரசார கூட்டங்கள் நடைபெறும் பிரதேசங்களில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சகலரும் இந்தத் தேர்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும்மெனவும் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள்விடுத்துள்ளார். 

இதேவேளை ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும். 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான வாக்காளர் அட்டைகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையக வட்டாரம் தெரிவித்தது. இந்த வாக்காளர் அட்டையுடன் சுகாதாரத்துறையின் சுகாதார வழிகாட்டல் அறிவுறுத்தல்களைக் கொண்ட பிரசுரமும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட விருப்பதாகவும் தேர்தல் ஆணையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

எம்.ஏ.எம். நிலாம்

Comments