அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயார் | தினகரன் வாரமஞ்சரி

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயார்

பசீலுக்கு நாம் எதிர்ப்பில்லை என்கிறார் இராதாகிருஷ்ணன்

இந்த நாட்டை  அபிவிருத்தி செய்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு  நிலைமையை அரசாங்கம் உருவாக்குமானால் அத ற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு  வழங்க தயாராக இருக்கின்றோமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்  தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பசில் ராஜபக்ச அமைச்சராக  வந்தாலும் அல்லது வேறு ஒரு இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் அமைச்சராக  இருந்தாலும் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. 

ஹற்றனில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர், 

இன்று புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு அரசாங்கம்  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதற்காக அரசாங்கம் ஒன்பது பேர் கொண்ட  குழுவை நியமித்துள்ளது.இந்த குழுவில் மலையக மக்களை  பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவரையும் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

20ஆவது அரசியலமைப்பு  சீர்திருத்தத்தில் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக பேசப்படுகின்றது.என்னை  பொறுத்தளவில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக  திறமையானவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.நாம் திறமையானவர்களை ஒதுக்கி  வைத்துவிட்டு இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. 

பசில் ராஜபக்ச  அமைச்சராக வருவாராக இருந்தால் அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும்  இல்லை.காரணம் அவர் திறமையாக செயற்படக்கூடிய ஒரு நிர்வாகி. கடந்த காலத்தில்  அதனை அவர் நிரூபித்திருக்கின்றார். 

எனவே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால்  திறமையானவர்களை ஒன்றிணைத்து நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும். இன்று  உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக எல்லா நாடுகளிலும்  பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு  அரசாங்கத்திடமே இருக்கின்றது.அதற்காக அனைவரையும் இணைத்துக் கொண்டு செயற்பட  வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா தினகரன், ஹற்றன் சுழற்சி நிருபர்கள் 

Comments