செந்தில் தொண்டமானின் கோரிக்கைள் அனைத்தும் நிறைவேற்றப்படும் | தினகரன் வாரமஞ்சரி

செந்தில் தொண்டமானின் கோரிக்கைள் அனைத்தும் நிறைவேற்றப்படும்

ஹப்புத்தளையில் பிரதமர் உறுதி

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.  

பிரதமரின் இணைப்புச் செயலாளரும் பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமானின் அழைப்பையேற்று ஹப்புத்தளையில் நேற்று நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

பிரதமர் அங்கு மேலும்  கூறியதாவது, இன்று இந்த இடத்தில் ஆறுமுகன் தொண்டமானை நினைவுகூராமல் இருக்க முடியாது. செந்தில் தொண்டமான் கடந்த 12 வருடங்களாக இம் மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். செந்தில் என்பவர் மிகத் திறமையான இளைஞர். அவர் மலையக மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.  

மலையக அரசியல்வாதிகள் பலர் எம்மைச் சுற்றியிருந்தாலும் மலையக மக்கள் தொடர்பில் எப்போதும் பேசுபவர்கள் தொண்டமான்கள் மாத்திரம் தான். செந்திலும் அவ்வாறு மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து எப்போதும் எங்களோடு கலந்துரையாடுபவர்.  

செந்தில் தொண்டமான் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்.  

செந்தில் தொண்டமான் என்னிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் முதல் கோரிக்கை ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டமாகும். அது செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கமைய அனுமதிக்கப்பட்டுள்ளது.  

அதேபோல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமே இதுவரை காலமும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. நாம் அதனை மாற்றியமைத்து மலையகத்தில் வாக்காளர் இடாப்பில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படும். 

பதுளையில் ஏற்கனவே இரண்டு பாடசாலைகளை விஞ்ஞான கல்லூரிகளாக செந்தில் தொண்டமான் தரமுயர்த்தியுள்ளார். மேலும் இரண்டு பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென என்னிடம் கோரிக்கையை முன்வைத்தார்.  

அவரது கோரிக்கைக்கமைய நிச்சயமாக இரண்டு பாடசாலைகள் விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும்.   பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள அனைவருக்கும் அரசாங்க தொழில் வழங்க முடியாது. ஆதலால் இளைஞர், யுவதிகளுக்கு அவர்களின் தேவை உணர்ந்து ஊவா மாகாணத்தில் தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டுமென்ற கோரிக்கைகமைய நாம் எமது ஆட்சிக்காலத்தில் இவற்றை உருவாக்குவோம்.  

இவரின் திறமையையும் நேர்த்தியான அரசியல் பயணத்தையும் கருத்திற்கொண்டு மலையகத்தின் எதிர்காலத்துக்காகவும் அவர் செயற்படுவாரென்ற உறுதியான நம்பிக்கையுடன் அவரது கோரிக்கைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவேன்.  

தேயிலைத் தொழிற்துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

ஏதிர்க்கட்சிகளில் போட்டியிட்டு தேர்தலின் பின்னர் எம்மோடு இணையும் கனவோடு காத்திருக்கும் எந்த மலையக அரசியல்வாதிக்கும் இடமில்லை. மலையத்தின் எதிர்காலம் நோக்கிய எமது பயணம் செந்தில் தொண்டமானுடன் மாத்திரமே தொடரும்.  

இந்தத் தேர்தலில் செந்தில் தொண்டமான் எங்களோடு இருக்கிறார். தேர்தலின் பின்னர் செந்தில் தொண்டமானோடு நாங்கள் இருப்போம் என்பதை கூறிக்கொள்கிறேன் என்றார். 

Comments