சீன, அமெரிக்க இழுபறிக்குள் சிக்கியுள்ளதா தென் பூகோள நாடுகள்? | தினகரன் வாரமஞ்சரி

சீன, அமெரிக்க இழுபறிக்குள் சிக்கியுள்ளதா தென் பூகோள நாடுகள்?

முதலாவது China Comm unications Construction Company (CCCC) மீது அமெரிக்க தடைவிதித்துள்ளது. இந்நிறுவனம் உலளாவிய ரீதியில் 157நாடுகளில் 929க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தென் சீனக்கடலில் உருவாகிவரும் செயற்கைத் தீவுகளுக்கான நிபுணத்துவத்தை கொண்டுள்ள இந் நிறுவனம் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டதுடன் அமெரிக்காவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான கட்டுமானத்துக்குள்ளேயே இலங்கையின் தலைநகரிலுள்ள கொழும்புத் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுவரும் நிதி நகரத்திற்கான பணியினை மேற்கொள்ளும் நிறுவனமாகவுள்ளது. அமெரிக்காவின் தடை கொழும்புத் துறைமுகக் கட்டுமானத்தை பாதிக்கும் என்ற வாதம் எழுந்துள்ளது. 24சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க விதித்துள்ள தடையின் கீழ் அமெரிக்க நிறுவனங்கள் எவையும் தடைவிதிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியில் தொடர்புகளை வைத்துக் கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

இதில் பாதிப்பு எங்கே நிகழுகிறது என்றால் கொழும்புத் துறைமுகக் கட்டுமானத்தைப் போன்று ஆசியாவின் கட்டுமானத்துறையில் உப ஒப்பந்தக்காரர்களாக அல்லது கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை விநியோகிப்பவர்களாக அமெரிக்க நிறுவனங்கள் அல்லது அமெரிக்காவுடன் தொடர்புபட்டுள்ள நிறுவனங்கள் செயல்படுவதே. 

இது தொடர்பில் சீனாவின் வெளிவிவகாரத் துறை விடுத்துள்ள அறிக்கையில் சீனாவின் 24நிறுவனங்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தடை அனைத்துலக விதிமுறைகளை மீறும் செயலாகும் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கருத்தினை இலங்கைக்கான சீனத் தூதரகமும் வெளிப்படுத்தியுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கும் கருத்து கவனத்திற்குரியதாகும். அமெரிக்காவின் தடை சீனாவின் ஆசியா மீதான நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனவும் குறிப்பாக இலங்கை பிலிப்பைன்ஸ் மியான்மார் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பாரிய நெருக்கடி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் சீனாவின் ஓரே சுற்று ஓரே பாதை எனும் திட்டமிடல் பாதிக்கவைப்பதற்கான உலகளாவிய திட்டமிடலாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேநேரம் அமெரிக்காவின் அணுகுமுறையானது சீனா பக்கம் ஆசிய நாடுகள் முழுமையாகச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கு வலுவான காரணங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது. 

குறிப்பாக சீனாவின் உலக நாடுகளுடனான கொள்கையானது win-win உபாயத்தினைக் கொண்டதாகும் அத்தகைய உபாயத்தினை மிக நீண்ட காலமாக சீனா கடைப் பிடித்து வருகிறது. இது பொருளாதார ரீதியில் ஆசிய நாடுகளுக்கு இலாபகரமானதாக அமைந்திருப்பதனால் ஆசிய நாடுகள் அதிகம் சீனாவுடன் கைகோா்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி சீனாவின் பிறிதொரு அணுகுமுறையாக மனித உரிமையை பொருளாதார தடையை மனிதாபிமானச் சட்டத்தை ஒரு பொறியாக ஆசிய நாடுகள் மீது திணிக்கும் நடைமுறையை கொண்ட நாடாக இல்லாமை கவனத்திற்குரியதாகும். இவை பெருமளவுக்கு ஆசிய நாடுகளது ஆட்சியாளரது இருப்பினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஏறக்குறைய ஒரு இராணுவ பின்புலத்தையும் தனிக்கட்சி ஆதிக்கத்தையும் கொண்ட அரசாங்கத்தை கொண்டிருக்கும் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகள் சீனாவின் பிரசன்னத்தை அங்கீகரிப்பதுடன் தனித்துவமான அரசியல் வடிவத்தை ஏற்படுத்தும் முனைப்பில் காணப்படும் போக்கினை கடந்த காலத்தில் அவதானிக்க முடிந்தது. அதனால் மீளவும் அத்தகைய ஆட்சியாளர்களும் அவர்களது அரசியல் வாரிசுகளும் பதவியை நோக்கி காத்திருப்பதுவும் ஆட்சியில் அமர்வதுமான சீனாவின் பக்கம் நோக்கிய போக்கு ஒன்று ஏற்பட வாய்ப்பு அதிகமுண்டு. 

சீனா மீதான அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் அந்நாட்டை இருதுருவ உலக ஒழுங்குக்கு அரசியலுக்குள் இழுத்துவருவதாகவும் அதற்கான அணியினை தோற்றுவிப்பதுமாக அமையும். ஏற்கனவே சீனா தயார் செய்துள்ள அணியின் கட்டுமானம் கொரோனா நிலையால் பலவீனப்பட்டிருந்த நிலை தற்போது மாற்றம் அடைந்து கொண்டு நகர்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்தில் இருப்பதனால் உலக நாடுகள் அதன் பக்கம் சாய வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்காவின் அணியில் இருக்கும் இந்தியாவே தற்போது சீனாவுக்கு பெரும் நெருக்கடி மிக்க சக்தியாகக் காணப்படுகிறது. அதனாலேயே சீனா பக்கம் உள்ள நாடுகள் இந்தியாவுடன் இணைவதனூடாக அமெரிக்க நட்பு வட்டத்துக்குள் இழுக்கப்படுகின்றன. இதில் ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது நேரடியான விளைவுகளையும் நெருக்கடியையும் இலங்கை அதிகம் கொண்டுள்ளது. காரணம் இலங்கை இந்தியாவின் அயல் நாடாகவும் பாதுகாப்பு வேலியில் அமைந்துள்ள நாடாகவும் அமைந்திருப்பதனால் அதிக நெருக்கடியைக் கொண்டுள்ளது. இதனாலேயே சீனத் தூதரகம் அமெரிக்காவுக்கான பதிலை இலங்கையிலிருந்து முதன்மைப்படுத்தியுள்ளது. அதன் அரத்தம் சீனாவின் பக்கம் இலங்கை உள்ளது என்பதை அமெரிக்காவுக்கு உணர்த்துவதன் மூலம் இந்தியாவுக்கு அறிவிப்பினை கொடுப்பதற்கு என்பதை வெளிப்படுத்தவேயாகும்.  

எனவே சீனா மீதான அமெரிக்காவின் தடை அமெரிக்காவைப் பலப்படுத்தும் அதே வேளை அதற்கு எதிர்முனையிலுள்ள சக்தியான சீனாவை நோக்கியும் பெரும் எழுச்சியை ஏற்படுத்த முனையலாம். அதனால் இரு துருவ உலக ஒழுங்கு விரைவாக தயாராக வாய்ப்புள்ளது. 

கலாநிதி
கே. ரீ.கணேசலிங்கம்  

Comments