சபரிமலை அனுஷ்டானங்கள்; ஐயப்பதாச குருக்கள் விளக்கம் | தினகரன் வாரமஞ்சரி

சபரிமலை அனுஷ்டானங்கள்; ஐயப்பதாச குருக்கள் விளக்கம்

கொரோனா தொற்று ஆட்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் சபரிமலை அனுஷ்டானங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென்பது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு (24) மட்டக்குளி சபரிமலை சாஸ்தாபீடத்தில் நடைபெற்றது. 

சபரிமலை குருமுதல்வரும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் விளக்கமளித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மகரஜோதிப் பெருவிழா அகில இலங்கை சபரிமலை சாஸ்தாபீடத்தினால் 38ஆவது ஆண்டு நிறைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கின்ற கொவிட்-19வைரஸ் காரணமாக சபரிமலை செல்ல முடியுமா? முடியாதா? என்ற ஐயப்பாடு எல்லோரிடமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் வழமையாக முத்திரமாலை அணிந்து, கடும் விரதமிருந்து மலையாத்திரை செல்லுகின்ற அனைத்து ஐயப்ப பக்தர்களும் அறிந்துகொள்ள வேண்டியது. சர்வதேச இந்துமத குருபிடம் அகில இலங்கை சபரிமலை சாஸ்தாபீடத்தின் மூலமாக இங்கு மகரஜோதி பெருவிழா வழமைபோன்று மாலை அணிந்து விரத பூஜைகள், வழிபாடுகள் அனைத்தும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மாலை அணிந்தால் கட்டாயம் மலைக்குப்போகத்தான் வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக இருந்தாலும் நடைமுறையிலே இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிலே இந்த ஐயப்ப காலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து கொள்கின்றனர். அவ்வாறான எல்லோருக்கும் மலைக்குப் போகும் பாக்கியம் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் அந்தந்த இடங்களில் விரத பூர்த்தியை செய்துகொள்வர். 

பொதுவாக ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வரக்கூடிய சூழல் இல்லாத காரணத்தினால் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். விரதமிருப்பவர்கள் விரத முத்திர மாலை அணிந்து கொள்ளலாம். அதில் எந்தவித தவறோ, தோஷங்களோ இல்லை.

மாலை அணிந்து பூஜைகளை செய்யலாம். சபரிமலைக்கு செல்கின்றவர்கள் கன்னிமூல கணபதியை வழிபாடு செய்வது வழமை. அங்கிருந்த காட்டுப்பாதையினூடாக நடந்து செல்வது அப்போது இருமுடி கட்டிச் செல்வதெல்லாம் நடைபெறும். இங்கே சாஸ்தாபீடத்தில் இருமுடி கட்டவேண்டிய அவசியம் ஒன்றும் கிடையாது.   பூஜைகள், வழிபாடுகள், பிராரத்தனைகள், பஜனைகளை மேற்கொண்டு உலகெல்லாம் பரவியிருக்கின்ற கொரோனா என்கின்ற வைரஸ் நோய் வெகுவிரைவில் அகன்று எல்லா மக்களும்  சுகமாக வாழவேண்டும் என்கின்ற வகையில் கூட்டு பஜனைகளை செய்யலாம். 

வழமையான சங்காபிசேகங்கள், சிறப்பான உற்சவங்கள், மலையாள பூஜைகளை அகில இலங்கை சபரிமலை சாஸ்தாபீடத்தில் 38ஆண்டுகள் நிறைவுபெற்றது போல இந்த ஆண்டும் அந்த பூஜைகள் எல்லாம் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

நவம்பர் மாதம் 16ஆம் திகதி முத்திர மாலை அணிந்து கொள்ளும் நிகழ்வு ஆரம்பிக்கின்றது. மலைக்குப் போக இன்னும் மூன்று நான்கு மாதங்கள் இருக்கின்றது. குறிப்பாக ஜனவரி மாதத்தில்தான் மலைக்குச் செல்வது வழக்கம். அப்படி மலைக்குச் செல்லும் பாக்கியம் கிடைதால் நாம் மலைக்கு செல்லலாம். இல்லையென்றால் இங்கேயே விரத பூர்த்தியை செய்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து பூர்த்தி செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை தினகரன் நிருபர் 

Comments